மார்பகங்கள் எப்போது ஆயுதமானது?
மக்கள் போராட்டங்கள் எப்போதுமே நீதிக்கான குரலாகவே ஒலிக்கும். எதிர்பாராத விதத்தில் சில சமயம் நீதிமன்றங்களுக்கு எதிராகவும் அமைகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் ஹாங்காங்கில் நீதிமன்றம் வழங்கி தீர்ப்புக்கு எதிராக வித்தியாசமான நூதன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்ததுள்ளது.
அதாவது ஹாங்காங்கில் மூத்த காவல்துறை அதிகாரியொருவரை தனது மார்கங்களால் தாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் மார்புக் கச்சை (Bra) அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டு தலைமைக் காவல்துறை அதிகாரியான சான் காஃபோ என்பவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தனது மார்பகங்களைத் தொட்டார் என்று நிங் லாய் இங்(30 வயது) என்னும் பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் நீதிமன்றமோ அந்தப் பெண்ணுக்கு எதிராக தீர்ப்பளித்தது. அந்தப்பெண் இந்த காவல்துறை அதிகாரி மீது வேண்டுமென்றே தனது மார்பகங்களைத் திணித்தார் என்றும், அந்த காவல்துறை அதிகாரி மீது வீன் பலி சுமத்தும் நோக்கிலேயே இவ்வாறு செய்தார் என்றும் நீதிமன்றம் பல்டியடித்தது.
இதற்காக அவருக்கு மூன்று மாதமும் 15 நாட்களும் சிறைத் தண்டனையையும் விதித்தது.
இதை எதிர்த்தே மார்பக நடை பயணம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் ஒன்று வான்சாயில் இருக்கும் ஹாங்காங் காவல்துறைத் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நடந்தது.
இதில் கலந்துகொண்ட சுமார் இருநூறுக்கும் அதிகமானோர் வெளியில் தெரியும்படி பிரா அணிந்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு மார்பகங்கள் ஆயுதங்கள் அல்ல என்ற கோஷத்தையும் எழுப்பினர். மேலும் ்மார்பகம் ஆயுதமா?ீ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படி ஊர்வலம் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னணி
ஹாங்காங் சீனர்களின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. சீனர்கள் ஹாங்காங்கிற்கு வந்து தரமான பொருட்களை மலிவான விலையில் கொள்வனவு செய்கின்றனர். இப்படி சீனர்கள் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு ஹாங்காங்கில் நீண்டகாலமாக எதிர்ப்பு நிலவிவருகிறது.
இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யென் லாங்க் பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிங் லாய் இங் கலந்துக் கொண்டிருந்தார்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினருடனான மோதலின்போது, காவல்துறைத் தலைமை அதிகாரியான சான், தனது கைப்பையை பறிக்க முற்பட்டார் என்றும், ஆனால் அவரது கை தனது மார்பகங்களில் பட்டதாகவும், இதன் மூலம் தன்னை நாகரீகமற்ற முறையில் தாக்கினார் எனவும் நிங் லாய் இங் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அந்த காவல்துறை அதிகாரியோ, இந்தப் பெண் தன்னை தாக்குதவதற்காக மார்பகங்களை பயன்படுத்தினார் என்று நேர் எதிரான குற்றச்சாட்டை அப்பெண்ணுக்கு எதிராக முன்வைத்திருந்தார்.
இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த டியூன்மென் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காவல்துறை அதிகாரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறி குறித்த பெண்ணை குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
பெண் என்கிற தனது அடையாளத்தைப் பயன்படுத்தி குறித்த அதிகாரி தன்னை மானபங்கம் செய்துவிட்டார் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்த முயன்றுள்ளார். ஆக இந்தப் பெண் தண்டிக்கப்படாவிடில், ஆர்ப்பாட்டங்களின்போது காவல்துறையினரை தாக்குவது சிறிய விஷயம் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும் என்பது காவல்துறை அதிகாரிகளின் கருத்து.
ஆர்ப்பாட்டக்காரர்களின் வாதம்
இவ்விடயத்தில் நிங் லாய் இங்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அபத்தமானது. புகார் கொடுத்த பெண்ணையே நீதிமன்றம் தண்டித்தது தவறு. இதை உலகிற்கு சொல்வதற்காகத்தான், பிரா அணியும் இப்படியானதொரு விசித்திரமான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததோடு, மார்பகங்கள் எப்படி ஆயுதமாக முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.அதேநேரம் பெண்கள் அரசியல் எதிர்ப்புக்களில் ஈடுபடுவதை இது தடுக்கும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இப்போராட்டத்தை முன்னெடுத்த பெண்கள் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் பெண்களை எவ்வாறு கையாள வேண்டும் எனபது தொடர்பில் வழிகாட்டலை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ஒரு ஆண் என்ற வகையில் பிரா அணிந்திருப்பது அவலட்சணமாக இருக்கலாம். ஆனால் இது நீதிமன்றத் தீர்ப்பை விட அவலட்சணமானதல்ல என்பது இதில் கலந்துகொண்ட ஆண்களின் பொதுவான கருத்தாக அமைந்தது.
No comments:
Post a Comment