தந்தையருக்கும் குழந்தைப் பேறு விடுமுறை?
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பரிந்துரை
குழந்தைக்கு யார் முக்கியம்?
அம்மாவா? இல்லை இல்லை அப்பாவா?
ஒரு மனிதனுக்கு இரண்டு கண்ணும்தான் முக்கியம். ஆனால் அதில் எந்தக் கண் வேண்டும் என்பது போல் இருக்கிறது.
சரி இந்த பொறுப்பு எல்லாவகையிலும் சரியான முறையில் நிறைவேற்றப்படுகிறதா? அதற்கான கட்டமைப்ப எம்மிடத்தில் இருக்கின்றதா? என்றால் அது கேள்விக்குறிதான்.
ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் இருக்கும் தாய்-தந்தையின் பங்களிப்பு அவர்களை பெற்று வளர்ப்பதில் இருப்பதில்லை.
இதனாலேயே குழந்தையின் வாழ்வில் தந்தையின் பங்களை உணர்ந்து அதை அனுபவிக்கச் செய்யும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சில திட்டங்களை வகுத்து வருகின்றது. அதில் ஒன்றுதான் பிரசவத்தின் போது தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பது.
இத்திட்டமானது கடந்த 6-7 வருடங்களாக நடைமுறையில் இருக்கின்றபோதும் அது பலருக்குத் தெரியாமலேயே இருந்துள்ளது. கடந்த காலங்களில் பிரசவத்தின் போது 3 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதை அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமே அனுபவித்தனர். அதுவும் சிலரே இந்த விடுமுறையை பெற்றுக்கொண்டனர். தனியார் துறையினருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியாது.
இந்நிலையிலேயே இத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அவ் விடுமுறையை அதிகரிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் தந்தை பிள்ளையுடன் செலவிடும் காலம் அதிகரிக்கும். அதனூடாக பிள்ளைக்கும் தந்தைக்குமான உறவு பலப்படும். பொறுப்பும் அக்கறையும் கூடும் என்பதே இவர்களது எண்ணம்.
இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டமே சரியா பிரயோகிக்கப்படாமல் இருக்கையில் வரப்போகும் திட்டம் எந்தளவு அனைத்து தரப்புக்கும் சாதகமாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.
பிரசவம் என்பது மறு ஜென்மம் என்றே பார்க்கிறோம். இந்த மறுஜென்மத்தில் கணவனின் ஆதரவு ஒரு பெண்ணுக்கு கிடைக்குமாயின் அதுவே அவளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய சக்தி.
குழந்தை பிறந்ததும் அதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோடு முடியும் கணவனின் கடமை அடுத்து அந்தக் குழந்தை வளர்ந்து பாடசாலை செல்லும் போது உயிர்பெறுவதாகவே பெரும்பாலான தந்தைகள் இருக்கின்றனர். இதுவல்ல ஒரு தந்தையின் பங்கு. குழந்தை பிறந்தது முதல் அதன் ஒவ்வொரு அசைவிலும், வளர்ச்சியிலும் தந்தை வாழவேண்டும். இந்த வரம் அரசு, தனியார், கூலித் தொழிலாளி என்றில்லாமல் அனைத்து தந்தையருக்கும் அமைய வேண்டும். இதற்கு திட்டத்தை வகுப்பவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்புக்குரியவர்கள்.
குழந்தைகள் எல்லாமே குழந்தைகள்தான். தரம் பிரித்து தந்தைக்கு விடுமுறை வழங்கும் வகையில் அவர்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல. இதை அதிகாரிகள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் உணரவேண்டும். தனக்கான இடத்தை தானே பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதை உணர்ந்ததினாலோ என்னவோ உலக செல்வந்தர்கள் வரிசையில் ஆறாவது இடத்திலிருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பிரசவத்தின் பின் இரண்டுமாத விடுமுறையை எடுத்துக்கொண்டதோடு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஆண்களுக்கும் பிரசவத்தின் பின் விடுமுறை வழங்கவும் முடிவு செய்தார்.
இதேபோல் பிரிட்டன் அரசு கடந்த வருடம் ஆண்களுக்கு பிரசவ விடுமுறை வழங்கும் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தியது.
பிரசவ நேரத்தின் போது பிரிட்டன் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 - 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை உருவாக்கியது.
இதேபோன்று வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
ஆக இலங்கையிலும் 3 நாட்கள் விடுமுறை என்ற கலாசாரம் மாற்றம் பெற்று விடுமுறை அதிகரிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் தார்ப்பரியம் உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்போடு செயற்பட வேண்டியது அவசியம். குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு தந்தையின் அரவணைப்பு அவசியம்.
No comments:
Post a Comment