ஒருபால் திருமணத்தை ஆதரிக்கிறதா இலங்கை?
அக்கினி வளர்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, வேத விற்பன்னர் மந்திரம் ஓத பெற்றோரின் சம்மதத்துடன், திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்தீப்-கார்த்திக் திருமணம் அமெரிக்காவில் கோலாகலமாக நடந்தது. இவர்கள் இருவருமே ஆண்கள்!
இதேபோல லக்ஸம்பேர்க் நாட்டின் பிரதமர் ஷேவியர் பெட்டெல் கௌதியர் டெஸ்டினே எனும் கட்டிடக் கலைஞரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட தனது மகனுக்காக அவரது தாய் மாப்பிள்ளை தேடிய விளம்பரம் கொடுத்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமானதாக்க அயர்லாந்து மக்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இது இலங்கையில் எத்தனை வீதம் அல்லது எந்தளவு சாத்தியப்படும் என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையில் ஒரு பாலின திருமணத்தை சட்ட பூர்வமானதாக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. இந்த விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை அரசு இறுக்கத்துடனேயே செயற்படுகின்றது. அத்தோடு சில அரசியல்வாதிகளும் ஒரு பாலின திருமணத்தை அங்கிகரிக்கக் கூடாது என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர்.
இலங்கையில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒருபாலின சேர்க்கைக்கான தடை தற்போதும் அமுலில் உள்ளது.
பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளில் 41 நாடுகள் ஒருபாலின சேர்க்கையை தடை செய்துள்ளன. இத்தடை பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமை அடிப்படையில் ஒருபாலின திருமணத்தை உலக நாடுகள் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செயற்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் ஒவ்வொரு வருடமும் 20 நாடுகள் தங்களது விருப்பத்தையும் ஆதரவையும் வழங்கியுள்ளன. இதில் இலங்கையும் அடங்குகிறது.
இந்நிலையில் இலங்கையில் ஒருபாலின திருமணம் ஆதரிக்கப்படுகிறதா? அரசாங்கம் கொள்கைகளில் மாற்றம் செய்து கொண்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
நாட்டில் காணப்படும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம். இலங்கையில் ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக யார் தீர்மானித்தார்கள்? பிரதமர் தலைமையிலான குழுவினரா? அல்லது வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினரா? அல்லது ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் தேசிய நிறைவேற்றுப் பேரவையினால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? என்பதனை அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பல கேள்விக் கணைகளையும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் தொடுத்துள்ளார்.
ஓரின சேர்க்கையாளர்கள் சட்ட ரீதியாக அங்கிகரிக்கப்படும் போது பல்வேறு பிரச்சினைகள் எழும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் அவர்களையும் சக மனிதர்களாக மதிக்கும் மனப்பக்குவம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
இவ்வாறு பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இருக்க இலங்கையில் ஒருபாலின ஈர்ப்புள்ளவர்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றனர்? அவர்களுக்கான அங்கிகாரம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு சிலரின் பதில்...
நளினி ரத்னராஜா (பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்)
என்னைப் பொறுத்தவரை சமயம், மதம், கலாசாரம் எல்லாவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு மனித உரிமை கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது. இது இயற்கையானது. ஆண் பெண் உறவுதான் சரியானது என்ற கட்டமைப்பே ஊட்டப்பட்டுள்ளது. ஒருபாலின உறவு பிழையானது என்ற கருத்து எமக்குள் திணிக்கப்பட்டுள்ளது.
பாலினத்தை காரணம் காட்டி அரசியல், பொருளாதாரம், சமூக ரீதியான உரிமைகள் மறுக்கப்படுவது தேவையற்றது. இவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்குதல், தொழில் வழங்காமை தேசிய பொருளாதாரத்தில் பாதிப்பையே ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மனிதனுடைய தேர்வும் அது ஆணோ பெண்ணோ சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே அமையும். அதை ஏனையவர்கள் கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ குற்றம் என்று தண்டிக்கவோ உரிமை இல்லை.
மனிதன் தோன்றிய காலம் முதல் ஒருபாலின உறவு இருந்தமைக்கான சான்று இருக்கின்றது. இதற்கான சான்றுகள் பண்டைய வரலாறுகளில் இருக்கின்றது. இந்தியாவிலுள்ள கஜராஹோ கோவிலிலுள்ள சிற்பங்கள் இதனை பிரதிபலிக்கின்றன.
இவர்களை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே இவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து பயந்து வாழவேண்டி ஏற்படுகின்றது. மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மற்றவரின் கேலி கிண்டல்களுக்கு ஆளாவதோடு பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்புணர்களுக்கும் ஆளாகிக்கப்படுகின்றனர். இவர்களை எமது சமூகம் வேற்று உலக மனிதர்களாகவே பார்க்கின்றது. இந்த பார்வை மாற விழிப்புணர்வு வேண்டும். சட்ட அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும்.
மேலும் ஒரு பாலின சேர்க்கையாளர்களை அங்கிகரித்த நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகம் பெண்களுக்கெதிரான வன்முறை குறைவாகவே காணப்படுகின்றன. இவர்களும் மனிதர்களே! மதிக்கப்பட வேண்டியவர்களே!
மங்களேஷ்வரி (சட்டத்தரணி)
இன்றைய காலகட்டத்தின்படி வெவ்வேறு நாடுகள் ஒருபாலினத்தவரை ஏற்று திருமணத்தை அங்கிகரித்தாலும் இலங்கை சட்டத்தின்படி இன்னும் அங்கிகரிக்கப்படவில்லை. சட்டரீதியாக ஒருபாலின சேர்க்கை என்பது குற்றத்திற்குரிய விடயம். 1883ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆண் ஆணுடன் பாலியல் தொடர்பு வைப்பது குற்றம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் 1995 ஆம் ஆண்டு இச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதனடிப்படையில் எந்த ஒரு நபரும் இயற்கைக்கு மாறான உறவுவைத்தல் 365 ஏ என்ற பிரிவின் படி குற்றமாகும். ஆனால் இதிலும் சிக்கல்கள் இல்லாமலில்லை. யார் யாருடன் உறவு வைக்கலாம் என்றதற்கான வரையறை குறிப்பிடப்படவில்லை.
இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் இருக்கிறது. ஆண், பெண் என இரு பால் சேரும் போதும்தான் அங்கு மறுவுற்பத்தி ஏற்படுகிறது. ஆணும் ஆணும் சேரும் போதோ அல்லது பெண்ணும் பெண்ணும் சேரும் போதோ இது சாத்தியப்படாது. செயற்கை முறையில் குழந்தை பிரசவித்தாலும் அது ஆரோக்கியமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. அப்படியே இருந்தாலும் அந்தக் குழந்தை ஒரு குழந்தையை சுமக்கும் சக்தியை கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பண்டைய காலத்தில் ஒருபாலின சேர்க்கை இருந்திருக்கலாம். ஆனால் அது மறைக்கப்பட்டிருந்தது. இன்று வெளிச்சம்போட்டு காட்டப்படுகிறது. இதனால் நாம் பிடித்தவருடன் வாழலாம் என்ற துணிவு எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும். ஆண் ஆண், பெண் பெண் என்ற ரீதியில் வாழ ஆரம்பித்தார்களானால் உலகில் இயற்கை சமநிலை பேணப்படுமா? சனத்தொகை வளர்ச்சியடையுமா? ஆரோக்கியமான சமூகம்தான் தோற்றம்பெறுமா? ஆக ஒருபாலினத்தவருக்கு அங்கிகாரம் அளிக்கக்கூடாது என்பதல்ல எனது வாதம். அங்கிகரிக்கப்படும்போது ஏற்படும் விளைவுகளை எமது சமூகம் ஏற்கத் தயாராக இருக்கிறதா என்பதுதான் என்றும் அவர் சொல்கிறார் என்.கணேசன் (விசேட உளநல வைத்திய நிபுணர்)
ஓரின சேர்க்கையாளர்களின் உருவாக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பரம்பரை, சூழல், உடலியல் போன்ற காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. ஒருவரின் வாழ்க்கையில் தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவு. சமூக ரீதியாக அங்கிகரிக்காத படியால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தாழ்வு மனப்பான்மை, பயம், மனவுளைச்சல் என உளவியல் ரீதியிலும் பாதிப்படைகின்றனர்.
உலகலாவிய ரீதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பலர் சிறந்த கலைஞர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை ஓரின ஈர்ப்பாளர்கள் இருந்தாலம் பணம் படைத்தவர், படித்தவர்கள் சமூகத்தில் ஓரளவு சமாளிக்கலாம். ஏனையவர்களுக்கு இது முடியாத காரியம். இதனால் பெரும்பாலும் நாட்டைவிட்டு வெளியேறியவர்களே அதிகம்.
மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாதவரை எதையும் தவறாக ஏற்க முடியாது.
இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்கள் இருந்தாலும் அவர்கள் தம்மை வெளிப்படுத்தாதவர்களாகவே உள்ளனர். எதிர்காலத்தில் எதுவும் மாறலாம்.
No comments:
Post a Comment