மதங்களைத் தாண்டி இணைந்த மனங்கள்!
காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா?
காதலில்லாமலே சாவா...?
உண்மைக்காதல் ஒருபோதும் அழிவதில்லை. இன்று தொடங்கி நாளை முடிவதல்ல. ஆயுள் முழுதும் நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்வது. இதற்கு சாதி, மதம் எதுவும் தடையல்ல. மனங்கள் இணைந்தால் மகிழ்ச்சியான வாழ்வுதான்.
அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகம் முழுவதும் இவரது காந்தக் குரலை காதலிக்காத தமிழர்கள் இல்லை. இவரது குரலாலே ஈர்க்கப்பட்டு காதல்வயப்பட்ட உள்ளங்கள் எத்தனை எத்தனையோ!
இலட்சோப லட்சம் ரசிகைகள் இருந்தாலும் அப்துல் ஹமீதின் இதயத்தை வென்ற ரசிகை, அவரது அன்பு மனைவி சசிக்கலா,
செல்வி சசிக்கலா திருமதி ஷாமிலா அப்துல் ஹமீட் ஆகி 40 வருடங்கள் முழுதாக முடிந்திருக்கின்றது. ஒரு இறுக்கமான காலகட்டத்தில் மதங்களைத் தாண்டி இணைந்தவர்கள் இவர்கள். இன்றும் அந்த அன்பில் சிறிதும் குறையின்றி வாழ்கிறார்கள் இந்த ஆதர்ஷ தம்பதியினர்.
அழகியின் காதலர்தின சிறப்பிதழுக்காக பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்ட அப்துல் ஹமீட் தம்பதியை சந்தித்தோம்.
மேள வாத்தியம், வாழ்த்துக்கள், உறவினர் நட்பு வட்டாரத்தின் நலவிசாரிப்பு என களைகட்டியிருந்த திருமண மண்டபத்தில் ஒருவழியாக இருவரையும் பிடித்து ஒரு இடத்தில் அமரச்செய்தோம்.
கம்பீரம் மாறாத குரல், அதேகனிவு, சுத்தமான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து பேச ஆரம்பித்தார்.
என்னை வாழவைக்கும் வானொலிதான் என் வாழ்க்கைத் துணையையும் அடையாளம் காட்டியது. ஷாமிலாவும் என் ரசிகையாகத்தான் அறிமுகமானார். நட்பு இறுக்கமாகி குடும்ப நண்பர்களாகினோம்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த நான் வானொலிக்கு அறிமுகமாகி சிறிது காலத்திலேயே தாயையும் இழந்தேன். உறவுகள் என்று சொல்லிக் கொள்ளும் வகையில் யாரும் இல்லை. அந்த சமயத்தில் எனது மனைவியின் குடும்பமே எனக்கு பக்கபலமாக இருந்தது. என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்களும் அவர்களே.
எங்களுக்குள் இருந்தது காதல் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அது ஒருவகை பாசம். ஒரு கட்டத்தில் எனக்கேற்ற துணை அவளென்றும் மனம் தீர்மானித்து. இருவரும் விருப்பத்தை வீட்டில் தெரிவித்தோம். பெற்றோரின் சம்மதத்தோடு எமது வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
எனக்கேற்ற துணை இவள்தான் என்று தோன்ற காரணம் சொல்லத் தெரியவில்லை. இது எப்படி, எப்போது என்றும் தெரியாது. அதுவாக தோன்றியது. என் வாழ்க்கையின் திருப்பு முனை. என்னில் பாதி. இவள்தான் உனக்கேற்ற துணை என்பதை உள்ளுணர்வு உணர்த்தும். அந்த முடிவு சரியா? பிழையா? என்பதெல்லாம் அதற்குத் தெரியாது. வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். நாங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டோம். நாங்கள் எடுத்த முடிவு சரியென்றே நினைக்கிறோம்.
மதம் எங்களுக்கு தடையாக இல்லை. எந்த மதம் என்றாலும் நாங்கள் இருவரும் ஒரே மதத்தில் இருக்க வேண்டும் என்பது என் மாமனாரின் விருப்பம். அதன்படி இஸ்லாமிய மார்க்கத்தையே இருவரும் பின்பற்றுகிறோம். இப்படியொரு புரிந்துணர்வுள்ள மாமனார் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.
எங்கள் இருவரது குடும்ப வாழ்க்கையில் இறுதிவரை மறக்க முடியாத நபர் (சம்பவம்) அறிவிப்பாளர் விசாலாட்சி ஹமீட்.
என்னைவிட வயதில் மூத்தவர். ஆனால், அறிவிப்புத்துறைக்கு எனக்குப் பின்னால் அறிமுகமானவர். என்னுடைய திருமணத்திற்குப் பின் அவர் அறிமுகமானது தான் நிலைமையை தர்மசங்கடமாக்கியது. என்னுடைய கலப்புத் திருமணம் என்பதால் அவர்தான் என்னுடைய மனைவி என தவறான புரிதலை பலருக்கு ஏற்படுத்தி விட்டது. இந்த சந்தேகத்தைப் போக்க பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனது. விசாலாட்சியின் கணவர் ஹமீட் இந்தியாவில் இறந்துவிட்டார். மரண அறிவித்தல் கேட்ட அனைவரும் என் மனைவிக்கு ஆறுதல், இரங்கல் தெரிவித்தனர்.
நேரம் காலம் இன்றி ஓடித்திரியும் எனக்கு என் மனைவிதான் பக்கபலம். என் கலைப்பணி சீராகத் தொடர குடும்ப பொறுப்புக்களை தன் தலையில் சுமந்தவர். பெரும்பாலான கலைஞர்களுக்கு இந்த வரம் அமைவதில்லை. புரிந்துணர்வுள்ள மனைவி அமைந்தால் நிம்மதியான, சுபீட்சமான வாழ்வும் நிச்சயம். அந்தவகையில் நான் பாக்கியசாலி என்று புன்னகையோடு சொல்லி முடிக்கிறார் அப்துல்ஹமீட்.
அத்தனையையும் இடையூறின்றி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த திருமதி ஹமீட்,
நான் அவரது தீவிர விசிறி. அவரே எனக்கு துணையாய் அமைவார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஒரு பிரபலம் மதம் மாறுவது என்பது அத்தனை இலகுவானது அல்ல. அதனால் நான் மாறினேன். எந்த மதமாக இருந்தால் என்ன இறைவன் ஒருவன்தானே. எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம்.
உலகம் முழுதும் சுற்றும் கலைஞர். அவரிடமிருந்து ஒரு கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த காலமும் உண்டு. இப்போதுள்ள தொழில்நுட்படம் எங்களுக்குள்ளான இடைவெளியை போக்கி விட்டது. இன்றைய இளைஞர்களிடம் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வுக்கு இடமில்லை. அதுதான் அவர்கள் வாழ்க்கை தோற்பதற்கு காரணம். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது. அதுதான் இத்தனை வருட வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம்.
அவரை அடைந்ததே எனது பாக்கியம். இதைத் தவிர வேறென்ன வேண்டும் எனக்கு? என்று புன்னகைக்கிறார்
ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைந்து 40 ஆண்டுகள் குறையின்றி நிறைவாக கடந்துவிட்டேன் என்ற பெருமிதம், ஒருவித பிரகாசம் அந்த புன்னகையில் தெரிகிறது.
இந்த ஆதர்ஷ தம்பதி இன்னும் பல ஆண்டுகள் இன்பமாய் வாழட்டும் என வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment