சாவுக்கான தைரியத்தை வாழ்வதற்கு காட்டுங்கள்!
வாழ்க்கையின் பாதை பூக்களால் நிறைந்தது அல்ல. கல்லும் முள்ளும் கால்களைக் குத்தி பதம் பார்க்கத்தான் செய்யும். அதை தூக்கி எறிந்துவிட்டு முன்னோக்கி செல்லும் பயணமே வெற்றி தரும்!
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சுமித்திரயோவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு!
தற்காலிகமான ஒரு பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வே தற்கொலை என்றொரு பிரபல வாசகமுண்டு.
உண்மைதான்! பிரச்சினை இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. பிரச்சினைகளை யார், எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது மடுவளவு சிறியதா, மலையளவு பெரியதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும், எந்தப் பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். ஆனால், அந்தத் தீர்வு எந்தக் காலத்திலும் தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவு அல்ல. தற்கொலை எண்ணத்தில் தவிப்பவர்கள், தற்கொலைக்கு முயன்று தோற்றவர்கள், பிடிப்பில்லாமல், விரக்தியின் விளிம்பில் நிற்பவர்கள் என வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், அவர்களது பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டு, ஆறுதல் அளிக்கிற, அவர்களை மீட்டெடுக்கிற அமைப்புதான் சுமித்திரயோ!
செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம். இம்முறை தற்கொலை முயற்சிகளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுகாதார ஸ்தாபனத்தால் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சுமித்திரயோ விழிப்புணர்வு நிகழ்வோடு இணைந்து தற்கொலையால் உயிர் நீத்தவர்கள், தற்கொலைக்கு முயற்சித்தோர், அவர்களது குடும்பம், பாதிக்கப்பட்டோர் என அனைவரையும் நினைவுகூரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
வழமையான பாணியில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டாலும் வழமைக்குமாறான போக்கு கையாளப்பட்டது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதில் சுமித்திரயோவின் பங்களிப்பை, பணிகளை, தற்கொலைக்கான காரணங்கள், தற்கொலையாளர்களின் மனநிலை, தோற்றம், வெளிப்பாடுகள் என்பன சொல்லில் அடங்கிவிடாது. அரங்க செயற்பாடுகளால் அனைவரையும் தெளிவுபடுத்தினர். உணர்வுகளை புரிந்துக்கொள்ள மொழி ஒரு தடையல்ல என்பதையும் இந்நிகழ்வு நிரூபித்தது.
வாழ்க்கையின் பாதை பூக்களால் நிறைந்தது அல்ல. கல்லும் முள்ளும் கால்களைக் குத்தி பதம் பார்க்கத்தான் செய்யும். அதை தூக்கி எறிந்துவிட்டு முன்னோக்கி செல்லும் பயணமே தற்கொலையை எதிர்க்கும் ஆயுதம்.
தற்கொலை முயற்சியே உதவி தேடும் கூக்குரல்தான். தற்கொலை எண்ணத்தில் இருப்போரிடம் முக்கியமாக சில அறிகுறிகள் காணப்படுகின்றன.
தனிமை உணர்வு, கவலை, பதற்றம், எதிலும் ஈடுபாடின்மை, சமீபத்தில் மிகப்பெரிய இழப்பு அல்லது மரணம் அல்லது பிரிவு, அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், உணர்ச்சியற்று இருத்தல், அளவு மீறிய பயம், தன்னிலையில் மாற்றம், உயில் எழுதுதல், தூக்கமின்மை, உணவுப்பழக்கத்தில் மாற்றம், குற்ற உணர்வு, அவமானம், மனநிலையில் பெரும் மாற்றம், நெருங்கிய நட்பு, உறவுகளை நேரில் சந்தித்தல், உடைமைகளை பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களால் அதை வெளிப்படுத்துகிறார்கள். இதை கண்டுகொள்ள எம்மில் பலருக்கு நேரமில்லை. சிலருக்கு நமக்கென்ன என்ற எண்ணம்.
தற்கொலை எண்ணம் பணக்காரர், பாமரர், படித்தவர், உயர் பதவிகளில் இருப்போர் என்பதை பார்ப்பதில்லை, ஒரு மனிதனாக இருந்தால் போதும். அவர்களது ஒவ்வொரு அசைவும், நொடிகளும் அதனை விபரிக்கும்.
சோகங்களையும், கவலைகளையும், ரணங்களையும் பகிர்ந்துகொள்ள அல்லது தனக்கென ஒரு நிமிடம் ஒதுக்கி செவி சாய்க்க யாருமில்லை என்ற தனிமையிலிருந்து விடுபடச் செய்தாலே தற்கொலை எண்ணம் தானாக விலகிவிடும் என்பது அரங்க ஆற்றுகையின் மூலம் வெளியானது.
யாருமே எதிர்பாராத வகையில் நடைபயணம்கூட நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சிறந்ததொரு உதாரணத்தை பகிர்ந்தார் மனநல ஆலோசகர் நீல் பெர்ணாண்டோ.
தற்கொலை செய்தே தீருவேன் என்றொருவர் பல மைல் தொலைவிலுள்ள ரயில் நிலையத்தை அடைந்தார். ஏனோ அன்று ரயில் தாமதமாக பொறுமை இழந்தவர் எப்படியாவது ரயிலில் பாய்ந்துவிட வேண்டுமென ரயிலை நோக்கி பயணித்தார். நான்கு மைல் தூரம் நடந்தே சென்று அடுத்த நிலையத்தை அடைந்தவருக்கு நான் ஏன் ஒரு மனநல மருத்துவரை நாடக்கூடாது என்ற சிந்தனை தோன்றியது. உடனே மனநல மருத்துவரிடம் சென்றவர் நடந்ததை விளக்கி தீர்வையும் பெற்று இன்றுவரை சுகமாக வாழ்கிறார்.
ஆக மாற்றத்திற்கு நேரம் தேவை. அவசர முடிவுகளால் ஆவது ஒன்றுமில்லை. மனதிற்கும் புத்திக்கும் ஏற்படும் சண்டையில் உண்மையை உணர சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.
வாழ்வதற்கு ஆயிரம் வழியிருக்க நாம் பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை என்னும் ஒரு வழியையே திறந்து ஏனைய கதவுகளை அடைத்துவிடுகிறோம் என்ற நியாயத்தை உணர்த்தியது இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட தன்னார்வ தொண்டர்களின் பேச்சு.
தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கொஞ்சம் வாழ்வதில் காட்டலாமே! என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது அங்கு ஏற்றப்பட்ட மெழுகுத்திரி விளக்குகள்!
No comments:
Post a Comment