Wednesday, March 30, 2016

நான் கடவுளை ஒருபோதும் நொந்து கொள்ளப்போவதில்லை

நான் கடவுளை ஒருபோதும் நொந்து கொள்ளப்போவதில்லை


மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்துக்கும் உடல் உருப்புகள் எத்தனை முக்கியம் என்பது அதை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
நாம் பாவிக்கும் செல்போன் ஒரு நாள் இல்லை ஒரு மணி நேரம் நம்மிடம் இல்லையென்றால் நமக்கு ரெண்டு கையும் இல்லாத பீலிங் வந்துவிடும். ஆனால் கைகள் இரண்டும் இன்றி தன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்று எதிர்நீச்சல் போடுகிறார் வவுனியாவைச் சேர்ந்த சப்திகா சீலன்.

பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்த சப்திகா ஒரு கிபோர்ட் பிளேயர். 2013ஆம் ஆண்டு யாழ் இசை விழாவில் சிறந்த கீபோர்ட் பிளேயருக்கான விருதையும் பெற்றுள்ளார். வெறும் 13 வயதில் தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்கிறார். சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சப்திகாவும் படிக்கிறார்.

குறைகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாது ஏனைய குழந்தைகளுக்கு நிகராக போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கிறார். அவரின் குரலிலோ, முகத்திலோ எந்தவொரு கலக்கத்தையும் யாராலும் கண்டுகொள்ள முடியாது. அத்தனை தெளிவாக வாழ்கிறார் சப்திகா.

நான் பிறந்ததும் என் பெற்றோரால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் என்மீது எந்தவொரு வெறுப்பையோ, அனுதாபத்தையோ அவர்கள் காட்டவில்லை. மற்ற சகோதரிகளைப் போலவே என்னையும் சரிசமமாக வளர்த்தார்கள். அவர்களுக்கு கிடைக்கும் அத்தனையும் எனக்கும் கிடைத்தது. என்னுடைய பெற்றோர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுறாங்க.
இன்று என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் அம்மப்பாதான். நான் சோர்ந்து போகாமல் இருப்பதற்கு உற்சாகம் தந்தவர். கீபோர்ட் வாசிக்கிறேன் என்றால் அதுவும் அவருடைய முயற்சிதான். ஆரம்பத்தில் மியூசிக் மீது அத்தனை பிரியம் இருக்கவில்லை. அம்மப்பா தான் கொஞ்சம் கொஞ்சமா படிப்பிச்சார். தனியா இருக்கிற நேரங்களில் ரேடியோவில் போகும் பாடல்களை நானே பிளே பண்ணப் பழகினேன் என்கிற சப்திகாவுக்கு இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் ரொம்ப இஷ்டம். அதிலும் 3 படத்தில் வரும் தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் தூரம் போ பாட்டு பேவரிட். மனசு சங்கடப்படும்போதெல்லாம் அந்தப்பாடலை வாசிப்பேன் என்கிறார்.

எந்தச் சூழ்நிலையிலும் நான் தன்னம்பிக்கை இழக்கிறதில்ல, மற்றவங்கள மாதிரி நானும் சராசரி பெண்தான்னு அடிக்கடி மனசுக்கு சொல்லிக்கொள்வேன். என்னதான் இருந்தாலும் அப்பப்போ  சில சம்பவங்கள் கொஞ்சம் கஷ்டத்த கொடுக்குது. ஸ்கூல்ல, வெளியில எல்லாம் நிறைய போட்டிகள் நடக்கும். அது எல்லாத்திலயும் பங்குகொள்றது கொஞ்சம் கஸ்டமா இருக்கு. எனக்கு என்மீது நம்பிக்கை இருக்கு. ஆனால் மற்றவங்களுக்கு அந்த நம்பிக்கை எப்போ வருமொன்று தெரியாது.
நல்லா படிச்சி இன்ஜினியர் அல்லது லோயரா வரணும், அதோட என் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணனும்.

இறைவன் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் படைக்கின்றார். என்னையும் ஏதோவொரு நோக்கத்தோடுதான் படைத்துள்ளார். அதனால் நான் கடவுளை ஒருபோதும் நொந்து கொள்ளப்போவதில்லை. அதற்காக வருந்துவதும் இல்லை. என்னால் இந்த சமூகத்தை சமாளிக்க முடியும் என்கிறார் நம்பிக்கையோடு.

No comments:

Post a Comment