Thursday, March 17, 2016

பாராளுமன்றத்திலும் பாலியல் சேஷ்டை?

பாராளுமன்றத்திலும் பாலியல் சேஷ்டை?



 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காசலங்களில் என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்பதை நாடு அறியாமல் இல்லை


இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை எப்படியேனும் அதிகரித்துவிட வேண்டும் என்ற ரீதியில் ஒரு தரப்பு  குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் ஒரு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பற்றி அண்மையில் வெளிவந்த தகவல் அதிர்ச்சிக்குரியது.

சில மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களால், தாம் பாராளுமன்ற வளாகத்துக்குள்ளேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமது கட்சி மேலிடத்தில் முறையிட்டுள்ளனர்.

அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் பாரராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மூத்த  உறுப்பினர் ஒருவர் தமது கையைப் பிடித்ததாக ஒரு பெண் உறுப்பினர் தமது கட்சி மேலிடத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதேவேளை, அமர்வு முடிவடைந்த சில நிமிடங்களில் மூத்த உறுப்பினரொருவர் தம்மிடம் ஆபாசமாகவும் சொல்லத்தகாத வார்த்தைகளாலும் பேசியதாக மற்றொரு பெண் உறுப்பினர் தமது கட்சி மேலிடத்தில் முறையிட்டுள்ளார்.

இருப்பினும் இம் முறைப்பாடுகள் குறித்து கட்சி மேலிடங்களால் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவல்கள் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுவார்களாயின் அச் சம்பவம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரும் படி பணித்ததோடு, அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அந்தஸ்து பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் இச்செய்தி வெளியாகி சில தினங்களுக்குள்  சபாநாயகர் இச் செய்தி குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும்,  பாராளுமன்ற வளாகத்துக்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித பாலியல் தொந்தரவுக்கோ அல்லது வேறு தொந்தரவுகளுக்கோ உட்படுவதாக வெளியான செய்தி துளியளவும் உண்மையில்லை,  அவ்வாறான சம்பவங்களை தம்மால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை என இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இவ்வாறிருக்க  பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் காரியாலயமும் சபாநாயகரின் கருத்துக்கு ஒத்தூதிவிட்டது.
ஆக இந்த விடயம் இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை உறுப்பினர்களும் உத்தமர்களாக சித்திரிக்கப்பட்டு விட்டனர்.

இந்த விடயத்தில் பாராளுமன்ற நிர்வாகம் நியாயமான முறையில் நடந்துகொண்டது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்கு முன்னர் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்பதை நாடு அறியாமல் இல்லை.

பாராளுமன்ற அமர்வுகளில் ஆபாச படம் பார்ப்பது, ஆபாச வார்த்தைகளை பேசுவது, பெண் உறுப்பினர்களை இழிவுபடுத்துவது, இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைப் பிரயோகம், அவசியமாக விவாதிக்க வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு சேலை நன்றாக இருக்கிறது, அலங்காரம் சரியில்லை, மொடர்ன் ட்ரெஸ் நல்லா இருக்கும் போன்ற வகையிலேயே இவர்களது விவாதங்கள் இருந்திருக்கின்றது.

இப்படிப்பட்ட ஆண்கள் நிறைந்த அவையிலேயே ஓரிரு பெண் உறுப்பினர்கள்  இருந்து இத்தனை காலம் போராடி வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக அமைச்சுப் பதவிகளை வகித்தாலும் பாலியல் பாகுபாடு என்ற ரீதியிலேயே பெண்களை சீண்டிப் பார்க்கின்றனர். இதுவே உலக அளவில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 12வீதம் மாத்திரமே பெண்கள் அங்கம் வகிக்கவும் காரணமாகின்றது.

சட்டம் இயற்றும் ஒரு உயரிய சபையில் இத்தகைய செயல்கள் இடம்பெறுமானால் அந்த சட்டத்தை யார் மதிப்பது?
பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக சாதித்துவிட்ட போதும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே பெண் பிரதிநிதித்துத்தை கொண்டதொரு துறையாக அரசியல் காணப்படுகின்றது. இந்நிலை அரசியல்துறையில் மாறவேண்டுமானால் இத்தகைய கரும்புள்ளிகள் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment