Wednesday, March 30, 2016

சேலை அணிந்தால்தான்

சேலை அணிந்தால்தான் கலாசாரம் பாதுகாக்கப்படுமா?

சர்ச்சையைக் கிளப்பு யாழ் பல்கலைக்கழக ஆடைக்கட்டுப்பாடு

நான் கடவுளை ஒருபோதும் நொந்து கொள்ளப்போவதில்லை

நான் கடவுளை ஒருபோதும் நொந்து கொள்ளப்போவதில்லை


மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினத்துக்கும் உடல் உருப்புகள் எத்தனை முக்கியம் என்பது அதை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
நாம் பாவிக்கும் செல்போன் ஒரு நாள் இல்லை ஒரு மணி நேரம் நம்மிடம் இல்லையென்றால் நமக்கு ரெண்டு கையும் இல்லாத பீலிங் வந்துவிடும். ஆனால் கைகள் இரண்டும் இன்றி தன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்று எதிர்நீச்சல் போடுகிறார் வவுனியாவைச் சேர்ந்த சப்திகா சீலன்.

பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்த சப்திகா ஒரு கிபோர்ட் பிளேயர். 2013ஆம் ஆண்டு யாழ் இசை விழாவில் சிறந்த கீபோர்ட் பிளேயருக்கான விருதையும் பெற்றுள்ளார். வெறும் 13 வயதில் தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்கிறார். சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சப்திகாவும் படிக்கிறார்.

குறைகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாது ஏனைய குழந்தைகளுக்கு நிகராக போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கிறார். அவரின் குரலிலோ, முகத்திலோ எந்தவொரு கலக்கத்தையும் யாராலும் கண்டுகொள்ள முடியாது. அத்தனை தெளிவாக வாழ்கிறார் சப்திகா.

நான் பிறந்ததும் என் பெற்றோரால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் என்மீது எந்தவொரு வெறுப்பையோ, அனுதாபத்தையோ அவர்கள் காட்டவில்லை. மற்ற சகோதரிகளைப் போலவே என்னையும் சரிசமமாக வளர்த்தார்கள். அவர்களுக்கு கிடைக்கும் அத்தனையும் எனக்கும் கிடைத்தது. என்னுடைய பெற்றோர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுறாங்க.
இன்று என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் அம்மப்பாதான். நான் சோர்ந்து போகாமல் இருப்பதற்கு உற்சாகம் தந்தவர். கீபோர்ட் வாசிக்கிறேன் என்றால் அதுவும் அவருடைய முயற்சிதான். ஆரம்பத்தில் மியூசிக் மீது அத்தனை பிரியம் இருக்கவில்லை. அம்மப்பா தான் கொஞ்சம் கொஞ்சமா படிப்பிச்சார். தனியா இருக்கிற நேரங்களில் ரேடியோவில் போகும் பாடல்களை நானே பிளே பண்ணப் பழகினேன் என்கிற சப்திகாவுக்கு இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் ரொம்ப இஷ்டம். அதிலும் 3 படத்தில் வரும் தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் தூரம் போ பாட்டு பேவரிட். மனசு சங்கடப்படும்போதெல்லாம் அந்தப்பாடலை வாசிப்பேன் என்கிறார்.

எந்தச் சூழ்நிலையிலும் நான் தன்னம்பிக்கை இழக்கிறதில்ல, மற்றவங்கள மாதிரி நானும் சராசரி பெண்தான்னு அடிக்கடி மனசுக்கு சொல்லிக்கொள்வேன். என்னதான் இருந்தாலும் அப்பப்போ  சில சம்பவங்கள் கொஞ்சம் கஷ்டத்த கொடுக்குது. ஸ்கூல்ல, வெளியில எல்லாம் நிறைய போட்டிகள் நடக்கும். அது எல்லாத்திலயும் பங்குகொள்றது கொஞ்சம் கஸ்டமா இருக்கு. எனக்கு என்மீது நம்பிக்கை இருக்கு. ஆனால் மற்றவங்களுக்கு அந்த நம்பிக்கை எப்போ வருமொன்று தெரியாது.
நல்லா படிச்சி இன்ஜினியர் அல்லது லோயரா வரணும், அதோட என் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணனும்.

இறைவன் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் படைக்கின்றார். என்னையும் ஏதோவொரு நோக்கத்தோடுதான் படைத்துள்ளார். அதனால் நான் கடவுளை ஒருபோதும் நொந்து கொள்ளப்போவதில்லை. அதற்காக வருந்துவதும் இல்லை. என்னால் இந்த சமூகத்தை சமாளிக்க முடியும் என்கிறார் நம்பிக்கையோடு.

Tuesday, March 29, 2016

குழுந்தைகளைத் தாக்கும்

குழுந்தைகளைத் தாக்கும்
Coxsackie வைரஸ்!

மாதம் ஒரு புது வரவு மருத்துவத் துறைக்கு சவால் விடுக்கின்றது.

இந்நிலையில் இலங்கையில்  அண்மைய சில நாட்களாக வாய், கால், கைகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு புதுவித நோய்யொன்று குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது. இது குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவிவந்தாலும் பாராதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது அல்ல. மருந்து மாத்திரைகள் இன்றி குணப்படுத்தக்கூடியது என்பது இப்போதைக்கு நிம்மதி.

நமக்கு இது புதிய நோய் என்றாலும் ஏற்கனவே பல நாடுகளில் இந்த நோய்த் தொற்று காணப்படுகின்றது. கிட்டத்தட்ட சின்னம்மை போன்று இருந்தாலும் இது அம்மை நோய் அல்ல. பயப்பட வேண்டியதில்லை  என்கிறார்   தேசமானிய வைத்திய நிபுணரும், சுகாதார  அமைச்சின் மாகாண ஆலோசகருமான கிர்ஷாந்தன்.

இது ஒருவித வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகின்றது. அதிகரிக்கும் வெப்பம் காலநிலை மாற்றம் என்பவற்றால் இதன் தாக்கம் அதிகரித்திருக்கின்றதே தவிர இது எமக்குத் தெரியாத நோயொன்றும் அல்ல.

Coxsackie virus  என்ற வைரஸால் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட போலியோ நோயை ஏற்படுத்தும் கிருமியை ஒத்தது. ஆனால் அத்தகைய பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. கொப்பளிப்பான் (Chicken pox) போன்று மெல்லிய நீர்க் கொப்பளங்களாக இல்லாமல் சற்று மஞ்சள் நிறமாக ஓரளவு தடித்தவை. இதை கை, கால், வாய்ப்புண் நோய் எனலாம்? (Hand Foot and Mouth Disease)

 பெரும்பாலும் 2-6 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளையே இந்த நோய் தாக்குகிறது. குழந்தைகள் அத்தனை வலிமையானவர்கள் அல்ல. அவர்களின் பலவீனமே இதற்கு காரணம்.

சாதாரணமாக உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். வியர்வை, சிறுநீர், மலம் சரியான முறையில் வெளியேற்றப்படாவிட்டால் உடல் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும். ஏதோவொரு வகையில் வெப்பத்தை வெளியேற்ற
வேண்டியுள்ளது. இதனாலேயே இந்தக் கொப்புளங்கள் தோன்றுகின்றன.
இந்தநோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இலகுவில் தொற்றக்கூடியது. ஆக நோய்த் தொற்றுக்குள்ளான குழந்தைகளை தனிமையில் வைத்திருப்பது நல்லது. நோய் குணமடையும் வரை பாடசாலைகளுக்கு விடுப்பு கொடுங்கள்.

வாயைச் சுற்றி கொப்புளங்கள் ஏற்படுவதோடு, வாயிலும் புண் வரும். கை, கால்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும். லேசான காய்ச்சல் அல்லது அதிக காய்ச்சல் இருக்கும். வாயில் புண் இருப்பதால் எரிச்சல் ஏற்படும். அதனால் கார உணவுகளை தவிர்க்க வேண்டும். திரவ உணவுகளே       சிறந்தவை. உடலை குளிர்மையடையச் செய்யும் உணவுகளை கொடுக்க வேண்டும்.
அம்மை நோயை குணப்படுத்த வாழை இலை படுக்கை, வேப்ப இலை பயன்படுத்துவதைப் போன்று வேப்ப இலை, பச்சை மஞ்சள், மரமஞ்சள் கட்டை எல்லாவற்றையும் அவித்து குடிக்கக் கொடுக்கலாம். வாசனை மிக்க சவர்க்காரங்களை தவிர்த்து அன்டிபயோடிக் சவர்க்காரங்களை பாவிப்பது நல்லது. உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் பாஸ்புட், கோதுமை உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மருந்து கொடுப்பதால் மேலும் வெப்பம் கூடுமே தவிர, குணமடையாது. ஆக பிரத்தியேக தடுப்பு மருந்து ஏதும் தேவையில்லை. சரியாக ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும்.

Sunday, March 27, 2016

பூசி மெழுகாமல் உண்மையைச் சொல்வதால்

பூசி மெழுகாமல் உண்மையைச் சொல்வதால் சர்ச்சைக்கு ஆளாகி நிற்கிறேன்!
இலங்கைத் திரைப்பட இயக்குநர் சுமதி!


இரண்டு மணிநேரம் தியேட்டரில் அமர்ந்து பார்த்து விசில் அடித்து, கைதட்டிவிட்டுப் போவதற்காக நான் படம் செய்யவில்லை.  எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக் கொள்கிறோமா? அவ்வாறுதான் எனது படைப்புகளும். 


 ஒரு திரைப்படத்தின் ஆணி வேர் இயக்குநர்தான். நிறைய சுவாரஸ்யங்களையும், சவால்களையும் உள்ளடக்கிய இயக்குநர் பொறுப்பு தமிழ்த்திரையுலகத்தைப் பொறுத்தவரை ஆண்களின் கைகளில் மட்டுமே நீடித்துக் கொண்டிருக்கிறது... அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது, பெண்களும் இயக்குநராகலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் சினிமாத்துறையில் வளர்ச்சிக்கான பாதையை நோக்கி அடியெடுத்துவரும் இலங்கையை பொறுத்தவரையில் பெண் இயக்குநர் என்பது அத்தனை சாதாரணமானதல்ல,.

இலங்கைப் பெண் இயக்குநர் சுமதி.
அடிப்படையில் விரிவுரையாளர், கவிஞர், எழுத்தாளர், நாடக செயற்பாட்டாளர்  என பல முகங்களைக்  கொண்ட இவர் பிரளயம், ஒரேஞ்சஸ் ஆகிய இரு குறுந்திரைப்படங்களை எழுதி இயக்கியவர்.

இன்சேர்ச் ஒஃப் த ரோட் ஆவணப்படத்தின் பிரதியாளராகவும் செயற்பட்டுள்ளார். க்ரி கர்ணாட்டின் நாகமண்டலம்நாடகத்தை தமிழுக்கு மொழிபெயர்த்ததோடு, மௌனத்தின் நிழல்,   சுப பயணங்கள் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி, நடித்துள்ளார்.

முதன் முதலில் மலையக சமூகம் சார்ந்ததொரு படைப்பை உருவாக்கிய பெருமையும், அதில் எழுந்த சர்ச்சையும் இவரையே சாரும். இந்நிலையில் அண்மையில் பாடு அம்மா பாடு என்று ஒரு படத்தையும் திரையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அழகி இதழிலுக்காக இயக்குநர் சுமதியை சந்தித்தோம்.

சுமதி என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் சுமதி என்கிற அளவுக்கு உங்கள் படைப்புகள் எல்லாமே சர்ச்சையைக் கிளப்புகின்றனவே?
நான்  வேண்டுமென்று சர்ச்சையை தோற்றுவிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போதுமே அவர்களின் நல்ல பக்கத்தை மட்டுமே காட்ட வேண்டும். எதிர்மறையான விடயங்களை காட்டும்போது சர்ச்சையாக பார்க்கிறார்கள். தங்களுக்குத் தாங்கள் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு வாழ்கிறார்கள். அதை உடைத்தெறியவே நான் விரும்புகிறேன். எதையும் ஆழமான கண்கொண்டே பார்க்கிறேன். அதிலேயே என் கவனம் முழுவதும் இருக்கிறது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை இதுவரையில் சிந்தித்தது இல்லை. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டால் நல்லவர்கள் என்கிறார்கள். மாற்றுக்கருத்தை முன்வைத்தால் அது சர்ச்சையாக பார்க்கப்படுகின்றது. நான் என்ன செய்வது?

சினிமா உலகை நோக்கி திரும்பியது எப்படி?
ஏற்கனவே நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்ததால் சினிமாவிற்குள் புகுவது சிரமமாக இருக்கவில்லை. ஒரு 14 வயதிருக்கும் ஞஞுணாணாஞுணூ ண்டடிணீ ஞணிணாணாணிட் என்ற படம் நாடகத்துரையிலும் பயிலும் மாணவர்களுக்காக காண்பிக்கப்பட்டது. அப்போது நான் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணில் தெரிகிறது. அப்போதெல்லாம் நான் சொல்லிக்கொண்டிருப்பேன் நான் இப்படித்தான் படம் செய்ய வேண்டுமென. படிப்பை முடித்ததோடு சினிமாத்துறைக்குள் புகுந்துவிட்டேன். இன்று குறும்படம் என்று ஒரு கலாசாரம் எல்லோருக்குள்ளும் ஆட்டிப்படைக்கிறது. அது கவிதை எழுதுவது போன்று மாறிவிட்டது. அப்போது அப்படி அல்ல. நினைத்ததும் படம் செய்துவிட முடியாது. நீண்டகாலம் ஒரு இயக்குநரிடம் பணியாற்ற வேண்டி ஏற்பட்டது. அதற்கு பிறகு நானாகவே முன்வந்து படம் எடுக்க முயன்றேன். எனக்கு கிடைத்த ஒத்துழைப்பு இயக்குநராக்கியது.

இந்தத் துறையில் காலடி வைக்கும் போது இருந்த சுமதிக்கும், இப்போது இருக்கும் சுமதிக்கும் இடையிலான ஒற்றுமை என்ன?    வேற்றுமை என்ன?
ஒற்றுமை:- நான் எப்போதும் சமுதாய விழுமியங்களை எதிர்க்கும் படைப்புகளை செய்வதைத்தான் விரும்புகிறேன். அந்த நிலையிலிருந்து இன்றும் மாறவில்லை.
வேற்றுமை:- இப்போதெல்லாம் ஒரு கதை எழுதுவது என்று அமர்ந்தாலும் முதலில் காட்சிகள்தான் கண்முன் வந்து நிற்கின்றது. கதை எழுத முடிவதில்லை. அத்தோடு  தமிழ் சமூகத்திடையே சினிமா சார்ந்த முதிர்ச்சியான விமர்சனங்கள் இல்லை.                                                                   சினிமாவுக்கென இலக்கணம், ஆத்மா இருக்கிறது.  விமர்சகர்களுடன் கலந்துரையாடுவது கடினமாக இருக்கிறது. இப்போது தனிமையை உணர்கிறேன்.

உங்கள் படைப்புகள் யாருக்காக படைக்கப்படுகின்றன? 
மக்களுக்காகவே படைக்கிறேன்.

அப்படியானால் அவர்களின் ரசனைக்கு தீனிப்போடும் வகையில் அமைகின்றதா?
மக்களின் ரசனை என்று எதைச் சொல்கின்றீங்கள்  என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டு மணிநேரம் தியேட்டரில் அமர்ந்து பார்த்து விசில் அடித்து, கைதட்டிவிட்டுப் போவதற்காக நான் படம் செய்யவில்லை.  எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக் கொள்கிறோமா? அவ்வாறுதான் எனது படைப்புகளும். படங்களை பார்த்து எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை என்றவர்களும் அதைப்பற்றி விமர்சிப்பதை பார்த்திருக்கிறேன். விமர்சிக்கும் அளவு ஏதோ விளங்கியிருக்கிறதுதானே? படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கேள்விகள் எழவேண்டும். அவர்களின் உண்மை நிலை புரிய வேண்டும், அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது எதிர்பார்ப்பு.

பெண்கள் அதிகம் இயக்குநராக வர முடியாமைக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? 
ஆண்களால் ஆளப்படும் உலகில் இயக்குநர் மட்டுமல்ல எல்லாத்துறை சார்ந்த பெண்களும் முட்டிமோதியேதான் வாழ  வேண்டும்.  நடிப்பதற்கே பெண்கள் முன்வருவது சிரமமாக இருக்கிறது. இரவிரவாக காட்டு வழியே திரியவேண்டியிருக்கும், பொதிகளை சுமக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் எமது சமூகம் இடம்கொடுக்குமா என்றால் சந்தேகமே. சிலருக்கு உடல்,  மனம் ஒத்துழைப்பதில்லை. ஆண்கள் விடும் பகிடி கூட ஒரு பிரச்சினைதான். இதை எதிர்த்து போராட  வேண்டியிருக்கிறது. பெற்றோரை ஒரு கட்டத்திற்கு மேல் சமாளித்து விடலாம். திருமணம் முடித்துவிட்டால் இன்னும் சுமைதான். இதை எதிர்கொள்வதை பெண்கள் கஷ்டமான காரியமாக பார்க்கிறார்கள். இதனாலேயே ஆண்களைப்போல் பெண்கள் ஒரு துறையில் நிலைத்து நிற்பதில்லை.

ஒரு பெண் படைப்பாளியாக இச்சமூகத்தில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? ஆரம்ப கட்டங்களில் எப்படி இருந்தது?
எனக்கு பல உலகங்கள் இருக்கின்றன.  யுனிவர்சிட்டி என்னுடைய வீடு போன்றது. அங்கு எனக்கு முழுமையான வரவேற்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் வன்முறைகளுக்கு எதிரானவர் என்ற வகையில் மக்களோடு ஜீவிப்பது கஷ்டமாக இருந்தது. ஜனநாயக ரீதியான அரசியலோடு சம்பந்தப்பட்டதாகவே எனது படைப்புகள் அமையும்.  தற்போது என்னைப்பற்றி சில புரிதல்கள் ஏற்பட்டுள்ளது. எனது படைப்புகளுடன் நானும் வரவேற்கப்படுகின்றேன்.

நீங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றீர்களா? 
ம்ம்ம்... என்னால் முடிந்தவரை சுதந்திரமாக செயற்படுகிறேன் என நினைக்கின்றேன்.
நிச்சயமாக நான் இந்த விடயத்தை மாற்றியாக  வேண்டும் என நினைப்பது?
இங்கிருந்து படம் எடுக்கும் போது நிறையவே பணப்பிரச்சினையை சந்தித்தேன். அப்போது வாங்கிய கடன்கூட இன்னும் கொடுத்து முடியவில்லை. தொடர்ந்து படங்கள் எடுக்கும் போது பணம் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. அதற்கான அடித்தளத்தை சரியாக மாற்றியமைக்க வேண்டும்.

 உங்களின் அடுத்த கட்ட முயற்சி? 
இசையமைப்பாளர்கள் பற்றி ஒரு படம் எடுக்க  வேண்டும். அநேகமாக அந்தப்படம் தமிழ், முஸ்லிம் இசையமைப்பாளர்கள் சிங்கள இசைத்துறையில் எவ்வாறு இயங்கினார்கள் என்பது பற்றியதாக இருக்கும்.  முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பற்றி ஒரு கதையும் இருக்கிறது. இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு பணம்தான் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

அவையும் சர்ச்சகைளைக் கிளப்புமா? 
சிரிக்கிறார்,...

ஆடுவோம் பாடுவோம்,

ஆடுவோம் பாடுவோம், பறை முழங்குவோம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்!

மட்டு கல்லடி கடற்கரையில் நீதிக்காக முழங்கிய பறை! 

பறை!  பல நூற்றாண்டின் ஒட்டுமொத்த இருளையும் தட்டி எழுப்பிய பெருஞ்சத்தம். குரல் நெரிப்பை உணர்த்தக்கிடைத்த ஒரு கருவி. ஓர் அடையாளம், ஆயுதம். ஊழலையும் ஆதிக்கத்தையும் அம்பலப்படுத்தும் வெளிச்சம். உடலின், உள்ளத்தின் அடக்குமுறைகளின் ஒட்டுமொத்தக் கொந்தளிப்பின் வேட்கையை வெளிப்படுத்திய அதிர்வு.

இப்படிப்பட்ட பறை சாதியத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, எங்கோ ஒரு மூலையில் இறப்பு, திருவிழா என ஏதோவொரு சடங்கு, சம்பிரதாயத்திற்கு மட்டுமே பயன்படுகின்றது. இந்தப் பறை பெண்கள் தீண்டத்தகாத ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பு உடைத்தெறியப்பட்டு  மட்டக்களப்பில் ஆறு பெண்களால் நீதிக்கான பறை முழங்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தின கொண்டாட்டத்தில் உலகமே திலைத்திருக்க  கல்லடி கடற்கரை பகுதி பறை முழக்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்போம் என உறைத்தது.

நீதிக்கான பறை முழக்கம் மட்டக்களப்பிலுள்ள பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்களான  கமலா வாசுகி, கார்த்திகா, துஷாந்தி, ஸ்ரீதாரணி,  ராஜலக்ஷ்மி, நிரோஷினி ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.

பெண்களால் இணைந்து வேலை செய்ய முடியாது என்பார்கள். ஆனால் நாங்கள் ஆறு பேரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே கொள்கைகளைக் கொண்டவர்கள். ஒன்றாக இணைந்து செயற்படுகின்றோம். எங்களுக்கென தனி அமைப்புகள் எதுவும் இல்லை.
பெண்ணிலைவாதிகளும், பெண் செயற்பாட்டாளர்களும், பெண்ணிய கருத்துக்களோடு ஒத்துபோகும் நண்பர்களையும் இணைந்து இந்த ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.  உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கோடி மக்களின் எழுச்சி  நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

கடந்த மூன்று வருடங்காக இடம்பெற்று வரும்  ஒரு கோடி மக்களின் எழுச்சி  நிகழ்வில் சிறப்பம்சமே ஆர்ப்பாட்டம், போராட்டம், கொடி பிடிப்பு, கோஷமெழுப்பல் எதுவுமற்ற  ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம் என்பதுதான். இதன் நிமித்தமே நீதிக்கான பறை முழங்கியது.
கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் செய்யலாம். பெண்களுக்கான வன்முறைகளை ஒழிக்க இவர்கள் கையிலேந்திய ஆயுதம் பறை.

இந்த நிகழ்வை பார்வையிட்ட ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒருவகையில் இவர்களுக்கு உதவிபுரிந்தனர். இவர்களோடு இங்கு இயங்கி வரும் பல கலாசார குழுக்கள் இணைந்து கொண்டார்கள். பெண்கள் எழுச்சி, வன்கொடுமைகளுக்கு எதிரான பாடல்களை பாடினார்கள். மணல் ஓவியங்கள் வரையப்பட்டன.

கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளை எதிர்த்துப் பேசி, எழுதி, இயங்கி ஓய்ந்து போனவர்கள் அதனால் அடைய முடியாத வெற்றியின் வெளிப்பாடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.
பறை, தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி. உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. ஆதித் தமிழன் நமக்குக் கற்றுத்தந்த, விட்டுச்சென்ற கலைப் பொக்கிஷம். அத்தோடு பறை என்பது சொல், தெளிவாய்ச் சொல், உறத்துச் சொல் என்பதையும் உணர்த்துகிறது.  இருந்தாலும்  ஒரு சாதியை மட்டும் குறிப்பதாக அந்தச் சொல் இங்கு வேரூன்றிவிட்டது என்பதுதான் அவலம்!

அன்புக்குரிய நாளான காதலர் தினத்தை தெரிவு செய்து அந்த நாளில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன் கொடுமைகளை எதிர்த்து அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்த்த முனைந்தோம். அதற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மட்டுமே உரித்தானதாக கருதப்படும் பறையை கையில் எடுத்தோம் என்கிறார்கள் இந்தப் பெண்ணிலை செயற்பாட்டாளர்கள்.

இந்த நிகழ்வின் மூலம் நாம் யாரையும் புன்படுத்த முனையவில்லை. சொல்லப்போனால் எல்லோரையும் சந்தோஷப்பபடுத்தினோம். அத்தோடு எங்களது நோக்கத்தையும் வெளிப்படுத்தினோம்.
இப்படியொரு நிகழ்வை ஆரம்பிக்கும் போது குடும்பத்தின் ஆதரவு கேள்விக்குரியாகவே இருந்தது. இப்போது அவர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைத்துவிட்டது. நாங்கள் ஆறு பேரும் குடும்பத்தோடு சென்று இதில் பங்குபற்றினோம்.

ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து பறை பலகினோம். பறையுடன் செல்வதைப் பார்த்த ஒவ்வொருவரும் முகம் சுழித்தார்கள். ''பறை அடிக்கப் போறாங்களா? இவங்களா பறை அடிக்கிற ஆக்கள்?'' என்ற கேலிக்கு உள்ளானோம். சிலர் சாவுக்கு அடிக்கும் பறையை வீடுவழியே அடிக்கிறார்கள், இது மன  உளைச்சலை அதிகரிக்கிறது, பிள்ளைகளின் கல்வியை பாதிக்கிறது என்றெல்லாம் குற்றம் சுமத்தினார்கள்.  

தடைகளையும் தகர்த்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தோம். அந்த நாள் சந்தோஷத்தையும் உட்சாகத்தையும் ஏற்படுத்தியது. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக இதைவிட இன்னும் செயற்பட முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

Thursday, March 17, 2016

நாம் வாழத்தகுதியற்றவர்களா?

நாம் வாழத்தகுதியற்றவர்களா?


பஸ்ஸில் எங்கள் பக்கத்தில் இருக்கையில் அமர்வதற்கே சங்கடப்படுபவர்கள் எங்கள் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பார்கள்? தினம் தினம் எத்தனை முகங்கள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள். 


வீட்டில் பிள்ளைகள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முதலில் செய்வது வீட்டை விட்டு வெளியேற்றுவதுதான். அவர்களை புரிந்துகொள்வது இல்லை.  தெருவுக்குத்தள்ளப்படும் இந்தப்பிள்ளைகள் இந்த பாழும் சமுதாயத்தில் எப்படித்துயரப்படும் என பெற்றோர்களே சிந்திப்பதில்லை. 


நாங்க என்னங்க தப்புப் பண்ணோம். ஒரு குழந்தை பிறக்கும் போது ஆணோக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கொண்டாடுகிற பெற்றோர்கள், அந்தக்குழந்தை வளர்ந்த பின் ஆண் பெண்ணாவோ அல்லது பெண் ஆணாகவோ மாறிால் மாத்திரம் ஏன் அதை அவமானமாக நினைக்கிறார்கள்? வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள்? இதில் எங்கள் தவறுதான் என்ன?
என நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் கேட்கிறார் பூமி!

யாரும் தாங்கள் திருநங்கையாக பிறக்கவேண்டும் என்று விரும்பி பிறக்கவில்லை. எவரும் விரும்பி பெற்றெடுக்கவும் இல்லை. இருந்தும் கடவுளே தன் படைப்பில் தவறுசெய்கிறான். கடவுளின் தவறுக்கு நாங்கள் தண்டனை அனுபவிக்கிறோம் என்கிற பூமியின் பேச்சில் திருநங்கைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் எதிரொலிக்கிறது.

பூமி ஹரேந்திரன் (25வயது). எச்.ஐ.வி. தடுப்பு சம்பந்தமாக இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். மேலும் திருநங்கைகள் தொடர்பாக தமது கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு திருநங்கைகளுக்காக குரல் கொடுத்துவருகிறார்.

நீளக்கூந்தல் நெற்றித் திலகம், வகிட்டில் குங்குமம், பேச்சில் நளினம் என கொள்ளை அழகாகக் காட்சி தருகிறார் பூமி. இவரது உண்மைப் பெயர் பூமி அல்ல. தொலைக்காட்சி தொடரில் வரும் ஒரு நாயகியின் பெயர். அந்தப் பெயர் ரொம்பப் பிடித்திருந்ததால் அதையே என் பெயராக்கிக் கொண்டேன் என்கிறார்.

திருநங்கைகளின் வாழ்க்கை மிகத் துயரம் நிறைந்தது. எனது இந்தப் பயணம் 2010 இல் ஆரம்பமானது. அதுதான் என்னை நானே யாரென கண்டுபிடித்து எனது முகமூடியை தூக்கியெறிந்த காலம். எனது உணர்வுகளை, விருப்பத்தை குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. 2011ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு உதவிசெய்ய, வழிகாட்ட யாரும் இல்லை. இந்த நிலை ஏனையவர்களுக்கும் வரகூடாது. இதை மாற்ற வேண்டும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் என்னால் இயலுமானவரையில் அன்றிலிருந்து திருநங்கைகள் மீதான பார்வையை மாற்றுவதற்கு பாலமாக பயணிக்கிறேன்.

ஆரம்பத்தில் ஆண் உடலுக்குள் இருக்கும் ஒரு பெண்ணாகவே என்னை உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் விடியும்போது நான் ஒரு பெண்ணாக மாறியிருக்க வேண்டும் என கடவுளிடம் மன்றாடியிருக்கிறேன். அந்தக் கனவு இப்போது 75 வீதம் நனவாகியிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை மதம், கலாசாரம் ரீதியான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அங்கிகாரம் இலங்கையில் இல்லை. இலங்கையை பொறுத்தவரை பிறப்பு என்பது ஆண் அல்லது பெண். இவர்கள் மட்டுமே வாழத் தகுதியானவர்கள். எங்களைப் போன்றவர்களை நோயாளர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கின்றனர்.

வீட்டில் பிள்ளைகள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முதலில் செய்வது வீட்டை விட்டு வெளியேற்றுவதுதான். அவர்களை புரிந்துகொள்வது இல்லை.  தெருவுக்குத்தள்ளப்படும் இந்தப்பிள்ளைகள் இந்த பாழும் சமுதாயத்தில் எப்படித்துயரப்படும் என பெற்றோர்களே சிந்திப்பதில்லை.   பாடசாலைகளும் ஏற்க மறுக்கின்றன. கல்வித் தகுதி குறைகிறது. இதனால் சரியான ஒரு தொழிலை பெறமுடிவதில்லை.

திருநங்கையாக இருந்தால் அவர்களுக்கான தொழிலாக அழகுக்கலை, சமையல்கலை, பூக்கள் வளர்த்தல், பெஷன் டிசைனர் இவைதான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை செய்ய முடியாதவர்கள் ஒன்று பிச்சை எடுக்க வேண்டும் அல்லது விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதைமீறி சமூக அந்தஸ்துள்ள தொழிலை செய்வதானால் வார்த்தை ரீதியாக, உடல் ரீதியாக மிகப்பெரிய கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சிலரே இந்தத் தடைகளை படிக்கல்லாக மாற்றியுள்ளனர்.

விடியும் ஒவ்வொரு பொழுதும் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு தொழில், தங்குவதற்கு இடம் இருந்தும் பல கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இது எதுவுமே இல்லாதவர்கள் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்? இதனாலேயே திருநங்கைகளுக்கு படிப்பு என்பது மிக முக்கியம். தரமான கல்வியின் மூலமே சாதிக்க முடியும்.

பெண்ணாக மாறுவது மட்டும் வாழ்க்கை இல்லை. அது அத்தனை பெரிய விடயமும் அல்ல. உடல் ரீதியான மாற்றத்தை விடவும் கல்வி, பணபலம், தொழில் இப்படி எல்லாம் அமைந்தால் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாமல் சொந்த காலில் நிற்கலாம். அடுத்தவரிடம் கையேந்தும் நிலை ஏற்படாது. இது சாத்தியமாகும் பட்சத்தில் திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வையும் மாற்றமடையும்.

திருநங்கைகளை பார்த்து சிரிப்பவர்களுக்கு மீண்டும் சிரிக்கும் வாய்ப்பை வழங்கக்கூடாது. பஸ்ஸில் எங்கள் பக்கத்தில் இருக்கையில் அமர்வதற்கே சங்கடப்படுபவர்கள் எங்கள் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பார்கள்? தினம் தினம் எத்தனை முகங்கள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள். இந்தப் போராட்ட வாழ்க்கை வாழ்வதற்கு மன திடம் எல்லாவற்றையும் தாங்கும் வலிமை அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேலாக குடும்ப உறவுகள் திருநங்கைகளை புரிந்துகொள்ள வேண்டும். தனது குழ்தைகளிடத்தில் மாற்றத்தை உணர்ந்தால் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டுமேயொழிய  மந்திரம், மாந்திரிகம் என சுற்றி கடைசியில் இவர்களை தெருவில் தள்ளாதீர்கள்.
என்னைப்போன்ற ஆயிரமாயிரம் திருநங்கைகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். இவர்களது வாழ்க்கை மாற்றப்பட வேண்டும்.

திருநங்கைகள் வெறும் பாலியல் பொம்மைகள் அல்ல. அதற்கு மட்டுமே அடிமைப்பட்டவர்களும் அல்ல. உலகம் மூன்றாம் பாலினமாக எங்களை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் இன்னும் நிம்மதி இல்லை. திருநங்கைகளும்  சக மனுஷயாக மதிக்கப்பட வேண்டும். சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் ஆதங்கமாய் பேசுகிறார் பூமி.
பூமியின் நியாயம் நம் இதயத்தை சுடுகிறது.

சாவுக்கான தைரியத்தை வாழ்வதற்கு காட்டுங்கள்! 


வாழ்க்கையின் பாதை பூக்களால் நிறைந்தது அல்ல. கல்லும் முள்ளும் கால்களைக் குத்தி பதம் பார்க்கத்தான் செய்யும். அதை தூக்கி எறிந்துவிட்டு முன்னோக்கி  செல்லும் பயணமே வெற்றி தரும்!


உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சுமித்திரயோவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு! 



தற்காலிகமான ஒரு பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வே தற்கொலை என்றொரு பிரபல வாசகமுண்டு.
உண்மைதான்! பிரச்சினை இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. பிரச்சினைகளை யார், எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது மடுவளவு சிறியதா, மலையளவு பெரியதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும், எந்தப் பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். ஆனால், அந்தத் தீர்வு எந்தக் காலத்திலும் தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவு அல்ல. தற்கொலை எண்ணத்தில் தவிப்பவர்கள், தற்கொலைக்கு முயன்று தோற்றவர்கள், பிடிப்பில்லாமல், விரக்தியின் விளிம்பில் நிற்பவர்கள் என வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், அவர்களது பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டு, ஆறுதல் அளிக்கிற, அவர்களை மீட்டெடுக்கிற  அமைப்புதான்  சுமித்திரயோ!

செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம். இம்முறை தற்கொலை முயற்சிகளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுகாதார ஸ்தாபனத்தால் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சுமித்திரயோ விழிப்புணர்வு நிகழ்வோடு இணைந்து தற்கொலையால் உயிர் நீத்தவர்கள், தற்கொலைக்கு முயற்சித்தோர், அவர்களது குடும்பம், பாதிக்கப்பட்டோர் என அனைவரையும் நினைவுகூரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  

வழமையான பாணியில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டாலும் வழமைக்குமாறான போக்கு கையாளப்பட்டது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதில் சுமித்திரயோவின் பங்களிப்பை, பணிகளை, தற்கொலைக்கான காரணங்கள், தற்கொலையாளர்களின் மனநிலை,  தோற்றம், வெளிப்பாடுகள் என்பன சொல்லில் அடங்கிவிடாது. அரங்க செயற்பாடுகளால் அனைவரையும் தெளிவுபடுத்தினர். உணர்வுகளை புரிந்துக்கொள்ள மொழி ஒரு தடையல்ல என்பதையும் இந்நிகழ்வு நிரூபித்தது.

வாழ்க்கையின் பாதை பூக்களால் நிறைந்தது அல்ல. கல்லும் முள்ளும் கால்களைக் குத்தி பதம் பார்க்கத்தான் செய்யும். அதை தூக்கி எறிந்துவிட்டு முன்னோக்கி  செல்லும் பயணமே தற்கொலையை எதிர்க்கும் ஆயுதம்.
தற்கொலை முயற்சியே உதவி தேடும் கூக்குரல்தான். தற்கொலை எண்ணத்தில் இருப்போரிடம் முக்கியமாக சில அறிகுறிகள் காணப்படுகின்றன.

தனிமை உணர்வு, கவலை, பதற்றம், எதிலும் ஈடுபாடின்மை, சமீபத்தில் மிகப்பெரிய இழப்பு அல்லது மரணம் அல்லது பிரிவு, அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், உணர்ச்சியற்று இருத்தல், அளவு மீறிய பயம், தன்னிலையில் மாற்றம், உயில் எழுதுதல், தூக்கமின்மை, உணவுப்பழக்கத்தில் மாற்றம், குற்ற உணர்வு, அவமானம், மனநிலையில் பெரும் மாற்றம், நெருங்கிய நட்பு, உறவுகளை நேரில் சந்தித்தல், உடைமைகளை பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களால் அதை வெளிப்படுத்துகிறார்கள். இதை கண்டுகொள்ள எம்மில் பலருக்கு நேரமில்லை. சிலருக்கு நமக்கென்ன என்ற எண்ணம்.

தற்கொலை எண்ணம் பணக்காரர், பாமரர், படித்தவர், உயர் பதவிகளில் இருப்போர் என்பதை பார்ப்பதில்லை, ஒரு மனிதனாக இருந்தால் போதும்.  அவர்களது ஒவ்வொரு அசைவும், நொடிகளும் அதனை விபரிக்கும்.
சோகங்களையும், கவலைகளையும், ரணங்களையும் பகிர்ந்துகொள்ள அல்லது தனக்கென ஒரு நிமிடம் ஒதுக்கி செவி சாய்க்க யாருமில்லை என்ற தனிமையிலிருந்து விடுபடச் செய்தாலே தற்கொலை எண்ணம் தானாக விலகிவிடும் என்பது அரங்க ஆற்றுகையின் மூலம் வெளியானது.
யாருமே எதிர்பாராத வகையில் நடைபயணம்கூட நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சிறந்ததொரு உதாரணத்தை பகிர்ந்தார் மனநல ஆலோசகர் நீல் பெர்ணாண்டோ.

தற்கொலை செய்தே தீருவேன் என்றொருவர் பல மைல் தொலைவிலுள்ள ரயில் நிலையத்தை அடைந்தார். ஏனோ அன்று ரயில் தாமதமாக பொறுமை இழந்தவர் எப்படியாவது ரயிலில் பாய்ந்துவிட வேண்டுமென ரயிலை நோக்கி பயணித்தார். நான்கு மைல் தூரம் நடந்தே சென்று அடுத்த நிலையத்தை அடைந்தவருக்கு நான் ஏன் ஒரு மனநல மருத்துவரை நாடக்கூடாது என்ற சிந்தனை  தோன்றியது. உடனே மனநல மருத்துவரிடம் சென்றவர் நடந்ததை விளக்கி தீர்வையும் பெற்று இன்றுவரை சுகமாக வாழ்கிறார்.
ஆக மாற்றத்திற்கு நேரம் தேவை. அவசர முடிவுகளால் ஆவது ஒன்றுமில்லை. மனதிற்கும் புத்திக்கும் ஏற்படும் சண்டையில் உண்மையை உணர சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.

வாழ்வதற்கு ஆயிரம் வழியிருக்க நாம் பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை என்னும் ஒரு வழியையே திறந்து ஏனைய கதவுகளை அடைத்துவிடுகிறோம் என்ற நியாயத்தை உணர்த்தியது இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட தன்னார்வ தொண்டர்களின் பேச்சு.

தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கொஞ்சம் வாழ்வதில் காட்டலாமே! என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது அங்கு ஏற்றப்பட்ட மெழுகுத்திரி விளக்குகள்!

ஆளுமைப்பெண்

ஆளுமைப்பெண்
இன்னும் நிறைய சாதிக்கனும் 



இளம்பெண்ணின் அறை எப்படியிருக்கும்?
அறை முழுவதும் கட்டில், பீரோ, நாற்காலி, மேசை, மேக்கப் ஐட்டம்கள், பொம்மைகள் ....

ஆனால் விருதுகள், மெடல்கள், சான்றிதழ்கள் என்றுநிரம்பிக்கிடக்கிறது. கமலினியின் அறை. ஒருவரால் இத்தனை விருதுகளை எப்படி வெல்ல முடிந்தது? என்று பார்ப்பவர்கள் வாயடைத்துப் போவர்கள்.
இத்தனை விருதுகளுக்கும் சொந்தக்காரி வெறும் 20 வயதேயான கமலினி மகேந்திரன். மெய்வல்லுனர் போட்டிகளின் மூலம்  இத்தனை கிண்ணங்களையும் கேடயங்களையும் பதக்கங்களையும் அள்ளிக் குவித்து பதக்கங்களால் ஜொலித்து கொண்டிருக்கிறார் கமலினி மகேந்திரன்.



யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மாணவியான கமலினி மாகாண மட்டத்தில் நடந்த மெய்வல்லுனர் போட்டியில் 100, 200 மீற்றர் ஓட்டம் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்றதோடு, நீளம் பாய்தல் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
கமலினியின் சாதனையைப் பாராட்டி கல்லூரி சமூகம், ஊர் மக்கள், பழைய மாணவர்கள், வட்டு இந்து வாலிபர் சங்கம்  இணைந்து அண்மையில் விழா எடுத்தனர்.  இவ்விழாவில் கமலினி இதுவரையில் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

வெற்றிக் களிப்பு ஒருபுறம் இருந்தாலும் தொடர் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டுள்ளார் கமலினி கூறுகையில்;
2010ஆம் ஆண்டு பங்குபற்றி 400 மீற்றர் ஓட்டப்போட்டிதான் எனது இத்தனை வெற்றிகளுக்குமான அத்திவாரம். கடந்த ஐந்து வருடங்களாக மெய்வல்லுனர் போட்டிகளில் (ஓட்டம், நீளம் பாய்தல்) பங்குபற்றி 60 இற்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சான்றிதழ்களையும், கிண்ணங்களையும் பெற்றுள்ளேன்.
இப்போது எனது வெற்றியை கொண்டாடுவதற்கு அம்மா உயிரோடு இல்லை. அப்பா, இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் இவர்கள்தான் எனது ஊக்கம். நான் பெற்ற ஒவ்வொரு வெற்றியிலும் இவர்கள் இருக்கிறார்கள்.

சின்ன வயசிலிருந்தே விளையாட்டில்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், படிப்பையும் விட்டுக் கொடுக்கவில்லை. இரண்டையும் என்னால் முடிந்தவரை சமப்படுத்தியிருக்கிறேன். ஏ.எல். முடித்துவிட்டு சப்ரகமுவ பல்கலைக்கழக தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறேன்.   தேர்வு செய்திருப்பதும் விளையாட்டு சம்பந்தப்பட்ட பாடநெறிதான். தொடர்ச்சியாக எனது விளையாட்டு மீதான ஆர்வத்தை தனிக்க இது உதவுமென நினைக்கி றேன்.

எனது வெற்றிக்காக சில தொண்டு நிறுவனங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் உதவியோடுதான் போட்டிகளில் பங்குபற்று   கிறேன். தேசிய ரீதியில் எனது வெற்றியை பதிவு செய்ய                          வேண்டும். விளையாட்டில் இன்னும் நிறைய  சாதிக்கனும். என்னுடைய திறமையை தேசிய ரீதியில் நிரூபிக்கனும். இதுதான் எனது கனவு என்றார் நம்பிக்கை நிறைந்த தொனியில் கமலினி.

இலங்கை விளையாட்டுத்துறையில் சிம்ம சொப்பனமாக கமலினி திகழ வேண்டுமென அழகியும் வாசகர்கள் சார்பில் பாராட்டுக்களை பகிர்கின்றது.

காமுகர்கள் குழந்தைகளை இலக்கு வைப்பது ஏன்? மனநல வைத்தியர் கணேஷன்



துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் அதிகமாக ஆசிரமங்களில் சேர்க்கப்படுகின்றன. அங்கும் துஷ்பிரயோகங்கள் தொடர்கிறது 


நாம் எப்போதுமே தெரியாதவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்காதே, தெரியாதவர்கள் கூப்பிட்டால் போகாதே என தெரியாதவர்கள் பற்றியே கவனத்தை செலுத்துகின்றோமே தவிர தெரிந்தவர்கள் பக்கம் நம் கவனம் திரும்புவதில்லை.


வித்யா, சேயா.............. இன்னும் இன்னும் எத்தனையோ சிறுமிகள் காமக் கொடூரன்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

 சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறன. இப்படியே போனால் நாளைய சந்ததியின் நிலை. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? என்றெல்லாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், பெண்களின் உடை, நடத்தைதான் இத்தனைக்கும் காரணம்.

சினிமா மோகம் கலாசாரத்தையே சீரழிக்கிறது.
போதை மயக்கம் இவர்களை இப்படியெல்லாம் செய்யத் தோன்றுகிறது.
இல்லை இப்படிப்பட்ட கொடூரத்தை  சாதாரணர்களால் செய்ய முடியாது மனநோய் உள்ளவர்கள்தான் காரணம்.
 இப்படி ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உண்மையகில் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. மனிதர்கள் இப்படி மோசமாக கலாசாரத்தையும் மனிதாபிமானத்தையும் குழிதோண்டிப்புதைத்து விட்டு காமத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?

 கொழும்பு தேசிய உளநல மருத்துவமனையின் உளநல வைத்திய நிபுணர் கணேஷனிடம் கேட்டோம்.

இப்போது தான் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என்பதற்கு ஆதாரம் இல்லை. தற்போது கூடுதலாக வெளிக்கொணரப்படுகின்றன என்பதே உண்மை. அதிகமான துஷ்பிரயோகங்கள் மறைக்கப்படுகின்றன. தற்போது வெளிவரும் சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலி இடம்பெற்றதனாலேயே இந்தளவு பேசவும் மக்கள் கொந்தளிக்கவும் காரணமாகியிருக்கின்றது.

 இன்று 30இல் ஒரு பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறது. இதில் 100இற்கு 90 வீதமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்தவர்களினாலேயே இடம்பெறுகின்றன. எஞ்சிய 10 வீதமே தெரியாதவர்களால் இடம்பெறுகின்றது. அந்த 90 வீதத்தை மறந்து அல்லது மறைத்துவிட்டு 10 வீதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் பேசுகிறோம். இதை வைத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்பவர்கள் இவர்கள்தான் என அடையாளப்படுத்துவது சாத்தியமற்றது. அவர்களுக்கு நோய் முத்திரை குத்தவும் முடியாது. மனசாட்சியை குழிதோன்றி புதைத்தவர்களினாலேயே இப்படி நடந்துகொள்ள முடியும் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்.

இன்று நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அனைத்துமே குற்றத்தை செய்தால் தண்டனை இல்லை. தப்பித்துவிடலாம் என நன்கு அறிந்து செய்யப்படுகின்றன. இது நோய் அல்ல. அப்படி சொல்லி தப்பிக்கவும் முடியாது.  உளநல மருத்துவர் என்ற ரீதியில் இதனை முற்றாக மறுக்கிறேன். துஷ்பிரயோகங்கள் நடக்க பெண்கள்தான் காரணம், அவர்கள் உடை, நடையில்தான் பிரச்சினை இருக்கிறது என்பதெல்லாம்  அவர்களை கைகாட்டிவிட்டு தப்பிக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் வாதம்.
பாலியல் இச்சை அதிகமானவர்கள் பாலியல் தொழிலாளர்களை நாடலாமே ஏன் சிறுவர்களை நாடுகிறார்கள். பாலியல் தேவையை சிறுவர்களால் பூர்த்தி செய்ய முடியாது. வளர்ந்தவர்களிடத்தில் கிடைக்கும் அதே உணர்வு குழந்தைகளிடத்தில் இருக்காது. ஆனாலும் ஏன் குழந்தைகளை நாடுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இவ்விடயத்தை மறைத்து விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

அண்மைய ஆய்வுகளின் படி இலங்கையில் 43 சதவீதமான துஷ்பிரயோகங்கள் வீட்டுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. குழந்தைகள் வெளியில் சொல்ல மாட்டார்கள், பயம், வெளியில் தெரிந்தால் வெட்கம் இதனாலேயே அவர்கள் அத்துமீற வசதியாகின்றது.

துஷ்பிரயோகம் செய்பவர் முடி வளர்த்திருப்பார், பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார், அழுக்கான ஆடை  அணிந்திருப்பார் என அடையாளப்படுத்த முடியாது. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கின்ற ஆசிரியர், பிள்ளையின் உறவினர்கள், பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்பவர், அயலவர் என எல்லோரும் இதைச் செய்கின்றனர்.

நாம் எப்போதுமே தெரியாதவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்காதே, தெரியாதவர்கள் கூப்பிட்டால் போகாதே என தெரியாதவர்கள் பற்றியே கவனத்தை செலுத்துகின்றோமே தவிர தெரிந்தவர்கள் பக்கம் நம் கவனம் திரும்புவதில்லை. இதற்காக எல்லோரையும் சந்தேகப்படச் சொல்லவில்லை. அவர்களிடத்திலும் கவனமாக இருக்கவே சொல்கிறோம்.

 பெரியோரை மதி, அவர்கள் சொல்வதை கேள் என்று நாம் சிறுவயதிலேயே சொல்லிக் கொடுக்கிறோம். இன்று வயதானவர்களினாலேயே துஷ்பிரயோகம் நடக்கிறது. அவர்கள் சொல்வதை குழந்தைகள் ஏற்றுக் கொள்கிறார்கள். எதிர்ப்பதில்லை. இதற்காக பெரியவர்களை மதிக்க வேண்டாம் என்பது அர்த்தமல்ல. பிள்ளைகளை சுயமாக சிந்தித்து செயலாற்ற விடுங்கள்.
பெற்றோர் பிள்ளைக்கிடையில் சிறந்ததொரு உறவு பேணப்பட வேண்டும். பிள்ளைகள் எதையாவது சொல்கிறதென்றால் அதற்கு காது கொடுங்கள். நீ பொய் சொல்கிறார், அப்பா அப்படி செய்யமாட்டார், மாமா அப்படி செய்ய மாட்டார், யாரிடமும் சொல்லாதே இப்படி அவர்களை மட்டுப்படுத்தாதீர்கள்.  இது உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளுக்கு ஏற்படும் மாற்றத்தை அவதானியுங்கள். கல்வி, விளையாட்டு, சோர்வு, அழுகை இப்படி ஏதோவொருவகையில் அவர்கள் வெளிப்படுத்தலாம்.

இன்று துஷ்பிரயோகம் செய்யும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். இது உண்மை. ஆக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களை தண்டிக்காமல் அவர்களை ஆற்றுப்படுத்த நல்ல திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

 துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் அதிகமாக ஆசிரமங்களில் சேர்க்கப்படுகின்றன. அங்கும் துஷ்பிரயோகங்கள் தொடர்கிறது. இது இவர்கள் மனதையும், உடலையும் வெகுவாக பாதிக்கிறது. தொடர்ந்து இவர்களும் அதையே செய்யத் துணிகிறார்கள்.

பாடசாலைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளானவர்களை ஏற்க மறுக்கிறது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களை மீட்பதில் துறைசார்ந்த வல்லுனர்களின் ஈடுபாடு குறைவாகவே இருக்கின்றது.

இவை எல்லாம் சரிசெய்யப்பட்டாலும் சட்டத்தின் ஓட்டை அடைக்கப்பட வேண்டும். பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிடிக்கப்பட்ட ஒருவர் இரண்டு வாரத்தில் பெயிலில் வெளியில் வருகிறார். அடுத்து அந்த வழக்கு  உயர் நீதிமன்றத்துக்கு செல்ல 8-10 வருடங்கள் எடுக்கும். அதற்குள் குற்றவாளி இன்னும் பல துஷ்பிரயோகங்களை செய்து விடுகிறார். அல்லது சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார். இதை பார்க்கும் இன்னொருவருக்கு நானும் இதைச் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றுகிறதே தவிர பயம் வரவில்லை.

6 வயதில் ஒரு பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளானால் அந்த வழக்கு முடிவதற்குள் பிள்ளைக்கு திருமணமே நடந்துவிடும். அதற்குப் பின் கோர்ட், கேஸ் என்று அலைவதில் அர்த்தமும் இல்லை. அவருக்கு தெம்பும் இருக்காது. இந்த நிலை மாறவேண்டும். உடனடியாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று காரணம் காட்டி தப்பிக்க முனைவதில் அர்த்தமில்லை என்கிறார் டொக்டர் கணேஷன்.

கர்ப்பம் சுமப்பவள்

கர்ப்பம் சுமப்பவள் எல்லாம் அம்மா ஆகிவிட முடியாது! 

அம்மா எப்படியிருந்தாலும் அழகுதான்அதை ஏன் வன்மமாக பார்க்கிறீர்கள்?




கடந்த சில  வாட்ஸப், சமூக வலைதளங்கள் என ட்ரெண்டில் இருக்கிறார் நடிகை கஸ்தூரி. காரணம் அன்னையின் தேகங்கள் (Bodies Of Mothers) என்ற ஆல்பத்துக்கு அவர் கொடுத்த செமி நியூட் போஸ்.

இதுபற்றி வெளிவந்த சில தலைப்புகள் எல்லாம் நடிகை கஸ்தூரி அரை நிர்வாணம், ஆடையின்றி போஸ், டொப்லெஸ் போஸ் என ஏதோ கூடாத படத்தில் நடித்து  விட்டதுபோல் சித்திரிப்பு.

உண்மையிலேயே இந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை.

நல்லதொரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட அப்புகைப்படம் இன்று வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வுக்கான புகைப்பட ஆவணப்படப் புத்தகத்திற்காக நடிகை கஸ்தூரி, மேலாடை இன்றி கொடுத்த போஸ்தான் அது.

கஸ்தூரி மட்டுமல்ல இவரைப்போன்ற உலகம் முழுதுமுள்ள 80 தாய்மார்களின் விருட்சத்தின் ஒரு விழுதுதான் கஸ்தூரியின் தற்போது வெளியான புகைப்படம்.

கருத்தறித்த பிறகும், குழந்தைப் பிறப்பிற்குப் பிறகும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், தாய்மையின் புனிதத்தையும், பெண்மையின் அழகியலையும் வெளிப்படுத்தும் முயற்சியாக ‘Bodies Of Mothers’எனும் புகைப்பட அல்பம் உருவாக்கினார் பிரபல புகைப்படக் கலைஞர் ஜேட் பியல்.

‘A Beautiful Body’ என்ற தலைப்பில் அந்த அல்பம் தற்போது உருவாகியிருக்கிறது.

ஜேட் பியல் தனது வாழ்நாள் திட்டத்தில் உருவாக்கியிருக்கும் இந்த அல்பம், பெண்கள் தற்போது உலகில் அனுபவிக்கும் பிரச்சினைகள், வன்கொடுமைகளைக் கடந்து எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இன்றி தங்களது இயற்கையான அழகை உணர்ந்து வாழவேண்டும் என்பதை மையமாகக் கொண்டிருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அவளுடைய அழகெல்லாம் போய்விடும், வயிற்றில் சுருக்கம் விழும் இப்படியெல்லாம் நிறை பெண்களே நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை உடைத்தெறிந்து ஒரு ஆணுக்கு அவன் மனைவியைவிட அவன் குழந்தையின் தாயையே அதிகம் பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது அந்தப் புகைப்படங்கள்.

அப் புத்தகத்திலிருக்கும் புகைப்படங்களில் அதிகமாக மேலைத்தேய பெண்கள் அவர்களுடைய கணவனுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்கள்.
அதேபோல் கஸ்தூரியில் தொழில் அடையாளம் நடிகை என்றாலும் தான் ஒரு அழகான அம்மா என்பதை இந்த அல்பம் மூலம் நிறுபித்துள்ளார்.

சரும சுருக்கம், முகத்திலுள்ள கருமை  அதையெல்லாம் மறைப்பதற்கு மேக்கப், சூப்பரான ட்ரெஸ், ஹேர்ஸ்டைல் இப்படி எதுவும் இன்றி அம்மா எப்படி இருந்தாலும் அழகுதான் என்று சொல்கிறது இந்தப் புகைப்படங்கள்.
குறிப்பாக அந்த ஆவணப்புத்தகத்தை தயாரிக்கும்   ஜேட்  ஒரு தாயாக தன் குழந்தையுடன் போஸ் கொடுதிருப்பது இந்த ஆணவப்படத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் புகைப்படமாக காட்சியளிக்கும் பெண்களின் உணர்வுகள், அனுபவங்கள் என அனைத்தும் பகிரப்பட்டுள்ளன.

மேலாடையின்றி தன் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் அந்தப் படங்களில் துளி ஆபாசம், கவர்ச்சி, விரசம் என எதுவும் இல்லை.
தூய்மையான இந்தப் பார்வையில் பெண்களின் உடல்  எப்போதும்  மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டும் என்பதே ஜேட் பியலின் எண்ணம்!
பெண்களின் தேகம் அழகானது, இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. அதை வன்மையா பார்க்காதீர்கள், வன்மத்தோடு அணுகாதீர்கள் என்று சொல்கிறது  இந்த பொட்டோஷுட்!

இந்த உலகம் பெண்களுக்கானதா?

இந்த உலகம் பெண்களுக்கானதா?
உலகெங்கும் அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்



பெண்களுக்கு என்ன குறை ? அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றுகிறது ஒரு குரல். சமூகத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் பெண் சுதந்திரமாக சுற்றி முழுமையாக வீடு வந்து சேர முடிகிறதா. ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெண் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறது எதிர்க்குரல்.

இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 25ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடியபோது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் திகதியை சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு  தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இம்முறை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, உலகிலுள்ள நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது ஐ.நா.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஐ.நா. உலகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க உலகம் முழுவதும் பேரணிகள், கால்பந்து போட்டிகள், பாடசாலைகளில் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் ்ஒரஞ்ச் தி வேர்ல்ட்ீ என்ற பெயரில் தீவிர பிரசாரம் செய்ய ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பிரசார நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்படுகின்றது. இவ்வாறு இம்முறை இந்த 16 நாட்களிலும் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 450 நிகழ்ச்சிகளை நடத்த ஐ.நா. திட்டமிட்டிருந்தது. இதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது.
இதனடிப்படையில் உலக நாடுகளில் ஆண்-பெண் வேறுபாடின்றி ஒரேஞ்ச் நிறத்தில் உடையணிந்து, வன்முறை ஒழிப்பு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். அரசும் முக்கியமான கட்டிடங்கள், சுற்றுலாத்தலங்களை ஒரேஞ்ச் வண்ணத்தில் ஒளிரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதற்கான திட்டமிட்ட செயல்பாடுகளை ஊக்குவித்தல், வன்முறைக்கு ஆளான பெண்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குதல், அவர்களுக்கு உடல், மன நல உதவிகளை பெற்றுக்கொடுத்தல், ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்தல் போன்ற செயற்பாடுகள் தனிநபர் தொடங்கி அரசு வரையிலான அனைத்து மட்டங்களிலும் இதற்கான முயற்சிகள் இன்றியமையாதவையாகின்றது.

ஆக இவற்றை வைத்து பார்க்குமிடத்து முதல் உலக நாடுகள் தொடங்கி மூன்றாம் உலக நாடுகள்வரை பெண்களின் நிலை வருந்தத்தக்கதாகவே இருக்கின்றது.

உலகளவில் ஒரு பெண் அவளின் வாழ்நாளில் ஒருமுறையாவது உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். தனிமனிதர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தச் சமூகமே பெண்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்துவதையே இது உணர்த்துகிறது. ஒரு சமூகம், வன்முறையை உருவாக்கி, அங்கீகரித்து, செயல்படுத்த முடியும் என்று சொன்னால், அதே சமூகம் அதைத் திட்டமிட்டுத் தடுக்கவும் முடியும் என்பது ஐ.நா. கருதுகிறது.

ஆனால், அது அவ்வளவு எளிதானதா?
ஓர் உயிர்க்கொல்லி நோய்க்கான வைரஸ் எதுவெனக் கண்டறிந்து தடுப்பதுபோல் நாம் இதனைத் தடுத்துவிட முடியாது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் காரணமான வைரஸ்கள் எண்ணற்றவை, தொன்மையானவை, நம்பிக்கை, பண்பாடு, கருத்தியல் சார்ந்தவை. ஆண் - பெண் பாகுபாட்டால் தொடர்ந்து நிகழ்பவை. எனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் செயல்பாடுகளும் பன்முகத்தன்மை கொண்டதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக நிதியம் மற்றும் பல்வேறு நாடுகளின் சட்டங்களும் திட்டங்கள்  பெண்களின் நலன், உரிமைகள், முன்னேற்றம், பாதுகாப்பு போன்றவற்றில் தொடர்ந்து அக்கறைகாட்டி வருகின்ற போதிலும் பெண்கள் அவற்றை அடைவதற்குப் பெரும் தடையாக இருப்பது இந்த பெண்களுக்கு எதிரான வன்முறை.

சமீபத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை என ஆய்வுவொன்று நடந்தது. இந்த ஆய்வில் சுகாதாரப் பிரச்சினை, பாலியல் வன்முறை மற்று பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு, மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதல், ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்சினைகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

இதில் ஆப்கானிஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான அதிகளவான கொடுமைகள் நடப்பதால், அது பெண்களுக்கான அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் உலகளவில் பெண்களின் பயங்கர நிலை குறித்து எடுக்கப்பட்ட மற்றொரு அண்மைய தரவுகளின் படி ஆப்கானிஸ்தானில்தான் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இரண்டாவதாக ஆபிரிக்காவின் கொங்கோ உள்ளது. காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதோடு, வருடத்தில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறனர்.

மூன்றாவதாக பாகிஸ்தான் உள்ளது. அங்குதான்  பெண்களுக்கு எதிரான வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு 2010ஆம் ஆண்டின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடும்ப மரியாதை என்ற காரணத்தை வைத்து ஏறத்தாழ 800 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 8 பேர் என்ற கணக்கில் 2,900 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் பாகிஸ்தானில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பஞ்சாப் மாகாணத்திலே மிக அதிகளவில் அதாவது 2,600 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் வெறும் ஆய்வுகள் வெளியிடும் தகவல்கள் மாத்திரமே. இதற்கும் மேலாக எத்தனையோ நாடுகள் பெண்களுக்குகெதிரான கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன. அவைகள் கணக்கிலிடப்படுமானால் இந்தச் சமூகம் தன்னிடத்திலிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையும் இழந்துவிடக்கூடும்.

ஆக வன்முறை அற்ற வாழ்வே ஆண் - பெண் சமத்துவம், அமைதி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு வழிவகுக்கும்.

உரசல் ரொம்பச் சாதாரணம்தானா?

உரசல் ரொம்பச் சாதாரணம்தானா?
ஆண்களே ஒரு நிமிடம் ப்ளீஸ்

சார்ந்து வாழாதீர்கள்!

சார்ந்து வாழாதீர்கள்! 


ஒரு பெண் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில் எதிர்காலக் கணவனை பற்றி சிந்திக்கிறாள். தனக்கு வரப்போகும் கணவன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. அதனால் நான்  மாறவில்லை என்கிறாள் 



ஆண்கள் என்றுமே ஆண்களாகத்தான் வாழ்கிறார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரையில் அவனுக்கென ஒரு தனித்துவம், சுய மரியாதை, கௌரவம் பேணப்படுகிறது.  ஆனால் பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை தனக்கான ஒரு அடையாளம் அற்றவளாகிப் போகின்றாள். 



பல நம்பிக்கைகள் காலாவதியாகி விட்டன. சில நம்பிக்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு துளியும் பொருந்தாதவை. காலத்திற்கு பொருந்தாத அதே சமயம் நாம் உற்சாகமூட்டி வழர்த்து வரும், கடைபிடிக்கும் நம்பிக்கைகள் ஏராளம்.

பலங்காலம் தொட்டு இன்றுவரை நம் பெண்கள் குடும்ப உறவுகளின் பிணைப்புக்குள் சிக்குண்டு ஒரு ஆணைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம். .

ஒரு பெண் தன் வாழ்நாளில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பெற்றோருக்கு மகளாக, சகோதரர்களுக்கு சகோதரியாக, காதலனுக்கு காதலியாக, கணவனுக்கு மனைவியாக, பிள்ளைகளுக்கு தாயாக இப்படி ஏதோவொரு ஆணின் துணை அவசியமாகின்றது. அப்படி வாழ்கின்ற வாழ்க்கையில் தனக்கான ரசனை, தனக்கான மனநிலை, வாழ்க்கை முறை என எல்லாமே யாரோ ஒருவரைச் சார்ந்ததாய் மாறிவிடுகிறது.

உடுத்தும் உடை ஆரம்பித்து பெயர், நடை, பாவனை, நட்பு என கேட்கும் இசை வரை ரசனை கூட விரும்பியோ விரும்பாமலோ மற்றவர்களின் ரசனையோடு சார்ந்து சுயமிழந்து போகிறோம்.
இதான் நமது கலாசாரம் பெண்களுக்கு பாதுகாப்பு என்று பலர் நினைக்கின்றனர்.

எது பெண்களுக்கு பாதுகாப்பு? குடும்ப உறவுகளாலேயே பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் சிதைக்கப்படுவதை என்னவென்று சொல்லுவது? இப்போது எங்கே சென்றது உறவுகளின் பாதுகாப்பு?

ஆண்கள் என்றுமே ஆண்களாகத்தான் வாழ்கிறார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரையில் அவனுக்கென ஒரு தனித்துவம், சுய மரியாதை, கௌரவம் எல்லாமே பேணப்படுகிறது.

ஆனால் பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை தனக்கான ஒரு அடையாளம் அற்றவளாகிப் போகின்றாள். குழந்தைப் பருவத்தில் தந்தையின் கரம்பிடித்து நடக்கும் பிள்ளை கடைசி மண்ணுக்குள் புதையுண்டு போகும் வரை ஒரு ஆணின் கரம் பற்றியே வாழ்கிறாள்.

சாதாரணமாக வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதாக இருந்தால் வயதில் சிறியவனாக இருந்தாலும் பரவாயில்லை சேகாதரனை அழைத்துக்கொண்டு செல் எனும் கலாசாரம் மேலோங்கி இருக்கின்றது.
இந்த நிலையெல்லாம் எங்களிடத்தில் இல்லையென சொன்னாலும் மறைமுகமாக இந்த கலாசாரம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதை இல்லையென்று யாரும் மறுக்க முடியாது.

அண்மையில் இடம்பெற்ற ஒரு உரையாடல் எத்தனை தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும், தொழில் நுட்பங்கள் வளர்ச்சிகண்டுள்ள போதும் பெண்கள் தனக்கென ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள் வாழ்கின்றார்கள் என்பதை உணர்த்தியது. ஆணுக்குப் பெண் சமம் என்பது வெறும் வாய் வார்த்தைதானோ என எண்ணத் தோன்றுகிறது.

அதாவது இளம் வயதில் ஒரு பெண் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வதில் எதிர்காலக் கணவனை பற்றி சிந்திக்கிறாள். தனக்கு வரப்போகும் கணவன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. அதனால் நான்  மாறவில்லை என்கிறாள்.
இதில் எந்தளவு நியாயம் இருக்கிறது?  ஒரு இளம் பெண்ணின் தற்போதைய வாழ்க்கை அவளுக்கு வரப்போகும் கணவனுக்கானதாக இருக்கிறது. வரும் கணவனுக்கு ஏற்ற துணையாக வளர்க்கப்படுகிறாளே தவிர ஒரு பெண்ணாக அல்ல.

இதுவே திருமணத்தின் பின் தனக்கு வரப்போகும் மனைவிக்காக தன் ரசனைக்கேற்ப வாழாதிருக்கும் ஆண்கள் இருக்கின்றார்களா? சொல்லுங்கள்.
திருமணத்தின் பின் பொட்டு, தாலியை சுமக்கும் பெண்கள் கணவனின் இறப்புக்குப் பின் அதனை இழக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு இதில் எந்த நடைமுறையும் பொருந்தாது.

அதேசமயம் தனக்கு வாய்ந்த கணவன் நடத்தையில் சரியில்லை என்றாலும் அதை சமாளித்துக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு இருக்கிறது. அதையே இந்த சமூகமும் ஏற்றுக்கொள்கிறது. கணவனை விட்டு விலகியிருக்க நினைக்கும் பெண்களை சமூகம் போற்றுவதில்லை தூற்றவே செய்கிறது.

இப்படிப்பட்ட பெண்கள் ஆண் துணை இன்றி தனித்து வாழ முடியாதுள்ளது. ஏனெனில் இவர்களுக்கான எல்லாத் தேவைகளையும் அவர்களே செய்து கொடுத்தார்கள். திடீரென அந்த சூழல் மாறுபடும்போது  அதை சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். உள ரீதியாகவும் பாதிப்புக்கள்ளாக நேர்கிறது. தான் தனித்து விடப்பட்டது போன்ற விரக்தி தன்னைத்தானே கொன்றுவிடும். இதற்காகவே ஒரு பெண் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் அதே சமயம் தனக்கான தனித்துவத்துடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது.
உங்கள் நிழல் கூட, வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும், ஆக உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், சார்ந்து வாழாதீர்கள்!

அமெரிக்காவின் ஆளுமைப் பெண்!

அமெரிக்காவின் ஆளுமைப் பெண்! 



முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, தனக்கென ஒரு  தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்  ஹிலாரி கிளிண்டன்.

வழக்கறிஞரான இவர் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து, சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.

2008ஆம் ஆண்டு இடம்பெற்றத் தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட முயன்றவருக்கு, பராக் ஒபாமாவால் வாய்ப்பு நழுவிப்போனது.
ஒபாமாவின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆக நவம்பர் 8 ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டுது. வேட்பாளர்கள் நாடு முழுதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டிவருகிறார்கள்.

இந்த முறை  அமெரிக்க அதிபர் ஆகிவிடும் தீர்க்கமான முடிவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் ஹிலாரி.  எதிர்க்கட்சி வேட்பாளரான டொனால்ட்  டிரம்பின் கோமாளித்தனமான கருத்துகளால், ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது. போரப்போக்கில் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண்  ஜனாதிபதி என்ற சிறப்புக்குரியவராவார்.

முதல் பெண்மணியாக, பிரபலபெண்கள் வரிசையில் முன்னின்ற ஹிலாரி சிரித்த முகத்துடன் சற்றும் சளைக்காமல் சமூக சேவைகளில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கணவரின் நல்லது, கெட்டது, அரசியல் வலைவு நெளிவு, வாழ்க்கையில் சறுக்கல் என அனைத்து சுகதுக்கங்களிலும் பக்கபலமாக இருந்தவர்.

ஹிலாரி சொந்த வாழ்க்கை, சட்ட சேவை, அரசியல் பிரவேசம் என அனைத்தையும் சரியாக திறம்பட கையாள்கிறார்.
வாய்ப்பு ஒரு முறைதான் கதவைத் தட்டும் என்பது ஹிலாரி விஷயத்தில் பொய்ப்பித்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அவர் வீழ்ந்தாலும் மரமாக சாய்ந்து அழிந்துவிடாமல் மீண்டும் மீண்டும் துளிர்விட்டு நிமிர்த்து நிற்கிறார்.
ஹிலாரியின் தற்போதைய உரைகள் தனித்துவம் பெற்றுள்ளன. வெற்றியை மட்டுமே குறி வைத்திருப்பது ஹிலாரியின் பேச்சில் தெரிகிறது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஹிலாரி பாடசாலை காலம் முதல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றல், வினாடிவிடை போட்டிகளில் ஆர்வம், குழந்தைகள் நலனுக்கான சேவைகளில் பங்கேற்றல், வகுப்புத் தலைமை, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றல் இப்படி தன்னைத் தானே தலைமைத்துவத்திற்காக ஒவ்வொரு செல்லாக செதுக்கிக்கொண்டுள்ளார்.
மேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற ஹிலாரி, சட்ட பத்திரிகை ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். குழந்தைகள் நலன், குடும்ப நலனில் அதிக கவனம் கொண்ட ஹிலாரி படிக்கும் காலத்திலும் சரி விரிவுரையாளராக சேவை செய்யும் காலத்திலும் சரி மாற்றுத்திறனாளிகள் மீது தனி அக்கறை செலுத்தினார். இதனால் அவர்களுக்கான சட்டங்களையும், உதவித் திட்டங்களையும்  உருவாக்கினார்.

ஹிலாரியின் பாடசாலை காலம், இளம் பராயம், கிளின்டனுடனான திருமண பந்தம், வழக்கறிஞர் இப்படி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சமூக சேவையுடனேயே கழிந்திருக்கிறது.

திருமணத்திற்குப் பின் கிளின்டனின் அரசியல் பிரவேசத்திற்கு அச்சானியாக இருந்ததும் ஹிலாரியே. இதற்குப் பின் சில காரணங்களால் விரிவுரையாளர் பணியை தொடர முடியாமல் போக அருகிலேயே உள்ள சட்ட நிறுவனங்களில் சேர முயற்சித்தார். பெண் என்பதால் அவருக்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. தடைகளை தகர்த்தெறிந்து அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ஹிலாரி. அங்கிருப்பவர்கள் ஹிலாரியை காட்சிப் பொருளாகவே பார்த்தனர். அவருடைய கண், முடி, நடை, உடை எல்லாம் கேலிக்குள்ளனது. நீதிமன்றம் சென்று வதாடும் வேலை கொடுக்கப்படவில்லை. முதன்முதல் இவருக்கு கொடுக்கப்பட்டது செத்த எலி வழக்கு. ஆனால் ஹிலாரி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றியை பெற்றார்.

இதற்குப் பின் கிளின்டன்-ஹிலாரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஹிலாரிக்கு அரை சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டு அங்கும் அநீதி இழைக்கப்பட அதை எதிர்த்துப் போராடினார். இதன்மூலம் குடும்ப மற்றும் மருத்துவ விடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இப்படி அதீத சமூக அக்கறைடன், மனித உரிமை மேம்பாடு போன்றவற்றை வாழ்நாள் இலட்சியாக செயற்பட்ட ஹிலாரிக்கு பாராட்டுகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை.

சமூகத்தின் நேரடிப் பார்வையில் இருப்பவர்கள் உயர உயர குற்றச்சாட்டுகளும் வந்திகளும், கிசுகிசுக்களும் அவர்களுடனேயே சேர்ந்து வளரத் தொடங்குகின்றன.

ஹிலாரி அமெரிக்க அரசாங்கத்தில் பதவி வகிக்கையில் அரசு விதிப்படி இணைய செய்திகள் அனுப்பும்போது அரசாங்க சேவரையே பயன்படுத்த வேண்டும். ஹிலாரி தனிப்பட்ட சேவரை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் அரசாங்க இரகசியத்தை சேகரித்து வைத்துள்ளார் அல்லது ஏதோ தவறு செய்துள்ளார். அதை மறைக்கத்தான் தனிப்பட்ட சேவரை பயன்படுத்தி இருக்கிறார் என ஹிலாரியை விளக்கம் கேட்டு விவகாரமாக்கியுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க தற்போது சர்ச்சையை கிழப்பியுள்ளது 1975 இல் வொஷிங்டனில் இடம்பெற்ற பாலியல் வழக்கு. இவ்வழக்கை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க ஊடகங்கள் ஹிலாரியை உரசிப்பார்க்கத் தொடங்கியுள்ளன. 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக தோமஸ் டைலர் என்பவர் கைதானர். அந்த வழக்கில் டைலருக்கு ஆதரவாக வாதாடியது வேறு யாருமல்ல ஹிலாரிதான். 1975 இல் ஹிலாரியின் விவாதம் அடங்கிய கேசட் இப்போது கிடைத்திருக்கிறது. இதை ஆதாரமாக வைத்தே பெண்களின் உரிமைப் போராளி என்று முலாம் பூசிக்கொண்டு பெண் கொடுமைக்கு எதிரான குற்றவாளிக்கு துணை போனவர் என தூற்றுகின்றனர்.

இதற்கும் மேல் ஹிலாரியும் கிளிண்டனும் கணவன் மனைவியே இல்லை. அவர்கள் பிசினஸ் பார்ட்னர்கள் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் இன்னொரு வெடியை இப்போது வீசியுள்ளார்.
ஹிலாரியின் உடல் நிலை, வயது எல்லாவற்றையும் கேள்விக்குரியாக்கி கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து தான் அனுபவசாலி, இரும்பு மனுசி என மீண்டும் மீண்டும் நிருபித்துகொண்டிருக்கிறார்.

ஹிலாரியின் எண்ணம் தூற்றுபவர்களை சட்டையைப்பிடித்து உலுக்குவது அல்ல. அவரது இலக்கு அமெரிக்க அதிபர் நாற்காளி மீதே உள்ளது.
சக்கர சுழற்சி வாழ்க்கையில் ஒருவர் இத்தனை ஏற்ற இறக்கங்களை சந்திக்க முடியுமா என்று எல்லோரையும் வியக்க வைக்கும் ஹிலாரிக்கு அமெரிக்காவின் வருங்கால அதிபர் அந்தஸ்த்து கிடைக்கும் என்கிறது கருத்துக்கணிப்பு. இதையே சமூகமும் எதிர்பார்க்கிறது. அமெரிக்காவின் மாற்றம், புதிய சட்ட உருவாக்கத்திற்கு ஹிலாரி அமெரிக்க அதிபராக புது அவதாரம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.

நிறுவனத்தின் வெற்றிக்கு

நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள் பெண்கள்!

பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி

 பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி

மனதில் தூவும் விஷமா?தெளிவாக்கும் விடயமா?

பாலியல் கல்வி பாடசாலைகளில் அவசியம்! என்ன இது முதல் வரியே தலையிடியா இருக்கே என யோசிப்பது புரிகின்றது. ஆனாலும் என்ன செய்வது அதைப் பற்றி சிந்திப்பதற்கான அவசியம் தற்போது எழுந்துள்ளது.
அதாவது இலங்கை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பரிந்துரை செய்யதுள்ளது. அதேநேரம் முதலாம் தரத்தில் பால்நிலை கல்வியை சேர்த்துக்கொள்ள முடியாது. எனவே வாழ்க்கைத்திறன்கள் என்ற பெயரில் முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

இத் திட்டத்தின் படி  உடலமைப்பு, அதன் இயல்பு, உடல் பாதுகாப்பு என்பவற்றுடன், உரிய வயது வரும் போது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி மற்றும் அது தொடர்பிலான கல்வியைக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது இவ்வாறிருக்க பாலியல் கல்வி பாடசாலைகளில் அவசியம் என வலியுறுத்துகிறது ஒரு குழு. அதேநேரம் பாடசாலைகளில் இதை ஏன் கற்பிக்க வேண்டும்? என்ற கேள்வி ஒரு பக்கம், ஏற்கனவே எல்லாம் கெட்டு குட்டுச் சுவராகி நிக்குதுகள் இப்போ இது நமக்கு ரொம்ப முக்கியம்? என முகம் சுழிப்பவர்கள் இன்னுமொரு பக்கம் என இந்த விடயம்சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது.

மேலும் பாலியல் என்ற வார்த்தையைக் கூட வாய்விட்டுச் சொல்ல முடியாத நாம் எப்படி பாடசாலைகளில் அதை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுவது நியாயம்தான். இருந்தாலும் இன்றைய காலகட்டம் அதன் தேவையை உணர்த்தியிருக்கிறது.

பாலியல் கல்வி என்பது முகம் சுளிக்க வேண்டிய ஒரு விடயம் அல்ல.
ஒவ்வொரு நாளும் எழு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், 3 வயது சிறுசி துஷ்பிரயோகத்திற்குள்ளாகி கொலை, 5 வயது தங்கையை துஷ்பிரயோகப்படுத்திய 13 வயது அண்ணன் இவ்வாறான செய்திகளுடனேயே பொழுது விடிகிறது. இந்த நிலை மாற்றத்திற்கு பாலியல் கல்வியும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

சாதாரணமாக 05 அல்லது 06 வயதின் ஆரம்பத்திலேயே ஆண்-பெண் குறித்த சந்தேகங்கள் அவர்களுக்குள் துளிர்விடத் தொடங்குகின்றன. சிலருக்கு இதற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. இவர்களது வயது ஒவ்வொரு ஆண்டும் கூடுவது போல் இந்த சந்தேகத் தேடல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறதே தவிர அதற்கான விடை அவர்களுக்கு அவ்வப்போது கிடைப்பதில்லை. அதனாலேயே அவர்கள் தானாக அதனைத் தேடி வம்பை விலைக்கு வாங்கி விடுகின்றனர்.

பொதுவாக பிள்ளைகள் வளர்ச்சி, அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றம், ஆண்-பெண் வித்தியாசம், உடல் உறுப்புக்களின் தேவை, அதன் பயன்பாடுகள் பற்றி பாடசாலைகளும் சரி, வீடும் சரி அவர்களுக்கு விளக்கம் கொடுக்க விரும்புவதில்லை. இந்த விளக்கத்தைத் தேடி பிள்ளைகள் பயனிக்கையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை தவறாக அமையலாம். அவ்வாறு அமைகையில் இங்கிருந்தே ஒரு பிள்ளை குற்றவாளியாக செதுக்கப்படுகிறது. தவறான வழிகாட்டல், தவறான புரிதலைக் கொண்டு வழிதவறிப் போகவும் நேரிடுகின்றது.

அதற்காக பிள்ளைகளுக்கு பாலியல் குறித்த எல்லா விடயங்களையும் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்று கூறவில்லை. பிள்ளைகள் தங்களைத் தாங்கள் உணர்ந்து, அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு சரியான பாதையை காட்டும் அரணாக இருக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

இன்று நேற்று அல்ல பல தசாப்தங்களாக பாடசாலைகளில் சுகாதாரம், விஞ்ஞான பாடங்களின் போது உடல் அமைப்பு, உறுப்புகள் குறித்த பாடங்களை பெரும்பாலான ஆசிரியர்கள் அதாவது 100இற்கு 99வீதமானவர்கள் கற்பிப்பதே இல்லை. நீங்களே வாசித்து அறிந்து கொள்ளுங்கள் என்றே கூறுகிறார்கள். இதுதான் பிழையான வழிகாட்டல் என்கிறோம்.

பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை கொடுக்க முடியாமல் வாயை மூடு அல்லது இது உணக்குத் தேவையில்லாதது என்று பெற்றோர் அவர்கள் வாயை அடைக்க முட்படுகின்றனர். பின்னாலில் அதுவே பிரச்சினையில் மூலகாரணமாகின்றது. இதற்கு அவர்கள் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. நாம் வாழும் சமூகம் அவ்வாரானது.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் கற்றுக்கொடுத்து விடுகிறது.

ஆக சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்குள் சுயபுரிதலை ஏற்படுத்த வேண்டும். அதுதான் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு வித்திடும்.

முறையான திட்டம், தரமான கல்வி, சிறந்த கற்பித்தல் சமூகம் அமையுமாயின் பாலியல் கல்வியால் மாற்றம் சாத்தியம்!

தந்தையருக்கும் குழந்தைப் பேறு விடுமுறை?

தந்தையருக்கும் குழந்தைப் பேறு விடுமுறை?

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பரிந்துரை



குழந்தைக்கு யார் முக்கியம்?
அம்மாவா? இல்லை இல்லை அப்பாவா?
ஒரு மனிதனுக்கு இரண்டு கண்ணும்தான் முக்கியம். ஆனால் அதில் எந்தக் கண் வேண்டும் என்பது போல் இருக்கிறது.
சரி இந்த பொறுப்பு எல்லாவகையிலும் சரியான முறையில் நிறைவேற்றப்படுகிறதா? அதற்கான கட்டமைப்ப எம்மிடத்தில் இருக்கின்றதா? என்றால் அது கேள்விக்குறிதான்.

ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் இருக்கும் தாய்-தந்தையின் பங்களிப்பு அவர்களை பெற்று வளர்ப்பதில் இருப்பதில்லை.
இதனாலேயே குழந்தையின் வாழ்வில் தந்தையின் பங்களை உணர்ந்து அதை அனுபவிக்கச் செய்யும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சில திட்டங்களை வகுத்து வருகின்றது. அதில் ஒன்றுதான் பிரசவத்தின் போது தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பது.

இத்திட்டமானது கடந்த 6-7 வருடங்களாக நடைமுறையில் இருக்கின்றபோதும் அது பலருக்குத் தெரியாமலேயே இருந்துள்ளது. கடந்த காலங்களில் பிரசவத்தின் போது 3 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதை அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமே அனுபவித்தனர். அதுவும் சிலரே இந்த விடுமுறையை பெற்றுக்கொண்டனர். தனியார் துறையினருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியாது.

இந்நிலையிலேயே இத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அவ் விடுமுறையை அதிகரிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் தந்தை பிள்ளையுடன் செலவிடும் காலம் அதிகரிக்கும். அதனூடாக பிள்ளைக்கும் தந்தைக்குமான உறவு பலப்படும். பொறுப்பும் அக்கறையும் கூடும் என்பதே இவர்களது எண்ணம்.

இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டமே சரியா பிரயோகிக்கப்படாமல் இருக்கையில் வரப்போகும் திட்டம் எந்தளவு அனைத்து தரப்புக்கும் சாதகமாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.
பிரசவம் என்பது மறு ஜென்மம் என்றே பார்க்கிறோம். இந்த மறுஜென்மத்தில் கணவனின் ஆதரவு ஒரு பெண்ணுக்கு கிடைக்குமாயின் அதுவே அவளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய சக்தி.

குழந்தை பிறந்ததும் அதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோடு முடியும் கணவனின் கடமை அடுத்து அந்தக் குழந்தை வளர்ந்து பாடசாலை செல்லும் போது உயிர்பெறுவதாகவே பெரும்பாலான தந்தைகள் இருக்கின்றனர். இதுவல்ல ஒரு தந்தையின் பங்கு. குழந்தை பிறந்தது முதல் அதன் ஒவ்வொரு அசைவிலும், வளர்ச்சியிலும் தந்தை வாழவேண்டும். இந்த வரம் அரசு, தனியார், கூலித் தொழிலாளி என்றில்லாமல் அனைத்து தந்தையருக்கும் அமைய வேண்டும். இதற்கு திட்டத்தை வகுப்பவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்புக்குரியவர்கள்.

குழந்தைகள் எல்லாமே குழந்தைகள்தான். தரம் பிரித்து தந்தைக்கு விடுமுறை வழங்கும் வகையில் அவர்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல. இதை அதிகாரிகள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் உணரவேண்டும். தனக்கான இடத்தை தானே பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதை உணர்ந்ததினாலோ என்னவோ உலக செல்வந்தர்கள் வரிசையில் ஆறாவது இடத்திலிருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்  பிரசவத்தின் பின் இரண்டுமாத விடுமுறையை எடுத்துக்கொண்டதோடு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஆண்களுக்கும் பிரசவத்தின் பின் விடுமுறை வழங்கவும் முடிவு செய்தார்.

இதேபோல் பிரிட்டன் அரசு கடந்த வருடம் ஆண்களுக்கு பிரசவ விடுமுறை வழங்கும் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தியது.

பிரசவ நேரத்தின் போது பிரிட்டன் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 - 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை உருவாக்கியது.

இதேபோன்று வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
ஆக இலங்கையிலும் 3 நாட்கள் விடுமுறை என்ற கலாசாரம் மாற்றம் பெற்று விடுமுறை அதிகரிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் தார்ப்பரியம் உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்போடு செயற்பட வேண்டியது அவசியம். குழந்தையின் வளமான  எதிர்காலத்திற்கு தந்தையின் அரவணைப்பு அவசியம்.

மதங்களைத் தாண்டி இணைந்த மனங்கள்!

மதங்களைத் தாண்டி இணைந்த மனங்கள்! 



பாராளுமன்றத்திலும் பாலியல் சேஷ்டை?

பாராளுமன்றத்திலும் பாலியல் சேஷ்டை?



 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காசலங்களில் என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்பதை நாடு அறியாமல் இல்லை


இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை எப்படியேனும் அதிகரித்துவிட வேண்டும் என்ற ரீதியில் ஒரு தரப்பு  குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் ஒரு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பற்றி அண்மையில் வெளிவந்த தகவல் அதிர்ச்சிக்குரியது.

சில மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களால், தாம் பாராளுமன்ற வளாகத்துக்குள்ளேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமது கட்சி மேலிடத்தில் முறையிட்டுள்ளனர்.

அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் பாரராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மூத்த  உறுப்பினர் ஒருவர் தமது கையைப் பிடித்ததாக ஒரு பெண் உறுப்பினர் தமது கட்சி மேலிடத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதேவேளை, அமர்வு முடிவடைந்த சில நிமிடங்களில் மூத்த உறுப்பினரொருவர் தம்மிடம் ஆபாசமாகவும் சொல்லத்தகாத வார்த்தைகளாலும் பேசியதாக மற்றொரு பெண் உறுப்பினர் தமது கட்சி மேலிடத்தில் முறையிட்டுள்ளார்.

இருப்பினும் இம் முறைப்பாடுகள் குறித்து கட்சி மேலிடங்களால் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவல்கள் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுவார்களாயின் அச் சம்பவம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரும் படி பணித்ததோடு, அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அந்தஸ்து பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் இச்செய்தி வெளியாகி சில தினங்களுக்குள்  சபாநாயகர் இச் செய்தி குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும்,  பாராளுமன்ற வளாகத்துக்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித பாலியல் தொந்தரவுக்கோ அல்லது வேறு தொந்தரவுகளுக்கோ உட்படுவதாக வெளியான செய்தி துளியளவும் உண்மையில்லை,  அவ்வாறான சம்பவங்களை தம்மால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை என இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இவ்வாறிருக்க  பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் காரியாலயமும் சபாநாயகரின் கருத்துக்கு ஒத்தூதிவிட்டது.
ஆக இந்த விடயம் இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை உறுப்பினர்களும் உத்தமர்களாக சித்திரிக்கப்பட்டு விட்டனர்.

இந்த விடயத்தில் பாராளுமன்ற நிர்வாகம் நியாயமான முறையில் நடந்துகொண்டது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்கு முன்னர் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்பதை நாடு அறியாமல் இல்லை.

பாராளுமன்ற அமர்வுகளில் ஆபாச படம் பார்ப்பது, ஆபாச வார்த்தைகளை பேசுவது, பெண் உறுப்பினர்களை இழிவுபடுத்துவது, இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைப் பிரயோகம், அவசியமாக விவாதிக்க வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு சேலை நன்றாக இருக்கிறது, அலங்காரம் சரியில்லை, மொடர்ன் ட்ரெஸ் நல்லா இருக்கும் போன்ற வகையிலேயே இவர்களது விவாதங்கள் இருந்திருக்கின்றது.

இப்படிப்பட்ட ஆண்கள் நிறைந்த அவையிலேயே ஓரிரு பெண் உறுப்பினர்கள்  இருந்து இத்தனை காலம் போராடி வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக அமைச்சுப் பதவிகளை வகித்தாலும் பாலியல் பாகுபாடு என்ற ரீதியிலேயே பெண்களை சீண்டிப் பார்க்கின்றனர். இதுவே உலக அளவில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 12வீதம் மாத்திரமே பெண்கள் அங்கம் வகிக்கவும் காரணமாகின்றது.

சட்டம் இயற்றும் ஒரு உயரிய சபையில் இத்தகைய செயல்கள் இடம்பெறுமானால் அந்த சட்டத்தை யார் மதிப்பது?
பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக சாதித்துவிட்ட போதும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே பெண் பிரதிநிதித்துத்தை கொண்டதொரு துறையாக அரசியல் காணப்படுகின்றது. இந்நிலை அரசியல்துறையில் மாறவேண்டுமானால் இத்தகைய கரும்புள்ளிகள் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.

பெண்கள் என்ன கேலிப் பொருளா?

பெண்கள் என்ன கேலிப் பொருளா?
சிம்பு முதல் கிறிஸ்கெயில் வரை! 

சிம்புவின் பீப் சோன்ங் தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்தது. அதேபோல் அண்மையில் ‘‘Sex and love’’ என்ற பெயரில் இலங்கையில் நடந்த இசை நிகழ்ச்சியால் இலங்கையின் கிரிக்கெட் பிரபலங்கள் சங்ககார, மஹேல ஜயவர்தன இருவரையும் பெரும் சோதனைக்குள்ளாக்கியது. இந்த வரிசையில் தற்போது இணைந்து உலகளவில் பெண்கள் மத்தியில் மதிப்பை இழந்திருப்பவர் மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்டக்காரர் கிரிக்கெட் கிறிஸ் கெயில்.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் மெல்போர்ன் றெனிகேட்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில், மெல்பர்ன் சார்பாக விளையாடிய கிறிஸ் கெயில், ஆட்டமிழந்து வெளியேறிய பின் ஊடகவியலாளரான மெல் மக்லாப்ளின், அவரை நேர்முகம் கண்டிருந்தார்.

மக்லாப்ளின் கேட்ட கேள்விக்கு, உரிய பதிலளிக்காமல் ்நான் வந்து, உங்களோடு நேர்காணலொன்றை வைத்துக் கொள்ள விரும்பினேன். அந்தக் காரணத்தால்தான் நான் இங்கு நிற்கிறேன். உங்கள் கண்களை முதற்தடவையாகப் பார்க்கிறேன். அது மிகவும் சிறப்பானது. இந்தப் போட்டியை நாங்கள் வெல்லலாம் என நம்புகிறேன், அதன் பின், (சேர்ந்து) மது அருந்தலாம்ீீ என்றார். இந்தப் பதிலை அளிக்கும் போது,
அப்பதிலை விரும்பவில்லை என்பதை மக்லாப்ளின் வெளிப்படுத்த, ்வெட்கப்படாதே, பேபிீீ என கிறிஸ் கெயில் தெரிவித்தார். இதுதான், இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கெய்லது இத்தகைய பேச்சினால் தர்மசங்கடத்திற்குள்ளான அந்த தொகுப்பாளர் சுதாகரித்துக்கொண்டு பேட்டியை நிறைவு செய்தார்.
இந் நடவடிக்கை குறித்து தொலைக்காட்சி நிறுவனம் மாத்திரமல்லாது சர்வதேச கிரிக்கெட் வட்டாரமும், வலைத்தளவாசிகளும் தமது கண்டனத்தை  வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான சர்ச்சைகளுக்குப் பதிலளித்த கிறிஸ் கெயில், அது வெறுமனே நகைச்சுவை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அதில் நகைச்சுவையைக் காணமுடியவில்லை. மக்லாப்ளினின் கருத்துப்படி, அந்தப் பதிலால் தான் மிகவும் அவமானகமாக உணர்ந்ததாகவே தெரிவித்திருக்கிறார்.

 கெயிலைப் போன்றே பலரும், அது வெறும் நகைச்சுவை என கெயிலை நியாயப்படுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால், அது நகைச்சுவை கிடையாது, மாறாக, பெண்களை இழிவுபடுத்தும் கொச்சையான செயற்பாடு மாத்திரமே. பெண்ணொருவரை ஆணும், ஆணொருவரை பெண்ணும் தங்களுடைய எதிர்ப்பால் கவர்ச்சியின் காரணமாக, விரும்ப முடியும். அதை வெளிப்படுத்தவும் முடியும். ஆனால், மக்லாப்ளின் செய்து கொண்டிருந்தது தொழில். தன்னுடைய தொழிலை செய்துகொண்டிருந்த ஒருவரிடம், காதல் வார்த்தைகளைப் பயன்படுத்துவதென்பது அதுவும், நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்துவதென்பது பெண்களை இன்னமும் போகப் பொருளாகப் பார்க்கும் மனநிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.
இன்னமும் பெண்களை தொழில் நிபுணர்களாக மதிக்கும் பண்பை ஆண்கள் பெற்றுக் கொள்ளாததை வெளிப்படுத்துவதாகவே பலரும் கருதுகின்றனர்.

இவ்வாறிருக்க இதுவொன்றும் கெயிலுக்கு புதிதல்ல. இதேபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் தொடரின்போது பெண் நிருபர் ஒருவர், கெயிலின் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் அடுத்த போட்டியில் வீரர்களின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கெய்ல், நல்லது, நான் இதுவரை உங்களைத் தொட்டதில்லை. ஆகவே, எப்படி இருக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என்று கிண்டலாகக் கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.
இதற்கு முன்னர் போட்டியின் ஆடுகளம் பற்றிக் கேட்ட ஊடகவியலாளரிடம், பாலியல் ரீதியான பதிலை வழங்கியவரும் இதே கெயில்தான். பிக் பொஸ் லீக் தொடருக்காக வாழ்த்துத் தெரிவித்த ஊடகவியலாளரை தன்னோடு டேட்டிங் அழைத்தவரும் இதே கெயில்தான்.

ஆகவே, தனித்த ஒரேயொரு சம்பவமாக இதைக் கருதிவிட முடியாது. தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகளுக்கு இவர் தண்டனை அனுபவிக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறான நனவடிக்கையில் கேலிக்கையாகவே கெயில் ஈடுபடுகிறார் என்பதை ஏற்றுக்கொண்டாலும் இதனால் அவருக்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. சம்பந்தப்பட்ட பெண்களே ஏனையோர் மத்தியில் தலைகுனிய வேண்டியுள்ளது.

ஆக இதுபோன்ற பிரபலங்கள் பெண்களை இழிவுபடுத்துவதால் ஏனைய கடைநிலை ஆணும் இதையே பின்பற்ற வழிகோலுகிறது.

விளையாட்டுத்தான் என் வாழ்க்கை!

 விளையாட்டுத்தான் என் வாழ்க்கை! 
இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவி சுரேந்தினி சிதம்பரநாதன் 



இலங்கையின் விளையாட்டுத் துறையில் இன்றையளவில் தமிழர்கள் பலர் பிரகாசித்தாலும் நிறைவேற்றுத் தரம், பொறுப்புகள் சார்ந்த விடயத்தில் அவர்களின் பங்கு குறைவானதே.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தெரிவுகள் இடம்பெறும் வலைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவியாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தினி சிதம்பரநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க செயலாளர், மத்தியஸ்தர் சங்க செயலாளர், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளர், தெற்காசிய வலைப்பந்தாட்டப் போட்டி மத்தியஸ்தர் என பல பதவிகளை தன்னகத்தே கொண்ட சுரேந்தினி மென்மையான புன்னகையுடன் எந்தவித ஆடம்பரமுமின்றி பேச ஆரம்பித்தார்.

சொந்த இடம் அரியாலை. பிறந்து வளர்ந்தது அங்குதான். கிரவுண்டுக்கு முன்னால்தான் எங்கள் வீடு. விபரம் தெரிந்த காலம் முதல் கிரவுண்டிலேயே என்னுடைய பொழுது கழிந்தது. பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு பிற்காலத்தில் என்னுடைய துறையாகவும் மாறிப்போனது.
83இற்குப் பிறகு இடம் மாறினாலும் விளையாட்டின் மீதிருந்த ஈர்ப்பு மாறவில்லை. அப்பா, சகோதரி என எல்லோரும் விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்கவர்கள். அதனால் வீட்டில் என்றுமே எதிர்ப்பு இருந்ததில்லை.
கொழும்புத்துறை மகா வித்தியாலயம் என் ஆரம்பக் கல்விக்கு அடித்தளமிட்டது. தொடர்ந்து உயர்கல்வி, பட்டப்படிப்பை நிறைவுசெய்தேன்.
விளையாட்டுத்துறையை பொறுத்தவரையில் அரியாலை வலைப்பந்தாட்டக் கழகம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த கழகத்தின் வளர்ச்சியே  குறிப்பாக நான் வலைப்பந்தாட்டத் துறையில் பிரகாசிக்க தூண்டுகோலாகவும் அமைந்தது.

இந்த மண்ணில் பிறந்து 43 வருடங்கள் வாழ்கின்றேன் என்றால் அது விளையாட்டுக்காகத்தான். வலைப்பந்தாட்டத்தை ஒரு விளையாட்டாக நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அது என் இரத்தத்தில் ஊறிய ஒன்று. இதற்காகவே என் வாழ்நாளை அர்ப்பணிக்கின்றேன்.
டேபிள் டெனிஸ், கெரம், பாஸ்கட்போல், மெய்வல்லுனர் விளையாட்டுகள் என எல்லாவற்றிலும் அவ்வப்போது பிரகாசித்தாலும் எனது இலக்கு என்னவோ வலைப்பந்துதான்.

இது பெண்களுக்கு மட்டுமே உரிய விளையாட்டு என்று இருந்த காலம் போய் இன்று ஆண்களும் பங்குபற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களோடு போட்டிபோடவேண்டிய கட்டாயத்தில் பெண்கள் இருக்கிறோம்.
ஆக வலைப்பந்தாட்டத்தில் சிறந்த வீராங்கனைகளை உருவாக்க வேண்டும். தமிழர்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது இலக்கு என்கின்றார்.

பி.ஏ. பட்டதாரியாக இருந்தாலும் விளையாட்டின் மீது கொண்ட அளவற்ற காதல் குடும்ப வாழ்க்கையைக் கூட துச்சமாக நினைக்க வைத்துள்ளது.

சுரேந்தினியின் வாழ்க்கை மொத்தமும் விளையாட்டுத்துறைக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு உரிய அங்கிகாரமும், கௌரவமும் நிச்சயம் இவருக்கு கிடைத்தேயாக வேண்டும்.

விளம்பரத்தால் ஏமாறாதீர்கள் - பெண்களே விழிப்புடனிருங்கள்

மணமகன் தேவை! மணமகள் தேவை!
இந்த விளம்பத்திற்காகவே ஒரு பக்கம் விடிவதற்குள் பத்திரிகைகள் வாங்குபவர்கள் அதிகம்.. பெரும்பாலானவர்கள் இந்த விளம்பரத்தை பிரசுரித்துவிட்டு அது சரியாக பிரசுரிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்கும், சிலர் நமக்கு ஏற்ற ஜோடி இதில் கிடைக்கிறதா? என்ற எதிர்பார்ப்பை ஈடேற்றுவதற்கும் வாங்குகிறார்கள்.
இந்த விளம்பரங்கள் அத்தனையும் எத்தனை வீதம் உண்மை இருக்கிறது?
கடந்தவாரம் இவ்வாறு மணமகன் தேவை விளம்பரத்தால் பெண்ணொருவர் பணம், நகை, கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பறிகொடுத்த சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஆசிரியர் பெண், ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் இவர் தான் மருமணம் செய்ய விரும்பி மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார்.
இதற்கமைய தொடர்புகொண்ட 42 வயதான தான் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும், லண்டனில் தொழில் புரிவதாகவும் கூறி அப் பெண்ணை கண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் விடுதியொன்றில் தங்கியுள்ளனர். குறித்த ஆண் அப்பெண்ணுக்கு முகத்தை துடைக்கும்படி பேப்பரொன்றை கொடுத்துள்ளார். அதில் முகத்தை துடைத்த பின் அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்து விழிக்கையில் தான் பேராதனை புகையிரத நிலையத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் என்ன நடந்தது என்பது இப் பெண்ணுக்குத் தெரியாது. தன்னிடமிருந்த நகை, பணம், கையடக்கத் தொலைபேசி அனைத்தும் காணாமல் போயிருந்தது.
இது மட்டுமல்ல அண்மைக்காலமாக இவ்வாறு பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பெருந்தொகையான பணம், நகை மட்டுமல்ல பாலியல் துஷ்பிரயோகத்திற்கம் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
முறைப்பாடு செய்யப்படும் சம்பவங்கள் மட்டுமே பரலாக பேசப்படுகின்றதே தவிர இன்னும் எத்தனையோ சம்பவங்கள் குடும்ப சூழல், கௌரவம் என பல்வேறு காரணங்களுக்காக வெளிச்சத்திற்கு வரமால் மூடி மறைக்கப்படுகின்றன.
வெளியுலகிற்கு வராமல் தண்டனை வழங்கப்படாமல் இருப்பதுதான் இத்தகைய கைவரிசைக்காரர்களுக்கு சாதகமாகிப் போகின்றது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கொழும்பு பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் மிக விமர்சையாக ஒரு திருமணம் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அவருடைய தாய் மட்டுமே கலந்துகொண்டிருந்தார். திருமணத்திற்கான மொத்த செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக்கொண்டனர். இறுதியில்தான் தெரிந்தது  தான் கரம்பிடித்தவர் ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்பது.
தனியார் கம்பனியொன்றில் நிறைவேற்றுத் தரத்தில் பணியாற்றும் குறித்த நபரின் முதல் மனைவி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றுகிறார்.
இந்த ஆசாமிகள் ஏமாற்றியது வெவ்வேறு சூழலில் இருவேறு பிரிவினராக இருந்தாலும் இருவருமே பெண்கள். ஆக பெண்களை ஏமாற்றும் தைரியம் இன்று மட்டுமல்ல என்றுமே ஆண்களுக்கு அதிகம்.
இப்படி பல்வேறு யுக்திகளை பிரயோகித்து திருமணம், காதல், வேலைவாய்ப்பு, கல்வி என ஏதோவொரு காரணத்தைக் காட்டி தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்கள் மத்தியில் பெண்களின் வாழ்க்கை நூலறுந்த பட்டம்தான்.
இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன் நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களை திருமணம் செய்வதாக கூறி, அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுவந்த நபரொருவர் பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றது.
இந்நபருக்கு எதிராக குருணாகல், கண்டி, மாவனல்லை, கம்பஹா நீதிமன்றங்கள் பிடிவிராந்து பிறப்பித்திருந்தது. மேலும்  கொழும்பு பொரல்லை, வெயாங்கொட, அலுத்கம, எம்பிலிப்பிட்டி, அம்பலாங்கொட, பதுளை உட்பட பல பிரதேசங்களில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. குறித்த நபர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திருமணம் என்ற ஒன்றை வைத்து ஏகப்பட்ட சித்து விளையாட்டுக்களை காலங்காலமாக செய்து வருகின்றனர்.
இதை புரிந்துகொள்ளாத பல பெண்கள் அவர்களை நம்பி ஏமாந்து போகின்றனர். இருதில் மிஞ்சுவது என்னவோ மனவேதனையும், தலைகுனிவும்தான்.
உற்றார் உறவினர்களின் ஆசியுடன் அக்கு வேர், ஆணி வேராக அலசி ஆராய்ந்து செய்துவைக்கும் திருமண வாழ்க்கையே பொய்த்துப் போகின்றது. இந்நிலையில் சாதாரண விளம்பரத்தை நம்பி எப்படி உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கின்றீர்கள்?
ஒட்டுமொத்தமாக நாம் விளம்பரத்தின் மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் தொடர்புகள் எத்தனை உண்மைதன்மை வாய்ந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். இதுவே உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காமல் இருக்கும்.