சார்ந்து வாழாதீர்கள்!
ஒரு பெண் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில் எதிர்காலக் கணவனை பற்றி சிந்திக்கிறாள். தனக்கு வரப்போகும் கணவன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. அதனால் நான் மாறவில்லை என்கிறாள்
ஆண்கள் என்றுமே ஆண்களாகத்தான் வாழ்கிறார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரையில் அவனுக்கென ஒரு தனித்துவம், சுய மரியாதை, கௌரவம் பேணப்படுகிறது. ஆனால் பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை தனக்கான ஒரு அடையாளம் அற்றவளாகிப் போகின்றாள்.
பல நம்பிக்கைகள் காலாவதியாகி விட்டன. சில நம்பிக்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு துளியும் பொருந்தாதவை. காலத்திற்கு பொருந்தாத அதே சமயம் நாம் உற்சாகமூட்டி வழர்த்து வரும், கடைபிடிக்கும் நம்பிக்கைகள் ஏராளம்.
பலங்காலம் தொட்டு இன்றுவரை நம் பெண்கள் குடும்ப உறவுகளின் பிணைப்புக்குள் சிக்குண்டு ஒரு ஆணைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம். .
ஒரு பெண் தன் வாழ்நாளில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பெற்றோருக்கு மகளாக, சகோதரர்களுக்கு சகோதரியாக, காதலனுக்கு காதலியாக, கணவனுக்கு மனைவியாக, பிள்ளைகளுக்கு தாயாக இப்படி ஏதோவொரு ஆணின் துணை அவசியமாகின்றது. அப்படி வாழ்கின்ற வாழ்க்கையில் தனக்கான ரசனை, தனக்கான மனநிலை, வாழ்க்கை முறை என எல்லாமே யாரோ ஒருவரைச் சார்ந்ததாய் மாறிவிடுகிறது.
உடுத்தும் உடை ஆரம்பித்து பெயர், நடை, பாவனை, நட்பு என கேட்கும் இசை வரை ரசனை கூட விரும்பியோ விரும்பாமலோ மற்றவர்களின் ரசனையோடு சார்ந்து சுயமிழந்து போகிறோம்.
இதான் நமது கலாசாரம் பெண்களுக்கு பாதுகாப்பு என்று பலர் நினைக்கின்றனர்.
எது பெண்களுக்கு பாதுகாப்பு? குடும்ப உறவுகளாலேயே பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் சிதைக்கப்படுவதை என்னவென்று சொல்லுவது? இப்போது எங்கே சென்றது உறவுகளின் பாதுகாப்பு?
ஆண்கள் என்றுமே ஆண்களாகத்தான் வாழ்கிறார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரையில் அவனுக்கென ஒரு தனித்துவம், சுய மரியாதை, கௌரவம் எல்லாமே பேணப்படுகிறது.
ஆனால் பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை தனக்கான ஒரு அடையாளம் அற்றவளாகிப் போகின்றாள். குழந்தைப் பருவத்தில் தந்தையின் கரம்பிடித்து நடக்கும் பிள்ளை கடைசி மண்ணுக்குள் புதையுண்டு போகும் வரை ஒரு ஆணின் கரம் பற்றியே வாழ்கிறாள்.
சாதாரணமாக வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதாக இருந்தால் வயதில் சிறியவனாக இருந்தாலும் பரவாயில்லை சேகாதரனை அழைத்துக்கொண்டு செல் எனும் கலாசாரம் மேலோங்கி இருக்கின்றது.
இந்த நிலையெல்லாம் எங்களிடத்தில் இல்லையென சொன்னாலும் மறைமுகமாக இந்த கலாசாரம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதை இல்லையென்று யாரும் மறுக்க முடியாது.
அண்மையில் இடம்பெற்ற ஒரு உரையாடல் எத்தனை தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும், தொழில் நுட்பங்கள் வளர்ச்சிகண்டுள்ள போதும் பெண்கள் தனக்கென ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள் வாழ்கின்றார்கள் என்பதை உணர்த்தியது. ஆணுக்குப் பெண் சமம் என்பது வெறும் வாய் வார்த்தைதானோ என எண்ணத் தோன்றுகிறது.
அதாவது இளம் வயதில் ஒரு பெண் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில் எதிர்காலக் கணவனை பற்றி சிந்திக்கிறாள். தனக்கு வரப்போகும் கணவன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. அதனால் நான் மாறவில்லை என்கிறாள்.
இதில் எந்தளவு நியாயம் இருக்கிறது? ஒரு இளம் பெண்ணின் தற்போதைய வாழ்க்கை அவளுக்கு வரப்போகும் கணவனுக்கானதாக இருக்கிறது. வரும் கணவனுக்கு ஏற்ற துணையாக வளர்க்கப்படுகிறாளே தவிர ஒரு பெண்ணாக அல்ல.
இதுவே திருமணத்தின் பின் தனக்கு வரப்போகும் மனைவிக்காக தன் ரசனைக்கேற்ப வாழாதிருக்கும் ஆண்கள் இருக்கின்றார்களா? சொல்லுங்கள்.
திருமணத்தின் பின் பொட்டு, தாலியை சுமக்கும் பெண்கள் கணவனின் இறப்புக்குப் பின் அதனை இழக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு இதில் எந்த நடைமுறையும் பொருந்தாது.
அதேசமயம் தனக்கு வாய்ந்த கணவன் நடத்தையில் சரியில்லை என்றாலும் அதை சமாளித்துக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு இருக்கிறது. அதையே இந்த சமூகமும் ஏற்றுக்கொள்கிறது. கணவனை விட்டு விலகியிருக்க நினைக்கும் பெண்களை சமூகம் போற்றுவதில்லை தூற்றவே செய்கிறது.
இப்படிப்பட்ட பெண்கள் ஆண் துணை இன்றி தனித்து வாழ முடியாதுள்ளது. ஏனெனில் இவர்களுக்கான எல்லாத் தேவைகளையும் அவர்களே செய்து கொடுத்தார்கள். திடீரென அந்த சூழல் மாறுபடும்போது அதை சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். உள ரீதியாகவும் பாதிப்புக்கள்ளாக நேர்கிறது. தான் தனித்து விடப்பட்டது போன்ற விரக்தி தன்னைத்தானே கொன்றுவிடும். இதற்காகவே ஒரு பெண் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் அதே சமயம் தனக்கான தனித்துவத்துடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது.
உங்கள் நிழல் கூட, வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும், ஆக உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழாதீர்கள்!
No comments:
Post a Comment