பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி
மனதில் தூவும் விஷமா?தெளிவாக்கும் விடயமா?
பாலியல் கல்வி பாடசாலைகளில் அவசியம்! என்ன இது முதல் வரியே தலையிடியா இருக்கே என யோசிப்பது புரிகின்றது. ஆனாலும் என்ன செய்வது அதைப் பற்றி சிந்திப்பதற்கான அவசியம் தற்போது எழுந்துள்ளது.அதாவது இலங்கை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பரிந்துரை செய்யதுள்ளது. அதேநேரம் முதலாம் தரத்தில் பால்நிலை கல்வியை சேர்த்துக்கொள்ள முடியாது. எனவே வாழ்க்கைத்திறன்கள் என்ற பெயரில் முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இத் திட்டத்தின் படி உடலமைப்பு, அதன் இயல்பு, உடல் பாதுகாப்பு என்பவற்றுடன், உரிய வயது வரும் போது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி மற்றும் அது தொடர்பிலான கல்வியைக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது இவ்வாறிருக்க பாலியல் கல்வி பாடசாலைகளில் அவசியம் என வலியுறுத்துகிறது ஒரு குழு. அதேநேரம் பாடசாலைகளில் இதை ஏன் கற்பிக்க வேண்டும்? என்ற கேள்வி ஒரு பக்கம், ஏற்கனவே எல்லாம் கெட்டு குட்டுச் சுவராகி நிக்குதுகள் இப்போ இது நமக்கு ரொம்ப முக்கியம்? என முகம் சுழிப்பவர்கள் இன்னுமொரு பக்கம் என இந்த விடயம்சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.
மேலும் பாலியல் என்ற வார்த்தையைக் கூட வாய்விட்டுச் சொல்ல முடியாத நாம் எப்படி பாடசாலைகளில் அதை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுவது நியாயம்தான். இருந்தாலும் இன்றைய காலகட்டம் அதன் தேவையை உணர்த்தியிருக்கிறது.
பாலியல் கல்வி என்பது முகம் சுளிக்க வேண்டிய ஒரு விடயம் அல்ல.
ஒவ்வொரு நாளும் எழு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், 3 வயது சிறுசி துஷ்பிரயோகத்திற்குள்ளாகி கொலை, 5 வயது தங்கையை துஷ்பிரயோகப்படுத்திய 13 வயது அண்ணன் இவ்வாறான செய்திகளுடனேயே பொழுது விடிகிறது. இந்த நிலை மாற்றத்திற்கு பாலியல் கல்வியும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
சாதாரணமாக 05 அல்லது 06 வயதின் ஆரம்பத்திலேயே ஆண்-பெண் குறித்த சந்தேகங்கள் அவர்களுக்குள் துளிர்விடத் தொடங்குகின்றன. சிலருக்கு இதற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. இவர்களது வயது ஒவ்வொரு ஆண்டும் கூடுவது போல் இந்த சந்தேகத் தேடல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறதே தவிர அதற்கான விடை அவர்களுக்கு அவ்வப்போது கிடைப்பதில்லை. அதனாலேயே அவர்கள் தானாக அதனைத் தேடி வம்பை விலைக்கு வாங்கி விடுகின்றனர்.
பொதுவாக பிள்ளைகள் வளர்ச்சி, அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றம், ஆண்-பெண் வித்தியாசம், உடல் உறுப்புக்களின் தேவை, அதன் பயன்பாடுகள் பற்றி பாடசாலைகளும் சரி, வீடும் சரி அவர்களுக்கு விளக்கம் கொடுக்க விரும்புவதில்லை. இந்த விளக்கத்தைத் தேடி பிள்ளைகள் பயனிக்கையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தவறாக அமையலாம். அவ்வாறு அமைகையில் இங்கிருந்தே ஒரு பிள்ளை குற்றவாளியாக செதுக்கப்படுகிறது. தவறான வழிகாட்டல், தவறான புரிதலைக் கொண்டு வழிதவறிப் போகவும் நேரிடுகின்றது.
அதற்காக பிள்ளைகளுக்கு பாலியல் குறித்த எல்லா விடயங்களையும் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்று கூறவில்லை. பிள்ளைகள் தங்களைத் தாங்கள் உணர்ந்து, அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு சரியான பாதையை காட்டும் அரணாக இருக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
இன்று நேற்று அல்ல பல தசாப்தங்களாக பாடசாலைகளில் சுகாதாரம், விஞ்ஞான பாடங்களின் போது உடல் அமைப்பு, உறுப்புகள் குறித்த பாடங்களை பெரும்பாலான ஆசிரியர்கள் அதாவது 100இற்கு 99வீதமானவர்கள் கற்பிப்பதே இல்லை. நீங்களே வாசித்து அறிந்து கொள்ளுங்கள் என்றே கூறுகிறார்கள். இதுதான் பிழையான வழிகாட்டல் என்கிறோம்.
பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை கொடுக்க முடியாமல் வாயை மூடு அல்லது இது உணக்குத் தேவையில்லாதது என்று பெற்றோர் அவர்கள் வாயை அடைக்க முட்படுகின்றனர். பின்னாலில் அதுவே பிரச்சினையில் மூலகாரணமாகின்றது. இதற்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. நாம் வாழும் சமூகம் அவ்வாரானது.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் கற்றுக்கொடுத்து விடுகிறது.
ஆக சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்குள் சுயபுரிதலை ஏற்படுத்த வேண்டும். அதுதான் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு வித்திடும்.
முறையான திட்டம், தரமான கல்வி, சிறந்த கற்பித்தல் சமூகம் அமையுமாயின் பாலியல் கல்வியால் மாற்றம் சாத்தியம்!
No comments:
Post a Comment