Thursday, March 17, 2016

இந்த உலகம் பெண்களுக்கானதா?

இந்த உலகம் பெண்களுக்கானதா?
உலகெங்கும் அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்



பெண்களுக்கு என்ன குறை ? அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றுகிறது ஒரு குரல். சமூகத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் பெண் சுதந்திரமாக சுற்றி முழுமையாக வீடு வந்து சேர முடிகிறதா. ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெண் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறது எதிர்க்குரல்.

இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 25ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடியபோது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் திகதியை சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு  தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இம்முறை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, உலகிலுள்ள நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது ஐ.நா.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஐ.நா. உலகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க உலகம் முழுவதும் பேரணிகள், கால்பந்து போட்டிகள், பாடசாலைகளில் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் ்ஒரஞ்ச் தி வேர்ல்ட்ீ என்ற பெயரில் தீவிர பிரசாரம் செய்ய ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பிரசார நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்படுகின்றது. இவ்வாறு இம்முறை இந்த 16 நாட்களிலும் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 450 நிகழ்ச்சிகளை நடத்த ஐ.நா. திட்டமிட்டிருந்தது. இதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது.
இதனடிப்படையில் உலக நாடுகளில் ஆண்-பெண் வேறுபாடின்றி ஒரேஞ்ச் நிறத்தில் உடையணிந்து, வன்முறை ஒழிப்பு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். அரசும் முக்கியமான கட்டிடங்கள், சுற்றுலாத்தலங்களை ஒரேஞ்ச் வண்ணத்தில் ஒளிரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதற்கான திட்டமிட்ட செயல்பாடுகளை ஊக்குவித்தல், வன்முறைக்கு ஆளான பெண்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குதல், அவர்களுக்கு உடல், மன நல உதவிகளை பெற்றுக்கொடுத்தல், ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்தல் போன்ற செயற்பாடுகள் தனிநபர் தொடங்கி அரசு வரையிலான அனைத்து மட்டங்களிலும் இதற்கான முயற்சிகள் இன்றியமையாதவையாகின்றது.

ஆக இவற்றை வைத்து பார்க்குமிடத்து முதல் உலக நாடுகள் தொடங்கி மூன்றாம் உலக நாடுகள்வரை பெண்களின் நிலை வருந்தத்தக்கதாகவே இருக்கின்றது.

உலகளவில் ஒரு பெண் அவளின் வாழ்நாளில் ஒருமுறையாவது உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். தனிமனிதர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தச் சமூகமே பெண்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்துவதையே இது உணர்த்துகிறது. ஒரு சமூகம், வன்முறையை உருவாக்கி, அங்கீகரித்து, செயல்படுத்த முடியும் என்று சொன்னால், அதே சமூகம் அதைத் திட்டமிட்டுத் தடுக்கவும் முடியும் என்பது ஐ.நா. கருதுகிறது.

ஆனால், அது அவ்வளவு எளிதானதா?
ஓர் உயிர்க்கொல்லி நோய்க்கான வைரஸ் எதுவெனக் கண்டறிந்து தடுப்பதுபோல் நாம் இதனைத் தடுத்துவிட முடியாது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் காரணமான வைரஸ்கள் எண்ணற்றவை, தொன்மையானவை, நம்பிக்கை, பண்பாடு, கருத்தியல் சார்ந்தவை. ஆண் - பெண் பாகுபாட்டால் தொடர்ந்து நிகழ்பவை. எனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் செயல்பாடுகளும் பன்முகத்தன்மை கொண்டதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக நிதியம் மற்றும் பல்வேறு நாடுகளின் சட்டங்களும் திட்டங்கள்  பெண்களின் நலன், உரிமைகள், முன்னேற்றம், பாதுகாப்பு போன்றவற்றில் தொடர்ந்து அக்கறைகாட்டி வருகின்ற போதிலும் பெண்கள் அவற்றை அடைவதற்குப் பெரும் தடையாக இருப்பது இந்த பெண்களுக்கு எதிரான வன்முறை.

சமீபத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை என ஆய்வுவொன்று நடந்தது. இந்த ஆய்வில் சுகாதாரப் பிரச்சினை, பாலியல் வன்முறை மற்று பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு, மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதல், ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்சினைகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

இதில் ஆப்கானிஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான அதிகளவான கொடுமைகள் நடப்பதால், அது பெண்களுக்கான அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் உலகளவில் பெண்களின் பயங்கர நிலை குறித்து எடுக்கப்பட்ட மற்றொரு அண்மைய தரவுகளின் படி ஆப்கானிஸ்தானில்தான் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இரண்டாவதாக ஆபிரிக்காவின் கொங்கோ உள்ளது. காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதோடு, வருடத்தில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறனர்.

மூன்றாவதாக பாகிஸ்தான் உள்ளது. அங்குதான்  பெண்களுக்கு எதிரான வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு 2010ஆம் ஆண்டின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடும்ப மரியாதை என்ற காரணத்தை வைத்து ஏறத்தாழ 800 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 8 பேர் என்ற கணக்கில் 2,900 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் பாகிஸ்தானில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பஞ்சாப் மாகாணத்திலே மிக அதிகளவில் அதாவது 2,600 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் வெறும் ஆய்வுகள் வெளியிடும் தகவல்கள் மாத்திரமே. இதற்கும் மேலாக எத்தனையோ நாடுகள் பெண்களுக்குகெதிரான கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன. அவைகள் கணக்கிலிடப்படுமானால் இந்தச் சமூகம் தன்னிடத்திலிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையும் இழந்துவிடக்கூடும்.

ஆக வன்முறை அற்ற வாழ்வே ஆண் - பெண் சமத்துவம், அமைதி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment