காமுகர்கள் குழந்தைகளை இலக்கு வைப்பது ஏன்? மனநல வைத்தியர் கணேஷன்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் அதிகமாக ஆசிரமங்களில் சேர்க்கப்படுகின்றன. அங்கும் துஷ்பிரயோகங்கள் தொடர்கிறது
நாம் எப்போதுமே தெரியாதவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்காதே, தெரியாதவர்கள் கூப்பிட்டால் போகாதே என தெரியாதவர்கள் பற்றியே கவனத்தை செலுத்துகின்றோமே தவிர தெரிந்தவர்கள் பக்கம் நம் கவனம் திரும்புவதில்லை.
வித்யா, சேயா.............. இன்னும் இன்னும் எத்தனையோ சிறுமிகள் காமக் கொடூரன்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறன. இப்படியே போனால் நாளைய சந்ததியின் நிலை. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? என்றெல்லாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், பெண்களின் உடை, நடத்தைதான் இத்தனைக்கும் காரணம்.
சினிமா மோகம் கலாசாரத்தையே சீரழிக்கிறது.
போதை மயக்கம் இவர்களை இப்படியெல்லாம் செய்யத் தோன்றுகிறது.
இல்லை இப்படிப்பட்ட கொடூரத்தை சாதாரணர்களால் செய்ய முடியாது மனநோய் உள்ளவர்கள்தான் காரணம்.
இப்படி ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உண்மையகில் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. மனிதர்கள் இப்படி மோசமாக கலாசாரத்தையும் மனிதாபிமானத்தையும் குழிதோண்டிப்புதைத்து விட்டு காமத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?
கொழும்பு தேசிய உளநல மருத்துவமனையின் உளநல வைத்திய நிபுணர் கணேஷனிடம் கேட்டோம்.
இப்போது தான் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என்பதற்கு ஆதாரம் இல்லை. தற்போது கூடுதலாக வெளிக்கொணரப்படுகின்றன என்பதே உண்மை. அதிகமான துஷ்பிரயோகங்கள் மறைக்கப்படுகின்றன. தற்போது வெளிவரும் சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலி இடம்பெற்றதனாலேயே இந்தளவு பேசவும் மக்கள் கொந்தளிக்கவும் காரணமாகியிருக்கின்றது.
இன்று 30இல் ஒரு பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறது. இதில் 100இற்கு 90 வீதமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்தவர்களினாலேயே இடம்பெறுகின்றன. எஞ்சிய 10 வீதமே தெரியாதவர்களால் இடம்பெறுகின்றது. அந்த 90 வீதத்தை மறந்து அல்லது மறைத்துவிட்டு 10 வீதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் பேசுகிறோம். இதை வைத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்பவர்கள் இவர்கள்தான் என அடையாளப்படுத்துவது சாத்தியமற்றது. அவர்களுக்கு நோய் முத்திரை குத்தவும் முடியாது. மனசாட்சியை குழிதோன்றி புதைத்தவர்களினாலேயே இப்படி நடந்துகொள்ள முடியும் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்.
இன்று நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அனைத்துமே குற்றத்தை செய்தால் தண்டனை இல்லை. தப்பித்துவிடலாம் என நன்கு அறிந்து செய்யப்படுகின்றன. இது நோய் அல்ல. அப்படி சொல்லி தப்பிக்கவும் முடியாது. உளநல மருத்துவர் என்ற ரீதியில் இதனை முற்றாக மறுக்கிறேன். துஷ்பிரயோகங்கள் நடக்க பெண்கள்தான் காரணம், அவர்கள் உடை, நடையில்தான் பிரச்சினை இருக்கிறது என்பதெல்லாம் அவர்களை கைகாட்டிவிட்டு தப்பிக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் வாதம்.
பாலியல் இச்சை அதிகமானவர்கள் பாலியல் தொழிலாளர்களை நாடலாமே ஏன் சிறுவர்களை நாடுகிறார்கள். பாலியல் தேவையை சிறுவர்களால் பூர்த்தி செய்ய முடியாது. வளர்ந்தவர்களிடத்தில் கிடைக்கும் அதே உணர்வு குழந்தைகளிடத்தில் இருக்காது. ஆனாலும் ஏன் குழந்தைகளை நாடுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இவ்விடயத்தை மறைத்து விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
அண்மைய ஆய்வுகளின் படி இலங்கையில் 43 சதவீதமான துஷ்பிரயோகங்கள் வீட்டுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. குழந்தைகள் வெளியில் சொல்ல மாட்டார்கள், பயம், வெளியில் தெரிந்தால் வெட்கம் இதனாலேயே அவர்கள் அத்துமீற வசதியாகின்றது.
துஷ்பிரயோகம் செய்பவர் முடி வளர்த்திருப்பார், பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார், அழுக்கான ஆடை அணிந்திருப்பார் என அடையாளப்படுத்த முடியாது. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கின்ற ஆசிரியர், பிள்ளையின் உறவினர்கள், பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்பவர், அயலவர் என எல்லோரும் இதைச் செய்கின்றனர்.
நாம் எப்போதுமே தெரியாதவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்காதே, தெரியாதவர்கள் கூப்பிட்டால் போகாதே என தெரியாதவர்கள் பற்றியே கவனத்தை செலுத்துகின்றோமே தவிர தெரிந்தவர்கள் பக்கம் நம் கவனம் திரும்புவதில்லை. இதற்காக எல்லோரையும் சந்தேகப்படச் சொல்லவில்லை. அவர்களிடத்திலும் கவனமாக இருக்கவே சொல்கிறோம்.
பெரியோரை மதி, அவர்கள் சொல்வதை கேள் என்று நாம் சிறுவயதிலேயே சொல்லிக் கொடுக்கிறோம். இன்று வயதானவர்களினாலேயே துஷ்பிரயோகம் நடக்கிறது. அவர்கள் சொல்வதை குழந்தைகள் ஏற்றுக் கொள்கிறார்கள். எதிர்ப்பதில்லை. இதற்காக பெரியவர்களை மதிக்க வேண்டாம் என்பது அர்த்தமல்ல. பிள்ளைகளை சுயமாக சிந்தித்து செயலாற்ற விடுங்கள்.
பெற்றோர் பிள்ளைக்கிடையில் சிறந்ததொரு உறவு பேணப்பட வேண்டும். பிள்ளைகள் எதையாவது சொல்கிறதென்றால் அதற்கு காது கொடுங்கள். நீ பொய் சொல்கிறார், அப்பா அப்படி செய்யமாட்டார், மாமா அப்படி செய்ய மாட்டார், யாரிடமும் சொல்லாதே இப்படி அவர்களை மட்டுப்படுத்தாதீர்கள். இது உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளுக்கு ஏற்படும் மாற்றத்தை அவதானியுங்கள். கல்வி, விளையாட்டு, சோர்வு, அழுகை இப்படி ஏதோவொருவகையில் அவர்கள் வெளிப்படுத்தலாம்.
இன்று துஷ்பிரயோகம் செய்யும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். இது உண்மை. ஆக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களை தண்டிக்காமல் அவர்களை ஆற்றுப்படுத்த நல்ல திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் அதிகமாக ஆசிரமங்களில் சேர்க்கப்படுகின்றன. அங்கும் துஷ்பிரயோகங்கள் தொடர்கிறது. இது இவர்கள் மனதையும், உடலையும் வெகுவாக பாதிக்கிறது. தொடர்ந்து இவர்களும் அதையே செய்யத் துணிகிறார்கள்.
பாடசாலைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளானவர்களை ஏற்க மறுக்கிறது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களை மீட்பதில் துறைசார்ந்த வல்லுனர்களின் ஈடுபாடு குறைவாகவே இருக்கின்றது.
இவை எல்லாம் சரிசெய்யப்பட்டாலும் சட்டத்தின் ஓட்டை அடைக்கப்பட வேண்டும். பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிடிக்கப்பட்ட ஒருவர் இரண்டு வாரத்தில் பெயிலில் வெளியில் வருகிறார். அடுத்து அந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு செல்ல 8-10 வருடங்கள் எடுக்கும். அதற்குள் குற்றவாளி இன்னும் பல துஷ்பிரயோகங்களை செய்து விடுகிறார். அல்லது சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார். இதை பார்க்கும் இன்னொருவருக்கு நானும் இதைச் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றுகிறதே தவிர பயம் வரவில்லை.
6 வயதில் ஒரு பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளானால் அந்த வழக்கு முடிவதற்குள் பிள்ளைக்கு திருமணமே நடந்துவிடும். அதற்குப் பின் கோர்ட், கேஸ் என்று அலைவதில் அர்த்தமும் இல்லை. அவருக்கு தெம்பும் இருக்காது. இந்த நிலை மாறவேண்டும். உடனடியாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று காரணம் காட்டி தப்பிக்க முனைவதில் அர்த்தமில்லை என்கிறார் டொக்டர் கணேஷன்.
No comments:
Post a Comment