கர்ப்பம் சுமப்பவள் எல்லாம் அம்மா ஆகிவிட முடியாது!
கடந்த வாரம் நாம் கேள்வியுற்ற செய்திகள் எல்லாமே தலையைக் கிறுகிறுக்க வைக்கின்றன. தியாகத்தின் உறைவிடம், பாசத்தின் பிறப்பிடம் என்றெல்லாம் கொண்டாடும் தாய்மையைப் பற்றி கேட்கக்கூடா மோசமான நம்பமுடியாத துர்ச்சம்பவங்கள்.
குழந்தை இல்லையென்று எத்தனையோ குடும்பம்கோவில்களிலும் வைத்தியசாலைகளிலும் வரிசைகளில் காத்துக்கிடக்கின்ற நிலைமை ஒருபக்கம், பெற்ற குழந்தைகளை அநாதையாய் நடுத்தெருவில் விடும்தாய்மார், அதைவிட ஒருபடிமேலே சென்று யமன்காளாக மாறுகின்ற தாய்மார் ஒருபுறம் என காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
கடந்தவார இறுதியில் பலாங்கொடை பிரதேசத்தில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்யதுகொள்ள முயன்றுள்ளார். 30 வயதான குறித்த பெண் பலியாகி விட 6வயது பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கண்டியில் ஆறு வயதான தனது மகனை, ரயிலில் தள்ளிவிட்டு கொலைச்செய்வதற்கு முயன்ற குற்றத்திற்காக தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தாய்க்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். குறித்த சிறுவனே நான்காவது பிள்ளை. இச்சிறுவன் தனது கணவன் கண்பாசம் காட்டாததால் பெற்ற மகன் என்றும்பாராமல் கொலை செய்ய முயற்சித்ததாக தாய்(?) வாக்குமூலமளித்துள்ளார்.
இவ்விரு சம்பவங்களிலுமே அதிர்ஷ்டவசமாக பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க வாழைச்சேனை பழையநகர் பிரதேசத்தில் பிறந்து 29 நாட்களேயான ஆண் குழந்தையொன்றை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறும் 20 ஆயிரம் ரூபாவிற்கே குழந்தையை விற்க முற்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தையொன்று கழிவுநீர் அகற்றும் இடத்தில் வீசியெறியப்பட்ட சம்பமொன்று அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கழிவு நீர் அகற்றும் பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் சுத்திகரிப்புத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் படி ஐந்து மாத கருவொன்றே இவ்வாறு வீசியெறியப்பட்டுள்ளதாகவும் அக் கருவின் தாய் யார்? எங்கு பிரசவித்தார் என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதேபோல் இம்மாதம் முதல் பகுதியில் தான் பெற்ற குழந்தையை வளர்க்க தன்னிடம் பணம் இல்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு பிறந்து 17 நாட்களேயான குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் கண்டி பேராதனையில் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் பத்தனை பிரதேசத்தில் உரப்பையில் சுற்றப்பட்ட ஆண் குழந்தை, பிளக்வோட்டர் பகுதியில் ஓடையில் வீசியெறியப்பட்ட பெண் குழந்தை அதேபோல் நோர்வூட் பகுதியில் தேயிலை செடிக்குள் கைவிடப்பட்ட ஆண் குழந்தை என பெற்றோரால் ஏதோவொரு காரணத்திற்காக வீதிக்கு கொண்டுவரப்பட்ட சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் சில குழந்தைகளுக்கு பொலிஸாரால் அனாதை இல்லங்களில் அடைக்கலம் கொடுக்கப்பட்டாலும் சில குழந்தைகள் காலனுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளன. எவரோ செய்யும் தவறுக்கு ஒன்றுமறியாத இந்தப் பிஞ்சுகள் தண்டனை அனுபவிப்பது பரிதாபம்.
இது இவ்வாறிருக்க இன்னும் சில பெற்றோர் தங்கள் அற்ப சுகத்திற்காகவும் வசதிக்காகவும் பெற்ற பிள்ளைகளை அத்தோடு தம் கடமை முடிந்துவிட்டதாக கைகழுவிச் செல்கின்ற கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
கடந்த வார இறுதியில் ரம்புக்கனை, அலுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெற்றோர் தமது காதலர்களுடன் வாழும் பொருட்டு பிரிந்து சென்றனர். இதனால் அவர்களது மூன்று குழந்தைகள் அனாதரவாக நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இதில் ஒன்று விசேட தேவையுடைய பிள்ளை.
இப்படி நிதம் நிதம் இடம்பெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் எதிர்கால சந்ததியின் வாழ்வை கேள்விக்குறியாக்குகின்றன. இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகளின் எதிரகாலம் எப்படி அமையப்போகின்றது?
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறவியாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பிறவியை எடுக்கும் இவர்கள் இப்பிறவியின் பயனை அழித்து விடுகின்றனர்.
அறியாத வயதில் காதல், பாலியல் கொடூரம், விபச்சாரம், வறுமை இப்படி ஏதோவொரு பாதிப்பினால் குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், வீதிகளிலும், தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறிந்து விடுகின்றன..
பிறந்த மண்ணில் அக்குழந்தைகளால் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடிவதில்லை. பெற்றவர்களே சில பிள்ளைகளுக்கு எமனாகிப் போகின்ற நிலையை எப்படி நியாயப்படுத்தமுடியும்.
எங்கோ, யாரோ, எப்படியோ பிறந்த அந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், தைரியம் நம்மில் எத்தனை பேருக்கும் வரும்? அப்படியே வந்தாலும் இந்த சமூகம் அந்தக் குழந்தைகளை வாழ விட்டுவிடுமா?
இப்படி வருத்தத்தோடும், வலியோடும், கனத்த மனதோடும் ஆயிரமாயிரம் கேள்விகள் மட்டுமே எம்மிடத்தில் குவிகின்றன!இவற்றையெல்லமம் பார்க்கும்போது
கர்ப்பம் சுமப்பவள் எல்லாம் அம்மா ஆகிவிடமுடியாது.
(வலைதளத்தில் வாசித்த ஒருவரி) எத்தனை நிதர்சனமான ஒருவாசகம்.
No comments:
Post a Comment