ஆளுமைப்பெண்
இன்னும் நிறைய சாதிக்கனும்
இளம்பெண்ணின் அறை எப்படியிருக்கும்?
அறை முழுவதும் கட்டில், பீரோ, நாற்காலி, மேசை, மேக்கப் ஐட்டம்கள், பொம்மைகள் ....
ஆனால் விருதுகள், மெடல்கள், சான்றிதழ்கள் என்றுநிரம்பிக்கிடக்கிறது. கமலினியின் அறை. ஒருவரால் இத்தனை விருதுகளை எப்படி வெல்ல முடிந்தது? என்று பார்ப்பவர்கள் வாயடைத்துப் போவர்கள்.
இத்தனை விருதுகளுக்கும் சொந்தக்காரி வெறும் 20 வயதேயான கமலினி மகேந்திரன். மெய்வல்லுனர் போட்டிகளின் மூலம் இத்தனை கிண்ணங்களையும் கேடயங்களையும் பதக்கங்களையும் அள்ளிக் குவித்து பதக்கங்களால் ஜொலித்து கொண்டிருக்கிறார் கமலினி மகேந்திரன்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மாணவியான கமலினி மாகாண மட்டத்தில் நடந்த மெய்வல்லுனர் போட்டியில் 100, 200 மீற்றர் ஓட்டம் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்றதோடு, நீளம் பாய்தல் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
கமலினியின் சாதனையைப் பாராட்டி கல்லூரி சமூகம், ஊர் மக்கள், பழைய மாணவர்கள், வட்டு இந்து வாலிபர் சங்கம் இணைந்து அண்மையில் விழா எடுத்தனர். இவ்விழாவில் கமலினி இதுவரையில் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வெற்றிக் களிப்பு ஒருபுறம் இருந்தாலும் தொடர் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டுள்ளார் கமலினி கூறுகையில்;
2010ஆம் ஆண்டு பங்குபற்றி 400 மீற்றர் ஓட்டப்போட்டிதான் எனது இத்தனை வெற்றிகளுக்குமான அத்திவாரம். கடந்த ஐந்து வருடங்களாக மெய்வல்லுனர் போட்டிகளில் (ஓட்டம், நீளம் பாய்தல்) பங்குபற்றி 60 இற்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சான்றிதழ்களையும், கிண்ணங்களையும் பெற்றுள்ளேன்.
இப்போது எனது வெற்றியை கொண்டாடுவதற்கு அம்மா உயிரோடு இல்லை. அப்பா, இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் இவர்கள்தான் எனது ஊக்கம். நான் பெற்ற ஒவ்வொரு வெற்றியிலும் இவர்கள் இருக்கிறார்கள்.
சின்ன வயசிலிருந்தே விளையாட்டில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், படிப்பையும் விட்டுக் கொடுக்கவில்லை. இரண்டையும் என்னால் முடிந்தவரை சமப்படுத்தியிருக்கிறேன். ஏ.எல். முடித்துவிட்டு சப்ரகமுவ பல்கலைக்கழக தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறேன். தேர்வு செய்திருப்பதும் விளையாட்டு சம்பந்தப்பட்ட பாடநெறிதான். தொடர்ச்சியாக எனது விளையாட்டு மீதான ஆர்வத்தை தனிக்க இது உதவுமென நினைக்கி றேன்.
எனது வெற்றிக்காக சில தொண்டு நிறுவனங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் உதவியோடுதான் போட்டிகளில் பங்குபற்று கிறேன். தேசிய ரீதியில் எனது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். விளையாட்டில் இன்னும் நிறைய சாதிக்கனும். என்னுடைய திறமையை தேசிய ரீதியில் நிரூபிக்கனும். இதுதான் எனது கனவு என்றார் நம்பிக்கை நிறைந்த தொனியில் கமலினி.
இலங்கை விளையாட்டுத்துறையில் சிம்ம சொப்பனமாக கமலினி திகழ வேண்டுமென அழகியும் வாசகர்கள் சார்பில் பாராட்டுக்களை பகிர்கின்றது.
No comments:
Post a Comment