Friday, April 1, 2016

ஆணாதிக்க கொடுமையை

ஆணாதிக்க கொடுமையை தோலுரிக்கும் இந்தியாவின் மகள்!




நாம் பலாத்காரம் செய்யும் போதுஅவள் சும்மா இருந்திருக்க வேண்டும்!
பாலியல் குற்றவாளியின் வாக்குமூலம்




பெண் ரத்தினம் போன்றவள். அவளைக் கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்க் கௌவிக்கொண்டுதான் போகும்





இந்திய அரசின் தடையை மீறி ்இந்தியாவின் மகள்ீீ ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது பிபிசி. மகளிர் தினத்தில் வெளிவரவிருந்த இப்படம் நான்கு நாட்கள் முன்னதாக வெளியாகி ஏற்படுத்திய அதிர்வலைகள் ஏராளம். ஈனப்பிறவிகளின் இழிசெயல், வக்கிரம், கொடுமையின் உச்சம், சட்டத்தின் ஓட்டை, மனிதனுக்குள் வாழும் மிருகங்களின் போலி முகங்கள் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி சாட்டையடி கொடுக்கிறாள் இந்தியாவின் மகள்!

ஆணுக்குப் பெண் நிகர் என்பது வெறும் வாய்வார்த்தைகள். ஆண்களில் கொடுமையான அணுகுமுறை, பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், ஆண்கள் ஆட்டிவைக்கும் பொம்மைகள்தான் பெண்கள் என்ற நிலை இன்னும் மாறவில்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறாள் இந்தியாவின் மகள்.

டெல்லியில், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட குழுவால் 23 வயது மருத்துவ மாணவி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு உடலெங்கும் இரத்தம் வழிய, உறுப்புகள் கொடூரமாக சிதைக்கப்பட்டு ஒட்டுத்துணியின்றி நடுவீதியில் தூக்கியெறியப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை வைத்து ''இந்தியாவின் மகள்'' என்ற ஆவணப்படத்தை இங்கிலாந்து திரைப்பட இயக்குநர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.-4 குழுவினர் உருவாக்கினர்.

அந்தக் கொடிய இரவில் இருந்தே தொடங்கும் படத்தில் நிர்பயா எனும் புனைப்பெயரால் அழைக்கப்படும் ஜோதி சிங் பற்றி அவளின் பெற்றோர் ஆஷா சிங், பத்ரி சிங் பேசுகிறார்கள்.
நிர்பயா இந்த பூமியில் அவதரித்தது முதல் அணுவணுவாக அவளிடத்தில் பெற்றோர் இரசித்தவை, அவளின் கனவு, தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் மீட்டிப்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கொடூரத்திற்கு பின் ஏற்பட்ட கொந்தளிப்பு, போராட்டம், கோபம் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடூரத்தை கண்காட்சி பார்ப்பது போல் பார்த்துச் சென்ற சமூகம் எப்படிப்பட்டது? நிர்பயா அனுபவித்த கொடுமை, நரக வேதனை இனி ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடாது. பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குற்றவாளிகளின் பின்னணியும் காட்டப்பட்டிருக்கின்றது.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒருவனான தீகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முகேஷ் சிங்கின் கருத்து முழு உலகையும் கொந்தளிக்கச் செய்திருப்பதோடு, ஒட்டுமொத்த பெண்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கொச்சைப்பத்துகிறது. அவர்களின் எதிர்காலத்தை, நடத்தையை, தைரியத்தை கேள்விக்குட்படுத்துகின்றது.

''பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள்தான் பொறுப்பு. பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும். இரவு ஒன்பது மணிக்குமேல் வெளியில் செல்லும் பெண் ஒழுக்கமானவள் அல்ல. பெண்ணும் ஆணும் சமமில்லை. அவர்கள் வீட்டு வேலை செய்வதில் மட்டுமே ஈடுபட வேண்டும். இது எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக்கொண்டு சாதிக்கிறார்கள். எங்களிடம் தைரியம் இருந்தது. தப்பித்துவிடலாம் என நினைத்தோம். இந்தப்பெண் எங்களை எதிர்க்காமல் போயிருந்தால் இப்படி ஆகியிருக்காது. வன்புணர்வு நடக்கிற பொழுது ஒத்துழைக்காமல் போனதால்தான் இப்படியானது. அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் தாக்கியிருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம். இந்தத் தூக்கு தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக்குத்தான் உள்ளாகப் போகிறார்கள். முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள். இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதையை முடித்துவிடுவார்கள்'' என துளியளவும் சலனமில்லாமல் மனசாட்சியை கொன்றுவிட்டு முகேஷ் சிங் தெரிவித்த கருத்து மீண்டுமொரு ஆண்கள் இனத்திற்கே அவமானமாக இருக்கிறது.

நிர்பயாவின் நிலை கண்டு உலகே கண்ணீர் வடிக்க முகேஷ் சிங் அவன் செய்த கொடுமைக்கு துளியும் வருந்தவில்லை. தவறுக்காக தண்டனை பெற்றும் அவன் மனநிலையில் மாற்றமில்லை என்பதைக் காட்டுகிறது.
இந்நிலையில் முகேஷ் சிங்கிற்கு ஒத்து ஊதுவது போல் வழக்கறிஞர் ஏ.பி.சிங். சொல்லியிருக்கிறாள்

பெண் ரத்தினம் போன்றவள். அவளைக் கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்க் கௌவிக்கொண்டுதான் போகும். ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என் வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பிவைக்க மாட்டேன். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்த வெளி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸ்க்குதான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை என்கிறார்.

நிர்பயா உண்மையிலேயே இரவு 11 மணிக்கு நண்பருடன் படம் பார்க்கதான் சென்றாரா? பெண்களின் ஆடைகள், நடத்தை மற்றும் அவர்கள் பொருத்தமற்ற இடங்களுக்கு செல்வதாலுமே பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன என தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான ஆஷா மிர்கே தெரிவிக்கின்றார்.

ஆக இவர்களின் பார்வையில் பெண்களே பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு காரணம். வன்புணர்வுகளை ஏற்றுக்கொண்டு வாய்மூடி வாழ வேண்டுமென நினைக்கிறார்கள். பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை ஆண்களே தீர்மானிக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். கலாசாரத்தை காரணம் காட்டி பெண்களை அடுப்படியில் முடக்கிப்போட விளைகிறார்கள். இவர்களின் கருத்தால் உலக பெண்மையையே பரிசோதிக்க முனைகிறார்கள்.

எந்தவொரு பெண்ணும் வன்கொடுமைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை. அப்படியிருக்கையில் உயிருக்கு பயந்து இவர்களின் இச்சைக்கு இணங்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
அதேநேரம் இந்தக் கருத்துகளுக்கு எதிரான கோஷங்களும், கண்டனங்களும் எழுப்பத் தவறவில்லை.

இந்தக் கொடுமைப் பற்றிப் பேசிய லீலா சேத், இச்சம்பவத்தில் கொடூரமான விஷயம் இரும்புக்கம்பியை அவளின் உடம்பிற்குள் இறக்குகிற அளவுக்கு எப்படி இவர்கள் செயல்பட்டார்கள் என்பதுதான். பெண்ணுக்கு அதிகாரத்தில் பங்கில்லை என்கிற பார்வையின் ஒரு வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்கிறார்.

வீட்டில் பெண்ணுக்கு கால் கிளாஸ் பாலும், ஆணுக்கு ஒரு கிளாஸ் பால் கொடுப்பதில் இருந்தே, நீ அவளை விட உயர்ந்தவன் என்கிற எண்ணத்தை விதைக்க ஆரம்பித்து விடுகிறோம். இவற்றை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீஷித்.

பொருளாதாரச் சுதந்திரம் பெற்று வெளியே நடமாடும் பெண்கள் தவறானவர்கள் என்று ஆணாதிக்க மனம் எண்ணுகிறது. பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்கள், வீட்டு வன்முறைகள், காணாமல் போகும் பெண்கள், கருவிலேயே கலைக்கப்படும் சிசுக்கள் என்று பல்வேறு அளவுகோல்கள் பெண்கள் நிலை மோசமாக இருப்பதைக் காட்டுகின்றன. மகாராஷ்ட்ராவில் கொல்லப்பட்ட 10 ஆயிரம் கருக்களில் 9,999 பெண் சிசுக்கள் என்பது ஒரு சான்று என ஒக்ஸ்போர்ட் வரலாற்று பேராசிரியர் மரியா மிஷ்ரா அதிரவைக்கிறார்.

''இந்தியாவின் மகள்'' எடுக்கப்பட்ட நோக்கத்தை அடைந்ததோ இல்லையோ திரைக்குப் பின்னால் இருக்கும் ஆணாதிக்க அதிகாரங்களை வெளிக்கிளம்பச் செய்திருக்கிறது. பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை அம்பலப்படுத்தியிருக்கிறது.மொத்தத்தில் ''இந்தியாவின் மகள்'' ஆண், பெண் சமத்துவத்திற்கு சவால் விட்டிருக்கிறது. சமூகத்திடம் பல கேள்விகளை தொடுத்துள்ளது? கேள்விக்குறிகளை முற்றுப்புள்ளியாக்க முனைகின்றது.


No comments:

Post a Comment