நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள் பெண்கள்!
ஆய்வு தரும் சாட்டையடி !
ஆண்கள் நிறுவனங்களில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பின்னால் வெற்றியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெண்கள்
இந்த காலத்தில பெண்களுக்கு என்னப்பா குறைச்சல்? எல்லாத்திலையும் பங்கு கேட்டு ஆண்களுக்கு நிகரா வந்திட்டாங்க. உலகம் முழுவதும் சுத்துறாங்க. எங்களை மாதிரி உடுத்துறாங்க. எல்லாத் துறையிலையும் கால் பதிச்சிட்டாங்க. இப்போ நாங்கதான் ஓரம் கட்டப்படுகிறோம் என்று புலம்பும் ஆண்களுக்கு இன்னும் ஒரு விசயம் புரியாமலேயே இருக்கின்றது.
பெரும்பாலும் ஆண்கள்தான் தலைமை, அவர்களுக்கு கீழ்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பது.
எல்லாத்துறைகளிலும் பெண்கள் வியாபித்தாலும் உலகம் முழுதும் இருக்கும் நிறுவனங்களில் பத்தில் மூன்று நிறுவனங்களில் நிர்வாக பதவிகளிலோ, உயர்மட்ட பதவிகளிலோ பெண்கள் இல்லை என்கிறது ஆய்வு.
அண்மையில் வொஷிங்டனில் உள்ள சர்வதேச பொருளியல் கல்விக்கான பீட்டர்சன் நிறுவனம் உலகளாவிய ரீதியில் மொத்தம் 91 நாடுகளில் தலைமைப் பதவியில் பெண்கள் என்ற தலைப்பில் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவே இது.
அதேநேரம் 30 சதவீத பெண்களைக் கொண்டிக்கும் நிறுவனங்கள் ஆறு சதவீதம் அதிக இலாபத்தைப் பெறுவதாகவும் நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் பெண்களின் இருப்பு ஒட்டுமொத்த நிறுவன வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையிலேயே பெண் தலைமை வகிக்கும் குடும்பமானாலும் சரி, நிறுவனமானாலும் சரி அதன் வளர்ச்சியில் முழு மூச்சாக நின்று செயற்படுவார்கள். அதுதான் பெண்களின் வெற்றி.
பெரும்பாலும் ஆண்கள் மேலாளராக விளங்கும் நிறுவனங்களிலும் அவரின் வெற்றியில் பெரும்பாலும் பங்களிப்பது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்.
ஒரு ஆண் தான்தான் வல்லவன் என நினைத்துக் கொண்டிருந்தாலும் மறைமுகமாக பெண்களே வல்லவர்களாகின்றார்கள்.
கடினமான உடல் உலைப்பைத் தவிர மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆண்கள் சோம்பேறிகள். இதனால்தான் சில வேலைகளை பெண்களுக்கு மட்டும் என்று எழுதப்படாத விதியாக ஒதுக்கி விடுகின்றனர்.
இது இவ்வாறிருக்க கடந்த வருடம் சம வயதுடைய ஆண், பெண் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வொன்றின் படி மொழியைக் கையாளுவதில் ஆண்களைவிடப் பெண்கள் திறமை பெற்றிருப்பது நிரூபணமாகியுள்ளது.
ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் சீக்கிரமாகப் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் சொல் வளமும் விரைவாக அதிகரிக்கிறது. அவர்களுடைய பேச்சில் புதிதாகக் கற்றுக்கொண்ட சொற்கள் அதிகமாக இருக்கும். ஒரு விஷயத்தைப் பற்றிப் பல கோணங்களில் வர்ணிப்பது, வேகமான கலந்துரையாடல், சூசகமான செய்திப் பரிமாற்றம், இரட்டை அர்த்தமுள்ள சொற்களை பெண்கள் அதிக அளவில் புரிந்து கொள்கிறார்கள். ஒரே பொருளுள்ள பல சொற்கள், பல்வேறு பொருளுள்ள ஒரு சொல் என்பவற்றை கையால்வதிலும் பெண்களே வல்லவர்கள். இதனாலேயே வார்த்தை விளையாட்டு, குறுக்கெழுத்துப் போட்டி என்பவற்றில் பெண்கள் வெற்றி பெறக் காரணம். இத்தகைய திறமை வளர்ந்த பின்னரும் நீடிக்கிறது.
அத்தோடு, வெவ்வேறு மொழிகளில் மாறி மாறிப் பேசுவதிலும் பெண்களே திறமைசாலிகள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறமை படைத்தவர்கள். பல நுட்பமான வேலைகளை செய்வதற்குத் தேவையான பொறுமையும் கவனக் குவிப்புத்திறனும் பெண்களுக்கே உரியது.
இவ்வாறு இருப்பினும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்றாலும் அது மறைமுகமாக மறுக்கப்பட்ட ஒன்று. ஆண் தலைமையின் கீழ் பணிபுரிவதில் இருக்கும் திருப்தி, சந்தோஷம் பெண் தலைமையிடத்தில் பணியாற்றுவதில் இருப்பதில்லை. ஆண்களுக்கு அத்தனை கௌரவக் குறைச்சல். ஆணுக்கு கொடுக்கும் மரியாதை பெண்ணுக்கு கிடைப்பதில்லை. தன் மேலாலர் என்பதைத் தாண்டி கோவலம் பெண்தானே என்றுதான் பார்க்கப்படுகிறது.
ஆக பெண் தலைமையின் முக்கியத்துவம், திறமையான பெண் தலைமைகளை ஒதுக்கும் நிலை உண்மையிலேயே தவறான உதாரணம் என்பதை விளக்குகிறது பீட்டர்சன் நிறுவனத்தின் ஆய்வு!
No comments:
Post a Comment