Sunday, March 27, 2016

பூசி மெழுகாமல் உண்மையைச் சொல்வதால்

பூசி மெழுகாமல் உண்மையைச் சொல்வதால் சர்ச்சைக்கு ஆளாகி நிற்கிறேன்!
இலங்கைத் திரைப்பட இயக்குநர் சுமதி!


இரண்டு மணிநேரம் தியேட்டரில் அமர்ந்து பார்த்து விசில் அடித்து, கைதட்டிவிட்டுப் போவதற்காக நான் படம் செய்யவில்லை.  எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக் கொள்கிறோமா? அவ்வாறுதான் எனது படைப்புகளும். 


 ஒரு திரைப்படத்தின் ஆணி வேர் இயக்குநர்தான். நிறைய சுவாரஸ்யங்களையும், சவால்களையும் உள்ளடக்கிய இயக்குநர் பொறுப்பு தமிழ்த்திரையுலகத்தைப் பொறுத்தவரை ஆண்களின் கைகளில் மட்டுமே நீடித்துக் கொண்டிருக்கிறது... அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது, பெண்களும் இயக்குநராகலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் சினிமாத்துறையில் வளர்ச்சிக்கான பாதையை நோக்கி அடியெடுத்துவரும் இலங்கையை பொறுத்தவரையில் பெண் இயக்குநர் என்பது அத்தனை சாதாரணமானதல்ல,.

இலங்கைப் பெண் இயக்குநர் சுமதி.
அடிப்படையில் விரிவுரையாளர், கவிஞர், எழுத்தாளர், நாடக செயற்பாட்டாளர்  என பல முகங்களைக்  கொண்ட இவர் பிரளயம், ஒரேஞ்சஸ் ஆகிய இரு குறுந்திரைப்படங்களை எழுதி இயக்கியவர்.

இன்சேர்ச் ஒஃப் த ரோட் ஆவணப்படத்தின் பிரதியாளராகவும் செயற்பட்டுள்ளார். க்ரி கர்ணாட்டின் நாகமண்டலம்நாடகத்தை தமிழுக்கு மொழிபெயர்த்ததோடு, மௌனத்தின் நிழல்,   சுப பயணங்கள் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி, நடித்துள்ளார்.

முதன் முதலில் மலையக சமூகம் சார்ந்ததொரு படைப்பை உருவாக்கிய பெருமையும், அதில் எழுந்த சர்ச்சையும் இவரையே சாரும். இந்நிலையில் அண்மையில் பாடு அம்மா பாடு என்று ஒரு படத்தையும் திரையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அழகி இதழிலுக்காக இயக்குநர் சுமதியை சந்தித்தோம்.

சுமதி என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் சுமதி என்கிற அளவுக்கு உங்கள் படைப்புகள் எல்லாமே சர்ச்சையைக் கிளப்புகின்றனவே?
நான்  வேண்டுமென்று சர்ச்சையை தோற்றுவிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போதுமே அவர்களின் நல்ல பக்கத்தை மட்டுமே காட்ட வேண்டும். எதிர்மறையான விடயங்களை காட்டும்போது சர்ச்சையாக பார்க்கிறார்கள். தங்களுக்குத் தாங்கள் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு வாழ்கிறார்கள். அதை உடைத்தெறியவே நான் விரும்புகிறேன். எதையும் ஆழமான கண்கொண்டே பார்க்கிறேன். அதிலேயே என் கவனம் முழுவதும் இருக்கிறது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை இதுவரையில் சிந்தித்தது இல்லை. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டால் நல்லவர்கள் என்கிறார்கள். மாற்றுக்கருத்தை முன்வைத்தால் அது சர்ச்சையாக பார்க்கப்படுகின்றது. நான் என்ன செய்வது?

சினிமா உலகை நோக்கி திரும்பியது எப்படி?
ஏற்கனவே நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்ததால் சினிமாவிற்குள் புகுவது சிரமமாக இருக்கவில்லை. ஒரு 14 வயதிருக்கும் ஞஞுணாணாஞுணூ ண்டடிணீ ஞணிணாணாணிட் என்ற படம் நாடகத்துரையிலும் பயிலும் மாணவர்களுக்காக காண்பிக்கப்பட்டது. அப்போது நான் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணில் தெரிகிறது. அப்போதெல்லாம் நான் சொல்லிக்கொண்டிருப்பேன் நான் இப்படித்தான் படம் செய்ய வேண்டுமென. படிப்பை முடித்ததோடு சினிமாத்துறைக்குள் புகுந்துவிட்டேன். இன்று குறும்படம் என்று ஒரு கலாசாரம் எல்லோருக்குள்ளும் ஆட்டிப்படைக்கிறது. அது கவிதை எழுதுவது போன்று மாறிவிட்டது. அப்போது அப்படி அல்ல. நினைத்ததும் படம் செய்துவிட முடியாது. நீண்டகாலம் ஒரு இயக்குநரிடம் பணியாற்ற வேண்டி ஏற்பட்டது. அதற்கு பிறகு நானாகவே முன்வந்து படம் எடுக்க முயன்றேன். எனக்கு கிடைத்த ஒத்துழைப்பு இயக்குநராக்கியது.

இந்தத் துறையில் காலடி வைக்கும் போது இருந்த சுமதிக்கும், இப்போது இருக்கும் சுமதிக்கும் இடையிலான ஒற்றுமை என்ன?    வேற்றுமை என்ன?
ஒற்றுமை:- நான் எப்போதும் சமுதாய விழுமியங்களை எதிர்க்கும் படைப்புகளை செய்வதைத்தான் விரும்புகிறேன். அந்த நிலையிலிருந்து இன்றும் மாறவில்லை.
வேற்றுமை:- இப்போதெல்லாம் ஒரு கதை எழுதுவது என்று அமர்ந்தாலும் முதலில் காட்சிகள்தான் கண்முன் வந்து நிற்கின்றது. கதை எழுத முடிவதில்லை. அத்தோடு  தமிழ் சமூகத்திடையே சினிமா சார்ந்த முதிர்ச்சியான விமர்சனங்கள் இல்லை.                                                                   சினிமாவுக்கென இலக்கணம், ஆத்மா இருக்கிறது.  விமர்சகர்களுடன் கலந்துரையாடுவது கடினமாக இருக்கிறது. இப்போது தனிமையை உணர்கிறேன்.

உங்கள் படைப்புகள் யாருக்காக படைக்கப்படுகின்றன? 
மக்களுக்காகவே படைக்கிறேன்.

அப்படியானால் அவர்களின் ரசனைக்கு தீனிப்போடும் வகையில் அமைகின்றதா?
மக்களின் ரசனை என்று எதைச் சொல்கின்றீங்கள்  என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டு மணிநேரம் தியேட்டரில் அமர்ந்து பார்த்து விசில் அடித்து, கைதட்டிவிட்டுப் போவதற்காக நான் படம் செய்யவில்லை.  எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக் கொள்கிறோமா? அவ்வாறுதான் எனது படைப்புகளும். படங்களை பார்த்து எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை என்றவர்களும் அதைப்பற்றி விமர்சிப்பதை பார்த்திருக்கிறேன். விமர்சிக்கும் அளவு ஏதோ விளங்கியிருக்கிறதுதானே? படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கேள்விகள் எழவேண்டும். அவர்களின் உண்மை நிலை புரிய வேண்டும், அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது எதிர்பார்ப்பு.

பெண்கள் அதிகம் இயக்குநராக வர முடியாமைக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? 
ஆண்களால் ஆளப்படும் உலகில் இயக்குநர் மட்டுமல்ல எல்லாத்துறை சார்ந்த பெண்களும் முட்டிமோதியேதான் வாழ  வேண்டும்.  நடிப்பதற்கே பெண்கள் முன்வருவது சிரமமாக இருக்கிறது. இரவிரவாக காட்டு வழியே திரியவேண்டியிருக்கும், பொதிகளை சுமக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் எமது சமூகம் இடம்கொடுக்குமா என்றால் சந்தேகமே. சிலருக்கு உடல்,  மனம் ஒத்துழைப்பதில்லை. ஆண்கள் விடும் பகிடி கூட ஒரு பிரச்சினைதான். இதை எதிர்த்து போராட  வேண்டியிருக்கிறது. பெற்றோரை ஒரு கட்டத்திற்கு மேல் சமாளித்து விடலாம். திருமணம் முடித்துவிட்டால் இன்னும் சுமைதான். இதை எதிர்கொள்வதை பெண்கள் கஷ்டமான காரியமாக பார்க்கிறார்கள். இதனாலேயே ஆண்களைப்போல் பெண்கள் ஒரு துறையில் நிலைத்து நிற்பதில்லை.

ஒரு பெண் படைப்பாளியாக இச்சமூகத்தில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? ஆரம்ப கட்டங்களில் எப்படி இருந்தது?
எனக்கு பல உலகங்கள் இருக்கின்றன.  யுனிவர்சிட்டி என்னுடைய வீடு போன்றது. அங்கு எனக்கு முழுமையான வரவேற்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் வன்முறைகளுக்கு எதிரானவர் என்ற வகையில் மக்களோடு ஜீவிப்பது கஷ்டமாக இருந்தது. ஜனநாயக ரீதியான அரசியலோடு சம்பந்தப்பட்டதாகவே எனது படைப்புகள் அமையும்.  தற்போது என்னைப்பற்றி சில புரிதல்கள் ஏற்பட்டுள்ளது. எனது படைப்புகளுடன் நானும் வரவேற்கப்படுகின்றேன்.

நீங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றீர்களா? 
ம்ம்ம்... என்னால் முடிந்தவரை சுதந்திரமாக செயற்படுகிறேன் என நினைக்கின்றேன்.
நிச்சயமாக நான் இந்த விடயத்தை மாற்றியாக  வேண்டும் என நினைப்பது?
இங்கிருந்து படம் எடுக்கும் போது நிறையவே பணப்பிரச்சினையை சந்தித்தேன். அப்போது வாங்கிய கடன்கூட இன்னும் கொடுத்து முடியவில்லை. தொடர்ந்து படங்கள் எடுக்கும் போது பணம் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. அதற்கான அடித்தளத்தை சரியாக மாற்றியமைக்க வேண்டும்.

 உங்களின் அடுத்த கட்ட முயற்சி? 
இசையமைப்பாளர்கள் பற்றி ஒரு படம் எடுக்க  வேண்டும். அநேகமாக அந்தப்படம் தமிழ், முஸ்லிம் இசையமைப்பாளர்கள் சிங்கள இசைத்துறையில் எவ்வாறு இயங்கினார்கள் என்பது பற்றியதாக இருக்கும்.  முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பற்றி ஒரு கதையும் இருக்கிறது. இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு பணம்தான் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

அவையும் சர்ச்சகைளைக் கிளப்புமா? 
சிரிக்கிறார்,...

No comments:

Post a Comment