நாம் வாழத்தகுதியற்றவர்களா?
பஸ்ஸில் எங்கள் பக்கத்தில் இருக்கையில் அமர்வதற்கே சங்கடப்படுபவர்கள் எங்கள் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பார்கள்? தினம் தினம் எத்தனை முகங்கள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள்.
வீட்டில் பிள்ளைகள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முதலில் செய்வது வீட்டை விட்டு வெளியேற்றுவதுதான். அவர்களை புரிந்துகொள்வது இல்லை. தெருவுக்குத்தள்ளப்படும் இந்தப்பிள்ளைகள் இந்த பாழும் சமுதாயத்தில் எப்படித்துயரப்படும் என பெற்றோர்களே சிந்திப்பதில்லை.
நாங்க என்னங்க தப்புப் பண்ணோம். ஒரு குழந்தை பிறக்கும் போது ஆணோக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கொண்டாடுகிற பெற்றோர்கள், அந்தக்குழந்தை வளர்ந்த பின் ஆண் பெண்ணாவோ அல்லது பெண் ஆணாகவோ மாறிால் மாத்திரம் ஏன் அதை அவமானமாக நினைக்கிறார்கள்? வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள்? இதில் எங்கள் தவறுதான் என்ன?
என நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் கேட்கிறார் பூமி!
யாரும் தாங்கள் திருநங்கையாக பிறக்கவேண்டும் என்று விரும்பி பிறக்கவில்லை. எவரும் விரும்பி பெற்றெடுக்கவும் இல்லை. இருந்தும் கடவுளே தன் படைப்பில் தவறுசெய்கிறான். கடவுளின் தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவிக்கிறோம் என்கிற பூமியின் பேச்சில் திருநங்கைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் எதிரொலிக்கிறது.
பூமி ஹரேந்திரன் (25வயது). எச்.ஐ.வி. தடுப்பு சம்பந்தமாக இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். மேலும் திருநங்கைகள் தொடர்பாக தமது கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு திருநங்கைகளுக்காக குரல் கொடுத்துவருகிறார்.
நீளக்கூந்தல் நெற்றித் திலகம், வகிட்டில் குங்குமம், பேச்சில் நளினம் என கொள்ளை அழகாகக் காட்சி தருகிறார் பூமி. இவரது உண்மைப் பெயர் பூமி அல்ல. தொலைக்காட்சி தொடரில் வரும் ஒரு நாயகியின் பெயர். அந்தப் பெயர் ரொம்பப் பிடித்திருந்ததால் அதையே என் பெயராக்கிக் கொண்டேன் என்கிறார்.
திருநங்கைகளின் வாழ்க்கை மிகத் துயரம் நிறைந்தது. எனது இந்தப் பயணம் 2010 இல் ஆரம்பமானது. அதுதான் என்னை நானே யாரென கண்டுபிடித்து எனது முகமூடியை தூக்கியெறிந்த காலம். எனது உணர்வுகளை, விருப்பத்தை குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. 2011ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு உதவிசெய்ய, வழிகாட்ட யாரும் இல்லை. இந்த நிலை ஏனையவர்களுக்கும் வரகூடாது. இதை மாற்ற வேண்டும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் என்னால் இயலுமானவரையில் அன்றிலிருந்து திருநங்கைகள் மீதான பார்வையை மாற்றுவதற்கு பாலமாக பயணிக்கிறேன்.
ஆரம்பத்தில் ஆண் உடலுக்குள் இருக்கும் ஒரு பெண்ணாகவே என்னை உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் விடியும்போது நான் ஒரு பெண்ணாக மாறியிருக்க வேண்டும் என கடவுளிடம் மன்றாடியிருக்கிறேன். அந்தக் கனவு இப்போது 75 வீதம் நனவாகியிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை மதம், கலாசாரம் ரீதியான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அங்கிகாரம் இலங்கையில் இல்லை. இலங்கையை பொறுத்தவரை பிறப்பு என்பது ஆண் அல்லது பெண். இவர்கள் மட்டுமே வாழத் தகுதியானவர்கள். எங்களைப் போன்றவர்களை நோயாளர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கின்றனர்.
வீட்டில் பிள்ளைகள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முதலில் செய்வது வீட்டை விட்டு வெளியேற்றுவதுதான். அவர்களை புரிந்துகொள்வது இல்லை. தெருவுக்குத்தள்ளப்படும் இந்தப்பிள்ளைகள் இந்த பாழும் சமுதாயத்தில் எப்படித்துயரப்படும் என பெற்றோர்களே சிந்திப்பதில்லை. பாடசாலைகளும் ஏற்க மறுக்கின்றன. கல்வித் தகுதி குறைகிறது. இதனால் சரியான ஒரு தொழிலை பெறமுடிவதில்லை.
திருநங்கையாக இருந்தால் அவர்களுக்கான தொழிலாக அழகுக்கலை, சமையல்கலை, பூக்கள் வளர்த்தல், பெஷன் டிசைனர் இவைதான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை செய்ய முடியாதவர்கள் ஒன்று பிச்சை எடுக்க வேண்டும் அல்லது விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதைமீறி சமூக அந்தஸ்துள்ள தொழிலை செய்வதானால் வார்த்தை ரீதியாக, உடல் ரீதியாக மிகப்பெரிய கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சிலரே இந்தத் தடைகளை படிக்கல்லாக மாற்றியுள்ளனர்.
விடியும் ஒவ்வொரு பொழுதும் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு தொழில், தங்குவதற்கு இடம் இருந்தும் பல கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இது எதுவுமே இல்லாதவர்கள் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்? இதனாலேயே திருநங்கைகளுக்கு படிப்பு என்பது மிக முக்கியம். தரமான கல்வியின் மூலமே சாதிக்க முடியும்.
பெண்ணாக மாறுவது மட்டும் வாழ்க்கை இல்லை. அது அத்தனை பெரிய விடயமும் அல்ல. உடல் ரீதியான மாற்றத்தை விடவும் கல்வி, பணபலம், தொழில் இப்படி எல்லாம் அமைந்தால் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாமல் சொந்த காலில் நிற்கலாம். அடுத்தவரிடம் கையேந்தும் நிலை ஏற்படாது. இது சாத்தியமாகும் பட்சத்தில் திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வையும் மாற்றமடையும்.
திருநங்கைகளை பார்த்து சிரிப்பவர்களுக்கு மீண்டும் சிரிக்கும் வாய்ப்பை வழங்கக்கூடாது. பஸ்ஸில் எங்கள் பக்கத்தில் இருக்கையில் அமர்வதற்கே சங்கடப்படுபவர்கள் எங்கள் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பார்கள்? தினம் தினம் எத்தனை முகங்கள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள். இந்தப் போராட்ட வாழ்க்கை வாழ்வதற்கு மன திடம் எல்லாவற்றையும் தாங்கும் வலிமை அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக குடும்ப உறவுகள் திருநங்கைகளை புரிந்துகொள்ள வேண்டும். தனது குழ்தைகளிடத்தில் மாற்றத்தை உணர்ந்தால் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டுமேயொழிய மந்திரம், மாந்திரிகம் என சுற்றி கடைசியில் இவர்களை தெருவில் தள்ளாதீர்கள்.
என்னைப்போன்ற ஆயிரமாயிரம் திருநங்கைகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். இவர்களது வாழ்க்கை மாற்றப்பட வேண்டும்.
திருநங்கைகள் வெறும் பாலியல் பொம்மைகள் அல்ல. அதற்கு மட்டுமே அடிமைப்பட்டவர்களும் அல்ல. உலகம் மூன்றாம் பாலினமாக எங்களை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் இன்னும் நிம்மதி இல்லை. திருநங்கைகளும் சக மனுஷயாக மதிக்கப்பட வேண்டும். சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் ஆதங்கமாய் பேசுகிறார் பூமி.
பூமியின் நியாயம் நம் இதயத்தை சுடுகிறது.
No comments:
Post a Comment