Thursday, March 17, 2016

விளம்பரத்தால் ஏமாறாதீர்கள் - பெண்களே விழிப்புடனிருங்கள்

மணமகன் தேவை! மணமகள் தேவை!
இந்த விளம்பத்திற்காகவே ஒரு பக்கம் விடிவதற்குள் பத்திரிகைகள் வாங்குபவர்கள் அதிகம்.. பெரும்பாலானவர்கள் இந்த விளம்பரத்தை பிரசுரித்துவிட்டு அது சரியாக பிரசுரிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்கும், சிலர் நமக்கு ஏற்ற ஜோடி இதில் கிடைக்கிறதா? என்ற எதிர்பார்ப்பை ஈடேற்றுவதற்கும் வாங்குகிறார்கள்.
இந்த விளம்பரங்கள் அத்தனையும் எத்தனை வீதம் உண்மை இருக்கிறது?
கடந்தவாரம் இவ்வாறு மணமகன் தேவை விளம்பரத்தால் பெண்ணொருவர் பணம், நகை, கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பறிகொடுத்த சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஆசிரியர் பெண், ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் இவர் தான் மருமணம் செய்ய விரும்பி மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார்.
இதற்கமைய தொடர்புகொண்ட 42 வயதான தான் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும், லண்டனில் தொழில் புரிவதாகவும் கூறி அப் பெண்ணை கண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் விடுதியொன்றில் தங்கியுள்ளனர். குறித்த ஆண் அப்பெண்ணுக்கு முகத்தை துடைக்கும்படி பேப்பரொன்றை கொடுத்துள்ளார். அதில் முகத்தை துடைத்த பின் அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்து விழிக்கையில் தான் பேராதனை புகையிரத நிலையத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் என்ன நடந்தது என்பது இப் பெண்ணுக்குத் தெரியாது. தன்னிடமிருந்த நகை, பணம், கையடக்கத் தொலைபேசி அனைத்தும் காணாமல் போயிருந்தது.
இது மட்டுமல்ல அண்மைக்காலமாக இவ்வாறு பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பெருந்தொகையான பணம், நகை மட்டுமல்ல பாலியல் துஷ்பிரயோகத்திற்கம் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு செய்யப்படும் சம்பவங்கள் மட்டுமே பரலாக பேசப்படுகின்றதே தவிர இன்னும் எத்தனையோ சம்பவங்கள் குடும்ப சூழல், கௌரவம் என பல்வேறு காரணங்களுக்காக வெளிச்சத்திற்கு வரமால் மூடி மறைக்கப்படுகின்றன.
வெளியுலகிற்கு வராமல் தண்டனை வழங்கப்படாமல் இருப்பதுதான் இத்தகைய கைவரிசைக்காரர்களுக்கு சாதகமாகிப் போகின்றது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கொழும்பு பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் மிக விமர்சையாக ஒரு திருமணம் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அவருடைய தாய் மட்டுமே கலந்துகொண்டிருந்தார். திருமணத்திற்கான மொத்த செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக்கொண்டனர். இறுதியில்தான் தெரிந்தது  தான் கரம்பிடித்தவர் ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்பது.
தனியார் கம்பனியொன்றில் நிறைவேற்றுத் தரத்தில் பணியாற்றும் குறித்த நபரின் முதல் மனைவி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றுகிறார்.
இந்த ஆசாமிகள் ஏமாற்றியது வெவ்வேறு சூழலில் இருவேறு பிரிவினராக இருந்தாலும் இருவருமே பெண்கள். ஆக பெண்களை ஏமாற்றும் தைரியம் இன்று மட்டுமல்ல என்றுமே ஆண்களுக்கு அதிகம்.
இப்படி பல்வேறு யுக்திகளை பிரயோகித்து திருமணம், காதல், வேலைவாய்ப்பு, கல்வி என ஏதோவொரு காரணத்தைக் காட்டி தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்கள் மத்தியில் பெண்களின் வாழ்க்கை நூலறுந்த பட்டம்தான்.
இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன் நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களை திருமணம் செய்வதாக கூறி, அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுவந்த நபரொருவர் பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றது.
இந்நபருக்கு எதிராக குருணாகல், கண்டி, மாவனல்லை, கம்பஹா நீதிமன்றங்கள் பிடிவிராந்து பிறப்பித்திருந்தது. மேலும்  கொழும்பு பொரல்லை, வெயாங்கொட, அலுத்கம, எம்பிலிப்பிட்டி, அம்பலாங்கொட, பதுளை உட்பட பல பிரதேசங்களில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. குறித்த நபர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திருமணம் என்ற ஒன்றை வைத்து ஏகப்பட்ட சித்து விளையாட்டுக்களை காலங்காலமாக செய்து வருகின்றனர்.
இதை புரிந்துகொள்ளாத பல பெண்கள் அவர்களை நம்பி ஏமாந்து போகின்றனர். இருதில் மிஞ்சுவது என்னவோ மனவேதனையும், தலைகுனிவும்தான்.
உற்றார் உறவினர்களின் ஆசியுடன் அக்கு வேர், ஆணி வேராக அலசி ஆராய்ந்து செய்துவைக்கும் திருமண வாழ்க்கையே பொய்த்துப் போகின்றது. இந்நிலையில் சாதாரண விளம்பரத்தை நம்பி எப்படி உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கின்றீர்கள்?
ஒட்டுமொத்தமாக நாம் விளம்பரத்தின் மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் தொடர்புகள் எத்தனை உண்மைதன்மை வாய்ந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். இதுவே உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காமல் இருக்கும்.

No comments:

Post a Comment