ஆடுவோம் பாடுவோம், பறை முழங்குவோம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்!
மட்டு கல்லடி கடற்கரையில் நீதிக்காக முழங்கிய பறை!
பறை! பல நூற்றாண்டின் ஒட்டுமொத்த இருளையும் தட்டி எழுப்பிய பெருஞ்சத்தம். குரல் நெரிப்பை உணர்த்தக்கிடைத்த ஒரு கருவி. ஓர் அடையாளம், ஆயுதம். ஊழலையும் ஆதிக்கத்தையும் அம்பலப்படுத்தும் வெளிச்சம். உடலின், உள்ளத்தின் அடக்குமுறைகளின் ஒட்டுமொத்தக் கொந்தளிப்பின் வேட்கையை வெளிப்படுத்திய அதிர்வு.
இப்படிப்பட்ட பறை சாதியத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, எங்கோ ஒரு மூலையில் இறப்பு, திருவிழா என ஏதோவொரு சடங்கு, சம்பிரதாயத்திற்கு மட்டுமே பயன்படுகின்றது. இந்தப் பறை பெண்கள் தீண்டத்தகாத ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பு உடைத்தெறியப்பட்டு மட்டக்களப்பில் ஆறு பெண்களால் நீதிக்கான பறை முழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தின கொண்டாட்டத்தில் உலகமே திலைத்திருக்க கல்லடி கடற்கரை பகுதி பறை முழக்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்போம் என உறைத்தது.
நீதிக்கான பறை முழக்கம் மட்டக்களப்பிலுள்ள பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்களான கமலா வாசுகி, கார்த்திகா, துஷாந்தி, ஸ்ரீதாரணி, ராஜலக்ஷ்மி, நிரோஷினி ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.
பெண்களால் இணைந்து வேலை செய்ய முடியாது என்பார்கள். ஆனால் நாங்கள் ஆறு பேரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே கொள்கைகளைக் கொண்டவர்கள். ஒன்றாக இணைந்து செயற்படுகின்றோம். எங்களுக்கென தனி அமைப்புகள் எதுவும் இல்லை.
பெண்ணிலைவாதிகளும், பெண் செயற்பாட்டாளர்களும், பெண்ணிய கருத்துக்களோடு ஒத்துபோகும் நண்பர்களையும் இணைந்து இந்த ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்காக இடம்பெற்று வரும் ஒரு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வில் சிறப்பம்சமே ஆர்ப்பாட்டம், போராட்டம், கொடி பிடிப்பு, கோஷமெழுப்பல் எதுவுமற்ற ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம் என்பதுதான். இதன் நிமித்தமே நீதிக்கான பறை முழங்கியது.
கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் செய்யலாம். பெண்களுக்கான வன்முறைகளை ஒழிக்க இவர்கள் கையிலேந்திய ஆயுதம் பறை.
இந்த நிகழ்வை பார்வையிட்ட ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒருவகையில் இவர்களுக்கு உதவிபுரிந்தனர். இவர்களோடு இங்கு இயங்கி வரும் பல கலாசார குழுக்கள் இணைந்து கொண்டார்கள். பெண்கள் எழுச்சி, வன்கொடுமைகளுக்கு எதிரான பாடல்களை பாடினார்கள். மணல் ஓவியங்கள் வரையப்பட்டன.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளை எதிர்த்துப் பேசி, எழுதி, இயங்கி ஓய்ந்து போனவர்கள் அதனால் அடைய முடியாத வெற்றியின் வெளிப்பாடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.
பறை, தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி. உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. ஆதித் தமிழன் நமக்குக் கற்றுத்தந்த, விட்டுச்சென்ற கலைப் பொக்கிஷம். அத்தோடு பறை என்பது சொல், தெளிவாய்ச் சொல், உறத்துச் சொல் என்பதையும் உணர்த்துகிறது. இருந்தாலும் ஒரு சாதியை மட்டும் குறிப்பதாக அந்தச் சொல் இங்கு வேரூன்றிவிட்டது என்பதுதான் அவலம்!
அன்புக்குரிய நாளான காதலர் தினத்தை தெரிவு செய்து அந்த நாளில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன் கொடுமைகளை எதிர்த்து அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்த்த முனைந்தோம். அதற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மட்டுமே உரித்தானதாக கருதப்படும் பறையை கையில் எடுத்தோம் என்கிறார்கள் இந்தப் பெண்ணிலை செயற்பாட்டாளர்கள்.
இந்த நிகழ்வின் மூலம் நாம் யாரையும் புன்படுத்த முனையவில்லை. சொல்லப்போனால் எல்லோரையும் சந்தோஷப்பபடுத்தினோம். அத்தோடு எங்களது நோக்கத்தையும் வெளிப்படுத்தினோம்.
இப்படியொரு நிகழ்வை ஆரம்பிக்கும் போது குடும்பத்தின் ஆதரவு கேள்விக்குரியாகவே இருந்தது. இப்போது அவர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைத்துவிட்டது. நாங்கள் ஆறு பேரும் குடும்பத்தோடு சென்று இதில் பங்குபற்றினோம்.
ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து பறை பலகினோம். பறையுடன் செல்வதைப் பார்த்த ஒவ்வொருவரும் முகம் சுழித்தார்கள். ''பறை அடிக்கப் போறாங்களா? இவங்களா பறை அடிக்கிற ஆக்கள்?'' என்ற கேலிக்கு உள்ளானோம். சிலர் சாவுக்கு அடிக்கும் பறையை வீடுவழியே அடிக்கிறார்கள், இது மன உளைச்சலை அதிகரிக்கிறது, பிள்ளைகளின் கல்வியை பாதிக்கிறது என்றெல்லாம் குற்றம் சுமத்தினார்கள்.
தடைகளையும் தகர்த்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தோம். அந்த நாள் சந்தோஷத்தையும் உட்சாகத்தையும் ஏற்படுத்தியது. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக இதைவிட இன்னும் செயற்பட முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
No comments:
Post a Comment