வரம் கிடைக்காத தவங்கள்!
இலங்கையில் கடந்த வருடத்தில் மட்டும் 112 கர்ப்பிணிகள் பிரவசத்தின் போது உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது
பிரசவம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு; ஒரு புதிய உயிரைப் பூமிக்கு அழைத்துவரும் 10 மாதத் தவத்தின் பயன் கிடைக்கப்போகும் தருணம். ஆனால் எல்லாத் தவங்களுக்கும் வரங்கள் கிட்டுவதில்லை. இலங்கையில் கடந்த வருடத்தில் மட்டும் 112 கர்ப்பிணிகள் பிரவசத்தின் போது உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதில் நூற்றுக்கு 81 வீதமானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றும் 75 வீதமானோர் கிராமம் மற்றும் பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அதேநேரம் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த 112 உயிரிழப்புகளில் சிகிச்சைகள் தாமதமாகி வைத்தியசாலைகளுக்குள் இடம்பெற்ற மரணங்கள் 38.
சுகாதார அமைச்சின் தகவலின் படி கடந்த வருடத்தில் மாத்திரம் 118 குழந்தைகள் இந்த மண்ணில் பிறந்து கண் விழிப்பதற்குள் தாயை இழந்துள்ளனர் என்பதுதான் பரிதாபம்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்தது முதல் அக்குழந்தையை பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் வரையில் எத்தனையோ இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆனால் அத்தனை அனுபவங்களுக்குப் பின் அந்தக் குழந்தையை கொஞ்சவேனும் தாய் உயிரோடு இல்லாமல் போவது எத்தனை வேதனை.
சுகாதார அமைச்சின் ஆய்வுகளின் படி வறுமை, போஷாக்கின்மை, குறைந்த வயது, குறை பிரசவம், முறையான சுகாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணிகள் இதில் செல்வாக்கு செலுத்துகின்றன.
நகரபுறங்களை விட கிராமம் மற்றும் பெருந்தோட்டப் பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இப் பெண்களை பொறுத்தமட்டில் குடும்ப சூழ்நிலை, வறுமை காரணமாக காடு, மலையேறி தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. ஆகையால் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை. அதேசமயம் கர்ப்பகாலத்தில் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச் சத்துகளையும் கொடுக்கும் உணவுகளை உட்கொள்ள முடியாதுள்ளது.
இந்நிலையிலேயே கர்ப்பிணிகளில் நலனைக் கருதி நல்லாட்சி அரசினால் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இத்திட்டம் ஆரோக்கியமானதொன்றாக கருதப்பட்டபோதும் அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. இத்திட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆனது.
அதேசமயம் நகர்புற மக்களுக்கு இத்திட்டத்தால் கிடைத்த நன்மையில் பாதியேனும் கிராம மற்றும் பெருந்தோட்ட பெண்களுக்கு கிடைக்கவில்லை. வழங்கப்பட்ட உணவுப் பொதிகளில் காலாவதியான பொருட்களே அதிகம். இந்த உணவுப் பொதியை வழங்குவதைவிட வழங்காமல் இருப்பதே மேல் என்ற விமர்சனமே எழுந்தது.
இவ்விமர்சனங்களால் அரசு உணவுப் பொதிக்குப் பதிலாக வவுச்சர்களை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆலோசனை, நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறிருக்க கிராம மற்றும் பெருந்தோட்ட சுகாதார துறையை எடுத்துப்பார்த்தால் 5 அல்து 6 பிரிவுகளுக்கு ஒரு வைத்தியசாலையே இருக்கும். அதிலும் வைத்தியர் இல்லை, தாதியர் இல்லை, மருந்து வசதி இல்லை, அம்புலன்ஸ் இல்லை, போக்குவரத்து வசதியில்லை என பஞ்சப்பாட்டுக்கு பஞ்சமிருக்காது.
இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையே சுகாதார அமைச்சின் ஆய்வு முடிவுகளுக்கு ஆதாரமாகின்றன.
இவ்வாறிருக்க சுகாதார அமைச்சு கர்ப்பிணி பெண்களின் இறப்பு பற்றி ஆய்வுசெய்யும் அதேவேளை அந்த இறப்பை எவ்வாறு இல்லாதொழிக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்யுமாயின் ஆரோக்கியமானதாக அமையும்.
No comments:
Post a Comment