உரசல் ரொம்பச் சாதாரணம்தானா?
ஆண்களே ஒரு நிமிடம் ப்ளீஸ்
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் தனியாக வரும் இளம் பெண்களின் மார்பை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தடவிச் செல்வதை பொழுதுபோக்காக கொண்டிருந்துள்ளான்
இதெல்லாம் ஒரு பிரச்சினையா? பெண்கள் எல்லோரும் ஏதோ பேரழகிகளாக தங்களை நினைத்துக் கொள்கிறார்கள், அதுதான் ஆண் பார்ப்பதும் (தெரியாமல்) கொஞ்சம் உரசுவதும் தப்பாகப்படுகிறது எனப் சிலர்ர் நினைப்பதுண்டு.
இந்த உரசல், பார்வை எல்லாம் சாதாரணமாக பார்க்கப்பட்டு தூசி தட்டுவதுபோல் தட்டிச்செல்லப்பட்டாலும் இதில் சம்பந்தப்பட்ட பெண்களின் மனநிலையை யாரும் யோசிப்பதில்லை. இவர்கள் எப்படிப்பட்ட மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர் என்பது சிந்திக்கப்படுவதில்லை. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்லவே அஞ்சுகின்ற நிலை தோன்றியுள்ளது.
பஸ், பாடசாலை, விற்பனை நிலையங்கள், வேலைத்தளங்கள், வீதி என எங்கெல்லாம் பெண்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் இந்தக் கொடுமை வயது வேறுபாடின்றி நிகழ்கின்றது.
கடந்த வாரம் இளம் பெண்களின் உடலை ஸ்பரிசம் செய்தமை தொடர்பில் 11 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இளைஞன் ஒருவனை வெலிகம பொலிஸார் கைது செய்து மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வெலிகம சுல்தானாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இந்த இளைஞன் சுல்தானா கொட பிரதேசத்தில் தனியாக வரும் இளம் பெண்களின் மார்பை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தடவிச் செல்வதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறான். இதனால் அப்பிரதேசப் பெண்கள் தனியாக பஸ்தரிப்பிடத்தில் நிற்கவும் அச்சமடைவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுபற்றி பெண்கள் யாரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.
தமக்கு நடக்கும் இந்தக் கொடுமைகள் பற்றி முறைப்பாடு செய்தால் சமூகத்தில் தம்மால் முகம் கொடுக்க முடியாமற் போவதோடு, தம்மையே குற்றம் சொல்வர் என்பதால் மௌனம் சாதித்து வந்துள்ளதாக இச்சம்பவத்தில் பாதிப்படைந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பொது இடங்களில் பெண்கள், ஆண்கள் மூலம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் இதனை வெளியில் சொல்ல இயலாமல் தங்களுக்குள்ளேயே மறைத்துக்கொண்டு புளுங்குகின்றனர்.
இவ்வாறிருக்க பிரித்தானியாவைச் சேர்ந்த 5 பெண்கள், பொது இடங்களில் பெண்களை உரசும் ஆண்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
இன்னல்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு குரல் கொடுப்பதற்காகவும், வரம்புமீறி நடந்துகொள்ளும் ஆண்களுக்கு எதிராகவும் டுவிட்டர் மூலம், GirlsAgainst என்ற இயக்கத்தை இப்பெண்கள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண்களில் ஒருவர், நான் ஸ்கொட்லாந்தின் Glasgow பகுதியில் வைத்து கூட்டத்தினரிடையே சிக்கிக்கொண்டேன். அப்போது ஒரு ஆண் என்னை உரசியதோடு மட்டுமல்லாமல், எனது ஆடைகள் பற்றி கிண்டலடித்தான், என்னால் அவனை ஒன்றும் செயலவில்லை, மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நான் நகர்ந்து சென்றுவிட்டேன்.
இன்னுமொருமுறை, ஒருவர் எனது இடுப்பில் கையை வைத்து சில்மிஷம் செய்தான், நான் அவரை பிடித்து தள்ளிவிட்டேன், ஆனால் நான் உருவத்தில் சிறியவளாக இருப்பதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை, இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளை நான் சந்தித்துள்ளேன் என்கிறார்.
இப்பெண்களுக்கு பல தரப்பினரிடத்திலிருந்து ஆதரவு குவிகின்றது.
இப்போராட்டத்திற்கு அடித்தளமே பெண்களை உரசும் ஆண்கள்தான். இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்ற நாடு வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கான பிரச்சினை என்னவோ ஒன்றுதான். எத்தனை வளர்ச்சிகள் கண்டாலும் பெண்களை தொட்டுப்பார்க்கும் ஆண்களின் எண்ணத்தில் மாற்றமில்லை.
எம்மில் பலருக்கு இந்த அனுபவம் இருந்தால் வாய்விட்டு வெளியில் சொல்ல வெட்கப்படுகின்றோம். ஒரு பெண்ணை உரசும் ஒருவன் நம் கண் முன்னேயே இன்னொரு பெண்ணை உரசிவிட்டு தைரியமான நடமாடுகின்றான். அனால் எம்மால் அவனை தட்டிக்கேட்கவோ தண்டனை பெற்றுக்கொடுக்கவோ முடியவில்லை. அதற்கு எமது சமூக கட்டமைப்பும் ஒத்துழைப்பதில்லை.
இதற்காக நாம் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையும் வக்கிரம் பிடித்தவர்களாக சித்திரிக்க முனையவில்லை. மனித உருவில் நடமாடும் சில மிருகங்கள் சுற்றித்திரிகின்றன என்பதை விளக்கவே முனைகிறோம்.
தாய், சகோதரி, மனைவி, மகள் என்று பார்த்துப் பார்த்து வளரும் ஆண்கள் மற்ற பெண்களிடம் இப்படி அசிங்கமாக தங்களின் வக்கிரத்தை காட்ட முயற்சிப்பது மிகுந்த வேதனையாகவும், அருவருப்பாகவும் இருக்கின்றது.
இதற்காக ஆண்கள் சொல்லும் சாக்கு நாங்கள் உரசுகிறோம் என்று தெரிந்தும் ஏன் பேசாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் அதற்கு அசைந்துகொடுக்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வது? பெண்களின் இயலாமை என்பதா? அல்லது கையாளாகதத் தனம் என்பதா? அல்லது ஆண்களின் வக்கிரத்தை வலிமை பெண்களிடத்தில் இல்லை என்பதா?
உண்மையைச் சொன்னால் பெரும்பாலான பெண்கள் எதற்கு வீண் வம்பு என்றே பொறுத்துப் போகின்றனர். என்னதான் ஆண் இப்படி செய்தால் பழி என்னவோ பெண்ணுக்குதான் என்பதே பெரும்பாலான பெண்களின் வாதம்.
ஒட்டுமொத்தத்தில் குட்டக் குட்ட குனிபவனும் மடையன், குனியக் குனிய குட்டுபவனும் மடையன். இந்த நிலையை எதிர்த்து நிற்பதே சாணக்கியம்!
No comments:
Post a Comment