Thursday, March 17, 2016

விளையாட்டுத்தான் என் வாழ்க்கை!

 விளையாட்டுத்தான் என் வாழ்க்கை! 
இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவி சுரேந்தினி சிதம்பரநாதன் 



இலங்கையின் விளையாட்டுத் துறையில் இன்றையளவில் தமிழர்கள் பலர் பிரகாசித்தாலும் நிறைவேற்றுத் தரம், பொறுப்புகள் சார்ந்த விடயத்தில் அவர்களின் பங்கு குறைவானதே.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தெரிவுகள் இடம்பெறும் வலைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவியாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தினி சிதம்பரநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க செயலாளர், மத்தியஸ்தர் சங்க செயலாளர், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளர், தெற்காசிய வலைப்பந்தாட்டப் போட்டி மத்தியஸ்தர் என பல பதவிகளை தன்னகத்தே கொண்ட சுரேந்தினி மென்மையான புன்னகையுடன் எந்தவித ஆடம்பரமுமின்றி பேச ஆரம்பித்தார்.

சொந்த இடம் அரியாலை. பிறந்து வளர்ந்தது அங்குதான். கிரவுண்டுக்கு முன்னால்தான் எங்கள் வீடு. விபரம் தெரிந்த காலம் முதல் கிரவுண்டிலேயே என்னுடைய பொழுது கழிந்தது. பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு பிற்காலத்தில் என்னுடைய துறையாகவும் மாறிப்போனது.
83இற்குப் பிறகு இடம் மாறினாலும் விளையாட்டின் மீதிருந்த ஈர்ப்பு மாறவில்லை. அப்பா, சகோதரி என எல்லோரும் விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்கவர்கள். அதனால் வீட்டில் என்றுமே எதிர்ப்பு இருந்ததில்லை.
கொழும்புத்துறை மகா வித்தியாலயம் என் ஆரம்பக் கல்விக்கு அடித்தளமிட்டது. தொடர்ந்து உயர்கல்வி, பட்டப்படிப்பை நிறைவுசெய்தேன்.
விளையாட்டுத்துறையை பொறுத்தவரையில் அரியாலை வலைப்பந்தாட்டக் கழகம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த கழகத்தின் வளர்ச்சியே  குறிப்பாக நான் வலைப்பந்தாட்டத் துறையில் பிரகாசிக்க தூண்டுகோலாகவும் அமைந்தது.

இந்த மண்ணில் பிறந்து 43 வருடங்கள் வாழ்கின்றேன் என்றால் அது விளையாட்டுக்காகத்தான். வலைப்பந்தாட்டத்தை ஒரு விளையாட்டாக நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அது என் இரத்தத்தில் ஊறிய ஒன்று. இதற்காகவே என் வாழ்நாளை அர்ப்பணிக்கின்றேன்.
டேபிள் டெனிஸ், கெரம், பாஸ்கட்போல், மெய்வல்லுனர் விளையாட்டுகள் என எல்லாவற்றிலும் அவ்வப்போது பிரகாசித்தாலும் எனது இலக்கு என்னவோ வலைப்பந்துதான்.

இது பெண்களுக்கு மட்டுமே உரிய விளையாட்டு என்று இருந்த காலம் போய் இன்று ஆண்களும் பங்குபற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களோடு போட்டிபோடவேண்டிய கட்டாயத்தில் பெண்கள் இருக்கிறோம்.
ஆக வலைப்பந்தாட்டத்தில் சிறந்த வீராங்கனைகளை உருவாக்க வேண்டும். தமிழர்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது இலக்கு என்கின்றார்.

பி.ஏ. பட்டதாரியாக இருந்தாலும் விளையாட்டின் மீது கொண்ட அளவற்ற காதல் குடும்ப வாழ்க்கையைக் கூட துச்சமாக நினைக்க வைத்துள்ளது.

சுரேந்தினியின் வாழ்க்கை மொத்தமும் விளையாட்டுத்துறைக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு உரிய அங்கிகாரமும், கௌரவமும் நிச்சயம் இவருக்கு கிடைத்தேயாக வேண்டும்.

No comments:

Post a Comment