பாலியல் குற்றத்திற்கு
இலங்கையில் என்ன தண்டனை?
தருபவர்:- M. Mangaleswary Shanker LL.B,Attorney-at-Law
ஒட்டுமொத்த இலங்கையரையும் இன, மத, பேமின்றி ஒன்றிணைத்த ஒரு போராட்டம் என்றால் அது புங்குடுதீவு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு கோஷங்களும்தான்.
இன்று நாட்டின் பல பாகங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் சாதாரணமாக இடம்பெறுகின்றன இது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றல்லாமல் ஒட்டுமொத்த பெண்கள் மீதான வன்முறை.
இந்நிலைகண்டு என்னதான் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் கொதித்தெழுந்தாலும் சட்டத்தால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியும். தண்டனைகள் கடுமையானதாக இருக்கும் பட்சத்திலேயே குற்றங்கள் குறைக்கப்படும். மக்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டத்தை கையில் எடுத்தால் அவர்களும் குற்றவாளிக் கூண்டில் நிற்க நேரிடும்.
இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அதற்கான இறுக்கமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற போதும், இலங்கையில் ஏற்கனவே பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பிலான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
1883 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட இலங்கை தண்டனைச் சட்டக் கோவையே (Penal Code) இன்று வரை எமது நாட்டின் குற்றவியல் சட்டத்தில் பெரும் பங்குவகிக்கின்றது.
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் ஏற்புடைய சட்டங்கள் என பார்க்கும்போது தண்டனைச் சட்டக்கோவையானது 1995ஆம் ஆண்டில் 22ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டு புதிதாக சட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கெதிரான சகலவிதமான பாரபட்டசங்களையும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் (Convention Elimination of All forms of Violence Against Women - CEDAW) இலங்கை 1981ஆம் ஆண்டு கைச்சாத்திட்டதும் காலப்போக்கில் CEDAW கமிட்டியின் பரிந்துரைகளும் காரணமாகும்.
இதன்படி 1995 ஆம் ஆண்டில் 22 ஆம் இலக்க சட்டத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் ஏற்கனவே குற்றமாக குறிப்பிடப்படாத விடயங்கள் சில தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன.
வன்புணர்ச்சி (Rape)
1995ஆம் ஆண்டு திருத்தத்துக்கு முன்னர் பாலியல் வல்லுறவு என்பது பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக, அவளின் சம்மதமின்றி ஒரு ஆணால் புரியப்படும் உடலுறவு பாலியல் வல்லுறவாக கொள்ளப்பட்டது. இங்கு பாலியல் வல்லுறவு குற்றத்தை நிருபிப்பதற்கு பெண் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதற்கான சான்றுகளும் காட்டப்பட வேண்டும்.ஆனால் 1995 இற்குப்பின் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக ஒரு ஆணால் புரியப்படும் உடலுறவு பாலியல் வல்லுறவாகவே கருதப்படுகிறது.
தண்டனைச் சட்டக்கோவை திருத்தச்சட்டம் பிரிவு 363 (1) இன் படி பின்வரும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஆண் பெண்ணுடன் உடலுறவு கொள்வாரராயின் அவர் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தவராகக் கொள்ளப்படலாம்.
* பெண்ணின் சம்மதமின்றி (அவள் மனைவியாக உள்ளபோதும்) நீதி முறைப்பிரிவினையின் போது (Judicial seperation மேற்கொள்ளப்படும் பாலியல் உறவு வன்புணர்ச்சியாக கொள்ளப்படும். இதுவே முதல் தடவையாக கணவன் மனைவியாக இருந்த போது கூட பாலியல் வல்லுறவு கொள்ளப்படலாம். அதாவது திருமணத்தின் பின்னரான பாலியல் வன்புணர்ச்சி (Marital rape) என ஏற்றுக்கொள்ளப்படும் முதல் சந்தர்ப்பமாகும்.
* சில சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவானது பெண்ணின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் ஆனால் சம்மதமானது பலாத்காரம், அச்சுறுத்தல், மரண பயம் அல்லது கடுங்காயம் ஏற்படுத்தல் அல்லது சட்ட முரணான தடுப்புக்காவலின் போது பெறப்பட்டது எனின் அதுவும் பாலியல் வல்லுறவு புரியப்பட்டதாகவே கொள்ளப்படும்.
*பெண்ணின் சம்மதத்துடன் ஆனால் சம்மதமானது பெண் சித்தசுவாதீனமற்றவர் (unsound mind), பெண் போதையில் உள்ளபோது (Under intoxication - alcohol, drugs) அல்லது அவனே தனது சட்ட பூர்வமான கணவன் என நம்பி இருந்த (she believes that he is lawfully married husband) நிலையில் பெறப்படுமாயின் அதுவும் பாலியல் வன்புணர்வுக்குள்ளேயே அடங்கும்.
*16 வயதிற்கு உட்பட்ட பெண்ணாயின் அவளின் சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ கொள்ளப்படும் உடலுறவு பாலியல் வல்லுறவாகும். இங்கு பெண்ணுடைய பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை சாட்சியாக வைத்து பெண்ணுடைய வயதை நிருபிக்க வேண்டும்.
தண்டனை
7 தொடக்கம் 20 வருட சிறைத்தண்டனை மற்றும் குற்றப்பணம்.தீவிரமான பாலியல் துஸ்பிரயோகம் (Grave Sexual Abuse)
கூட்டான வன்புணர்ச்சி (Gang rape)
கூட்டான வன்புணர்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்துதலாகும்.கட்டுக்காப்பு வன்புணர்ச்சி (Custodial rape)
பகிரங்க அலுவலர் (Public officer), அதிகார நிலையிலுள்ள நபர், தடுப்புக்காவலில் அதிகாரத்தை பயன்படுத்தல் (Management or staff of remand home or custody) வைத்தியசாலையில் (Hospital staff) கர்ப்பமாக உள்ள பெண், 18 வயதிற்கு குறைந்த பெண், உடல், உள ரீதியாக சுகயீனமுற்ற பெண் (Mentally or physically disabled) மீதான பாலியல் வன்முறை இதற்குள் அடங்கும்.
தண்டனை
10-20 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம்பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பிலுள்ள நடைமுறை சிக்கல்கள்.
சட்டப்படி பாதிக்கப்பட்டவரின் கதையை ஒப்புறுதிப்படுத்துதல் ஒரு தேவைப்பாடாக இல்லை. ஆனாலும், நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரின் ஒப்புறுதிப்படுத்தாத சான்றின் மீது ஒருவர் தீர்ப்பளிக்கக் கூடாது எனும் விதியை கையாண்டு வருகின்றது.ஆகவே பாதிக்கப்பட்டவரின் கதைக்கு எப்போதும் ஆதாரமாக பிற சான்றுளும் தேவைப்படுகின்றன. இதற்காகவே பொலிஸ் நிலையங்களில் பெண்கள் பிரிவொன்று (Women’s Desk) அமைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் நடைமுறையில் பாதிக்கப்பட்டவர் அலுவலர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
பாலியல் வல்லுறவுக் குற்றத்தைப் பொறுத்தவரை சட்ட வைத்தியச் சான்று (Medical Legal Report - MLR) கட்டாயத் தேவையாக உள்ளது. (இதற்கு பிரதான நகர்ப்புற வைத்தியசாலைகளில் மட்டுமே வசதிகள் உள்ளது)
நீதவானுக்கு முன்னிலையிலான விசாரணையில் பொலிஸார் தமது குறைந்த சட்டத்திறனுடன் அனுபவம் மிக்க எதிர்தரப்பு சட்டத்தரணிகளுடன் விவாதிக்க வேண்டியுள்ளது.
வழக்கு விசாரண காலதாமதம் அடைதல், பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுதல், சட்டத்தையும் நீதியையும் பெறுவதற்கான உற்சாகத்தை இழத்தல் போன்ற சிக்கல்கள் காணப்படுகின்றன.
இதனாலேயே பெரும்பாலான வழக்குகள் 10-15 வருடங்களுக்கு இழுத்தடிப்பு செய்யப்படுகின்றன. சில வழக்குகள் சரியான சாட்சியங்கள் இன்றி தள்ளுபடி செய்யப்படுகின்றன. சிலர் தாங்கலாகவே வழக்குகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment