கருத்தடை ஆணாதிக்கத்தின் ஒரு வடிவம்!
பெண்ணின் வலிக்கு விடுதலையளிக்க வழியிருக்கிறது!
பெண் இந்தப் பூமியில் ஜனித்தது முதல் மண்ணுக்குள் புதையுண்டு போகும் வரை உடல், உள ரீதியாக எத்தனை எத்தனை மாற்றங்கள், சிரமங்களை இதையெல்லாம் பெண் தாங்கத்தான் வேண்டும். அதுதான் இயற்கை விதித்த நியதி, அத்தோடு கருத்தடை என்கிற செயற்கை அவஸ்தையும் பெண்ணுக்கு வலிந்து திணிக்கப்படுவதுதான் மற்றுமொரு துயரம்.
பூப்படைதல், அதன்பின் மாதாமாதம் உடல் மன உபாதைகளோடு மாதவிடாய், தாய்மை, 10 மாதம் குழந்தையை சுமக்கும்போது ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், சாதாரணமாக ஒரு மனிதனால் 40 டெல்மானி வலியையே தாங்க முடியும். ஆனால் ஒரு பெண் பிரசவத்தின் போது 54 டெல்மானி வலியைத் தாங்குகிறாள் இப்படி வலிநிறைந்த பிரசவம், அதற்குப் பின்னரும் மெனோபஸ், அதுதரும் உடல் உள மாற்றங்கள்....
அப்பப்பா பெண்ணாய்ப் பிறந்ததே பெருந்துயரம் என்று நினைக்கும் அளவுக்கு வலிகளும், வேதனைகளும், அவஸ்தைகளும் நிறைந்ததுதான் பெண் வாழ்க்கை!
ஒரு பெண் இந்தப் பூமியில் ஜனித்தது முதல் மண்ணுக்குள் புதையுண்டு போகும் வரை உடல், உள ரீதியாக எத்தனை எத்தனை மாற்றங்கள், சிரமங்களை இதையெல்லாம் பெண் தாங்கத்தான் வேண்டும். அதுதான் இயற்கை விதித்த நியதி,
அத்தோடு கருத்தடை என்கிற செயற்கை அவஸ்தையும் பெண்ணுக்கு வலிந்து திணிக்கப்படுவதுதான் மற்றுமொரு துயரம். நடைமுறையிலுள்ள கருத்தடை முறைகள் பெண்ணுக்கு பல உடலியல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, ஆண்கள் நினைத்தால் இந்த அவஸ்தையிலிருந்து பெண்ணுக்கு விடுதலையளிக்க முடியும். ஆண்களும் கருத்தடை செய்துகொள்ள முடியும். மேலைத்தேய நாடுகளில் ஆண்கள் கருத்தடை செய்து கொண்டாலும் இதனை ஏற்கும் கலாசாரம் ஆசிய நாடுகளில் ஏற்படவில்லை.
இது ஒரு பாரதூரமான பிரச்சினையாக பேசப்படாவிட்டாலும் கருத்தடை செய்வதால் ஏற்படும் விளைவுகளை மோசமான பாதிப்புகளை பெண்கள் மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கருத்தடையால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
கடந்த வருடம் நவம்பர் மாத நடுப்பகுதியில் சத்தீஸ்கர் மாநிலம் பிளாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடத்தப்பட்டது. இதில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 29 பெண்கள், வாந்தி மற்றும் வயிற்று வலி என பல்வேறு பிரச்சினைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த 28 பேர் பலியாகினர்.
70-80 களில் மலையக சமூகத்தில் இனத்தின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்பட்டது. தெரு நாய்களுக்கு நடக்கும் குடும்ப கட்டுப்பாட்டைப் போன்று வீதிகளில் கருத்தடை நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இது சர்வதேச ரீதியிலும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம்.
இன்றும் அவ்வாறு இல்லாவிட்டாலும் கருத்தடை மிகச்சாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது. எல்லாம் நவீனமாகிப் போனதால் இதுவும் நவீனமயமாகிப் போனது. இது ஒரு பிரச்சினையே அல்ல என்ற வகையில் சகஜமாக வாழ எமது சமூகம் பழக்கப்பட்டு விட்டது. தற்போது எல்லாக் குடும்பங்களிலும் குழந்தைப் பேறின் பிறகு தாய்வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்கு செல்லும் பெண்கள் கருத்தடை சாதனங்கள் பொருத்தப்பட்டே செல்கின்றனர். இதற்கு மாற்றீடாக ஆண்கள் எதனையும் செய்வதாகத் தெரியவில்லை.
இது குறித்து பம்பலப்பிட்டி நியூ லங்கா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண் நோயியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஜி.சுஜாகரனிடம் வினவினோம்;
உலகலாவிய ரீதியில் பெண்களுக்கென 18 கருத்தடை முறைகள் இருந்தாலும் பாவனையில் 5-6 முறைகளே இருக்கின்றன.
இலங்கையைப் பொருத்தவரையில் பெண்களுக்காக மாத்திரை, ஊசி, லூப், சத்திரசிகிச்சை போன்ற பல கருத்தடை முறைகளும், ஆண்களுக்காக கொன்டம் பாவிக்கும் கருத்தடை முறையுமே பயன்பாட்டில் உள்ளன. ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை இருந்தாலும் பெரும்பாலும் பெண்களே கருத்தடை செய்கின்றனர். ஆண்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வரையிலேயே கருத்தடை செய்துகொள்கின்றனர்.
பெண்களுக்கான கருத்தடை மூலம் பிரச்சினைகள் வெளிப்படையாக பேசப்படவில்லையாயினும் கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக அதாவது 10 அல்லது 15 வருடங்களுக்கு பாவிப்பார்களானால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஊசி பாவிப்பதால் சிலர் உடல் மெலியலாம், சிலர் அளவுக்கதிகமாக பருமடையலாம். மருந்துகளை பாவிக்கும் காலத்தில் வாந்திப்போக்கு ஏற்படலாம். லூப் சரியான முறையில் பொருத்தப்படவில்லையாயின் அதிக இரத்தப்போக்கு, மாதவிடாய் முறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆண்களுக்கு ஆணுறைகள் (condoms), வாசக்டமி என இரு முறைகள் இருக்கின்றன. ஆணுறை என்பது HIV/AIDS போன்ற நோய்களை தடுக்கும் ஒரு சாதனமாகவே பார்க்கப்படுகிறது. ஆண்கள் இதை கடைகளில் வாங்குவதை கௌரவக் குறைச்சலாக கருதுகிறார். இதை தான் வாங்குவதால் தன்னை தரக்குறைவாக மற்றவர்கள் நினைப்பார்களோ என்ற எண்ணத்திலேயே பெண்களை கருத்தடை சாதனங்களை பயன்படுத்த நிர்பந்திக்கின்றனர்.
நிரந்தர கருத்தடை முறை இருபாலாருக்கும் பொதுவானது. ஆண்களும் இதனை செய்துகொள்ளலாம். பெண்களுக்கு லெப்ரொஸ்கோபி முறையில் கருத்தடை செய்வது ஆபத்தானதல்ல. ஆனால் நகர் புறங்கள் தவிர்ந்த பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த முறை இல்லை. பெரும்பாலும் ஒப்பன் சர்ஜரி முறையிலேயே செய்யப்படுகிறது. இது சரியான முறையில் செய்யப்படவில்லையாயின் சிக்கல்களை தோற்றுவிக்கும்.
கருத்தடையை ஆண்கள் செய்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படப் போவதில்லை. வழமையான வாழ்க்கையை வாழமுடியும். ஆனால் நமது ஆண்கள் கருத்தடைக்கு முன்வருவதில்லை. அவரது குடும்பத்தாரோ ஏன் அவரது மனைவியோ கூட இதற்கு சம்மதிப்பதில்லை என்றார்.
சாதாரணமாக கருத்தடை அல்லது நிரந்த கருத்தடை முறையின் பின்னர் பெண்கள் உடல், உள ரீதியில் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர் என்பது உண்மை, அதிக இரத்தப்போக்கு, அடிவயிறு வலி, உடுல் எடை அதிகரித்தல் இப்படியான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
பெண்களுக்கு கருத்தடைக்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்போது இரத்தப்போக்கு, வலி ஏற்படும் .நாளடைவில் தழும்பு தெரியும். அவர்களின் உடல் பலவீனமடையும். ஆனால் ஆண்களுக்கான கருத்தடை முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று அழைக்கப்படுகிறது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது என்பதே பரவலான வாதம்.
வரலாற்று ரீதியாகவும் பெண்களுக்கான கருத்தடை முறைகள் இருந்துள்ளன. பண்டைய ரோமில் பெண்கள் தனது பூனையின் ஈரலை ஒரு பையில் போட்டு இடது காலில் கட்டிகொண்டனர். சிலர் தவளையின் வாயில் மூன்று முறை துப்பினர். இவை கருவுருவதை தடுக்கும் என நம்பினர். எகிப்திய பெண்கள் முதலையின் சாணத்தை கருத்தடைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
etrers papyrus என்ற ஓலைச் சுவடியில் கருத்தடை செய்வதற்கு பேரீச்சை. கருவேலமரப் பட்டை, தேன் ஆகியவற்றை பசையாகி அதை பெண்ணுறுப்பில் வைத்தனர் என்ற தகவல் உண்டு. இப்போது இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறையில் இல்லையென்றாலும் இதிலிருந்து மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை கருத்தடை என்பது பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்று என்ற ஒரு குறுகியப் பார்வை இருப்பதை அறியமுடிகின்றது.
ஒரு குழந்தையை உருவாக்குவது, அதன் வளர்ப்பு, எதிர்காலம் என்பவற்றில் எப்படி இருபாலினருக்கும் பொறுப்பு உண்டோ அதேபோல் கருத்தடையிலும் ஆண்களும் பொறுபேற்று வேண்டும். கற்பு, தாய்மை, புனிதம் போன்ற சொற்களால் பெண்கள் மீது திணிகப்படும் பொறுப்புகளில் ஒன்று கருத்தடை. கருத்தடை பற்றிய அடிப்படை புரிதல் இருந்தால் ஆண்கள் இந்த வலியிலிருந்து பெண்ணுக்கு விடுதலையளிக்க முடியும். இந்த நவீன யுகத்திலும் ஆண்கள் கருத்தடையை ஏற்காதிருப்பது பெண்கள் மீதான ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே தவிர, ஆண்மையின் அடையாளம் அல்ல.
No comments:
Post a Comment