பணத்தில் பெண்களுக்கு இடமிருக்கா?
ஆணும், பெண்ணும் நாணயத்தின் இருபக்கங்கள் என்று சொல்பவர்களிடம் நாணயத்தில் பெண்ணுக்கு இடம் இருக்கிறதா? என்றால் யோசிக்காமல் இல்லையென்றே பதில் வரும்.
முதல் பெண் ஜனாதிபதியைக் கொண்ட நாடு என்ற பெருமை இலங்கைக்கு இருந்தும் கூட நாணயத்தில் எந்தவொரு பெண்ணின் உருவத்திற்கும் இடம்கொடுக்கப்படவில்லை. நடனமாது, தொழிலாளர் பெண் போன்ற உருவங்கள் பொதிக்கப்பட்டிருந்ததே தவிர, நாட்டை ஆண்டவர்கள், சமூக சேவையாளர்கள், கல்விமான்கள் என குறிப்பிட்டு கூறும் படி எவரது உருவமும் இடம்பிடிக்கவில்லை.
ஆனாலும் இதற்கு விதிவிலக்காக சில நாடுகள் பெண்களின் உருவங்களை நாணயத்தில் பதித்துள்ளன. இருப்பினும் அவை விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே இருக்கின்றது. அவையும் நிரந்தரமில்லை.
இவ்வாறிருக்க இந்த மகளிர் தினத்தில் கனடிய மத்திய வங்கி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது கனடாவில் போற்றுதலுக்குரிய பெண்களின் உருவத்தை அந்நாட்டு நாணயங்களில் பொறிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு மத்திய வங்கியால் அச்சிடப்படும் கனடிய நாணத்தாள்களில் கனடிய பெண்களின் உருவம் பொறிக்கப்படவுள்ளது. இதற்காக பொது மக்கள் ஆலோசனை நடத்திவருகிறது.
கனடிய நாணயத்தாள்களைப் பொறுத்தவரையில் சுமார் 150 வருடங்களாக எந்தவொரு பெண்ணின் உருவமும் பொறிக்கப்படவில்லை.
இந் நாணயத்தில் பெறிக்கப்படும் பெண்கள் கனடாவில் பிறந்திருக்க வேண்டும். அல்லது குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தல் அல்லது உயர் அந்தஸ்த்தை பெற்றிருத்தல் அல்லது கனடாவில் சேவையில் இருந்திருக்க வேண்டும். தலைசிறந்த தலைமைத்துவம் கொண்டிருப்பதோடு, மறைந்து சுமார் 25 ஆண்டுகளை கடந்திருக்க வேண்டும் என பல கண்டிஷன்களையும் அவிழ்த்துவிட்டுள்ளது.
இது இப்படியிருக்க ஆனானப்பட்ட அமெரிக்காவே 2020ஆம் ஆண்டில் அதுவும் பத்து டொலர் தாளில் பெண் ஒருவரை இடம்பெறச் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த டொலர் வெளியிடப்பட்வுள்ளது.
ஆனால் அமெரிக்காவுக்கு முன்னரே சில நாடுகளில் நாணயங்களில் பெண்கள் இடம்பிடித்திருக்கிறார்கள்.
ஸ்வீடனின் மூன்று தாள்களில் பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். நடிகையான க்ரேடா கார்போ, எழுத்தாளர் ஆஸ்ட்ரிட் லிண்ட்க்ரென், பாடகி பிர்கிட் நில்ஸோன் ஆகியோர்தான் அந்த மூன்று பெண்கள்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை நாணயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அந்தஸ்த்து. ஒவ்வொரு நாணயத்திலும் ஒரு பக்கத்தில் பெண்ணும் மற்றொரு பக்கத்தில் ஆணும் இடம்பெற்றிருப்பார்கள். ஒரே ஒரு நாணயத்தில் மட்டும் ஒரு பக்கத்தில் அரசி எலிசபத்தும் மற்றொரு பக்கத்தில் அதன் பாராளுமன்றக் கட்டிடமும் இடம்பெற்றிருக்கும்.
நோர்வேயில் புழக்கத்திலுள்ள ஐந்து நாணயத்தாள்களில் இரண்டில் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
டென்மார்க் அண்மையில் புதிய நாணயத்தாள்களை வெளியிட்டது. இதில் மனிதர்களுக்கு இடமில்லை. ஆனால் இதற்கு முந்தைய ஐந்து தாள்களில் சரிசமமாக இரண்டில் ஆண்களும், இரண்டில் பெண்களும் இடம்பெற்றிருந்தனர். ஒன்றில் ஒரு பக்கம் ஆணும் மற்றைய பக்கம் பெண்ணும் இடம்பெற்றிருந்தனர்.
செக் குடியரமை பொறுத்தமட்டில் மூன்று தாள்களில் இரண்டில் பெண்களின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒருவர் எழுத்தாளர் போஸெனா நெம்கோவா. மற்றையவர் பாடகி எம்மி டிஸ்டின்.
டொமினிகன் குடியரசின் இரண்டு தாள்களில் நான்கு பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ரஃபேல் ட்ருஜில்லோவின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய மிராபால் சகோதரிகள் மூவர் இதில் அடங்குகின்றனர்.
இன்னும் சில நாடுகளில் எலிசபத்தின் படங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் அரசி என்ற வகையில் கொடுக்கப்படும் அங்கிகாரம். இவை நிரந்தரமற்றவை.
இப்படி வரலாறுகள் தொடர்ந்தாலும், இனிவரும் காலங்கள் அவற்றையெல்லாம் ஞாபகப் படுத்துமா என்பது சந்தேகமே. வல்லரசு நாடுகளே தன் நாட்டு நாணயத்தில் சம அந்தஸ்த்தை பெண்களுக்கு வழங்க இத்தனை காலம் எடுக்குமானால் இலங்கை போன்ற நாடுகளுக்கு இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ...
No comments:
Post a Comment