Wednesday, March 30, 2016

சேலை அணிந்தால்தான்

சேலை அணிந்தால்தான் கலாசாரம் பாதுகாக்கப்படுமா?

சர்ச்சையைக் கிளப்பு யாழ் பல்கலைக்கழக ஆடைக்கட்டுப்பாடு


கால ஓட்டத்திகேற்ப சரிக்கு சமமாய் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆடை அணிவது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

கலாசார பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்பாடுகளை  விதித்திருக்கிறது யாழ் பல்கலைக்கழகம்.
பொதுவாக வகுப்புக்கு பிரவேசிக்கும் மாணவர்கள் முதல் வருடத்தி ஸ்கர்ட்-பிளவுஸ், இரண்டாம் வருடத்தில் சல்வார் என்பது சீனியர்ஸின் எழுதப்படாத விதி. இதை விரும்பியோ விரும்பாமலோ ஜுனியர்ஸ் கடைபிடித்தே ஆகவேண்டும்.

இப்படியிருக்க அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் விவாதத்தில் இருந்த ஆடைக்கட்டுப்பாடு விடயம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.
ஆண்கள் முகச்சவரம் (கிளீன் ஷேவ்) செய்திருக்க வேண்டும், டிசேர்ட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை கலைப்பீட மாணவர்கள் மத்தியில் விதிக்க முடிவெடுத்தது.

கடுமையான எதிர்ப்புக்கு  மத்தியில் கைவிடப்பட்ட இவ்விடயம் சில நாட்களுக்குள்ளேயே மீண்டும் தலைதூக்கியது. இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியிலேயே உள்ளுக்குள்ளேயே புகைந்துகொண்டிருந்த விடயம் பூதாகரமாக வெடித்தது.

பெண்கள் கட்டாயம் சேலை அணிந்துவர வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக மாணவிகள் கோஷமெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே கைவிடப்பட்ட விதிமுறையைக் கொண்டுவருவதற்கான காரணம் என்ன? கூட்டத்தில் சேலை அணியாதவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள்ீ போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தையும் மாணவிகள் கோரியுள்ளனர்.

மேலும், இவ்விடயத்தை கலைப்பீடத்தைச்  சேர்ந்த அனைத்து மாணவிகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு ஒன்றியத்தால் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சுற்றுநிருபத்தையும் முற்றாக நிராகரித்துள்ளனர்.

இவ்விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பல்கலைக்கழ துணைவேந்தர் அப்படியொரு கட்டுப்பாட்டை தாம் விதிக்கவில்லை. இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என விலகிக்கொண்டார்.

கால ஓட்டத்திகேற்ப சரிக்கு சமமாய் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆடை அணிவது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

சேலை உடுத்துவது, கலாசாரத்தை பேணுவது என்ற கலாசார காவலர்களின் வியாக்கியானமெல்லாம்  ஒருபக்கம் இருக்கட்டும். ஏனெனில் எது கலாசார உடை என்பதுவே வாதத்துக்குரியது. அப்படியிருக்க இது சரி பிழை என வாதிடவில்லை.

தொழில் செய்யும் பெண்கள் தொழில் நிமித்தம் சில ஆடைகளை அணிய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்தானே. அப்படியானால் இங்கு மட்டும் ஏன் இந்த கோஷம் என்பது சிலரது கேள்வி.
சரி தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்தால் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பவர்கள் தொழிலை விட்டு விலகிக்கொள்ளலாம். ஆனால் கல்வி நிறுவனங்களில் அது முடியாத காரியம். தொழில் செய்ய நாட்டில் எத்தனையே நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் கல்வி கற்க இதைத் தவிர வேறு வழியில்லை. ஆக உயர் கல்வி நிலையங்கள் நீ இந்த ஆடையைத்தான் அணியவேண்டும் எனும் ஆணாதிக்க சிந்தனை திணிப்பை வலுக்கட்டாயமாக மாணவர்களுக்குள் புகுத்துவது அத்தனை பொருத்தமா என்பதை சிந்திக்க வேண்டும்.

8 மணிக்கு லெக்சர்ஸ் தொடங்குகிறது. சிலநேரம் 7மணிக்கும் தொடங்கும். பருத்தித்துரையில் இருந்து பல்கலைக்கழகம் வர கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுக்கும். அப்படியானால் 6 அல்லது 5 மணிக்கெல்லாம் பஸ் எடுக்க வேண்டும். இதற்கிடையில் அந்தப் பிள்ளை எத்தனை மணிக்கு எழுந்து, சாரி உடுத்திக்கொண்டு வரவேண்டும். சரி சாரி கட்டத்தெரியாதவர்கள் என்ன செய்வது? என்கிறார்கள் யாழ் மாணவிகள்.

தொடர்ந்து சிலர் பைக்கில் வருகிறோம். பைக்கில் ஒரு பக்கமாக கால்களை வைத்துக்கொண்டு வர முடியாது. அது ஆபத்தையே விளைவிக்கும். இந்தநிலையில் சாரியை கட்டிக்கொண்டு எப்படி வருவது? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

கொழுத்தும் வெயிலில் முழுநாளும் சாரி உடுத்திக்கொண்டு எப்படி படிப்பது? பாடத்தை கவனிப்பதா அல்லது சாரியை சரி செய்வதா? அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் சாரி உடுத்த வேண்டுமென்று கட்டுப்படுத்துபவர்களில் எத்தனை பேர் அதை கடைபிடிக்கின்றனர்? என்பது மாணவிகளின் பொதுவான கேள்வி. உண்மையிலேயே இது சிந்திக்க வேண்டியதுதான்.

ஆடைக்கட்டுப்பாடு ஏற்கனவே கல்விசார் ஊழியர்களுக்கு மத்தியில்விதிக்கப்பட்டது. இதையே தொடர்ந்தும் மாணவர்கள் மத்தியில் தினிக்க முற்படுகிறது பல்கலைக்கழக நிர்வாகம். கன்னியமான உடை விரும்பத்தக்கது என்பதற்கும் கட்டாயம் உடுத்த வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. நிர்வாகம் கட்டுப்படுத்தவே நினைக்கிறது. ஆகவேதான் மாணவர்கள் அதை மீற முற்படுகிறார்கள். சில ஒழுக்க நெறிகளை போதிப்பது தவறில்லை. எத்தனையோ சமூக பிரச்சினைகள் இருக்க ஆடை கட்டுப்பாடுதான் மிக அவசியம் என்பதை ஏற்க முடியாது. அதேநேரம் ஏற்கனவே நுண்கலைபீட மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு காலங்காலமாக இருக்கின்றது. இதை எவரும் எதிர்க்கவில்லை. இப்போது தனக்கு ஒரு பாதிப்பு என்றவுடனேயே இதை எதிர்க்கிறார்கள். அன்று அவர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்சினை இன்று வந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர் ஒருவர்.

ஆக கலைபீட மாணவர்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு என்பது கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்குடனா என்ற கேள்வி எழுகிறது. உடலை மறைக்கும் ஆடைதான் ஒருவரின் ஒழுக்கத்தை நிரூபிக்குமானால் அந்த ஆடைக்குள் இருக்கும் மனிதனுக்கு என்ன மதிப்பு?

No comments:

Post a Comment