மொடர்ன் உடையணித்தால் தப்பா?
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் தப்பா?
சர்ச்சையைக் கிளப்பும் பெண் சாமியார்.
கண்ணை உறுத்தும் கலரில் லிப்ஸ்டிக், மேக்கப் அப்பிய முகம், தரையைத் தொடும் சிவப்பு நிற ஆடைஎன ராதேமாவைப் பார்த்தால் ஏதோ மார்க்கெட் போன சினிமா நடிகை என்று தோன்றும்.
ஆனால் இந்தக் கோலத்தோடு ஒரு கையில் சூலாயுதம், மறு கையில் ரோஜாப் பூ என சாமியாரினியாக வலம் வருகிறார் ராதேமா.
அண்மையில் இவர் மினி ஸ்கர்ட், தலையில் தொப்பி, தக தக மேக்கப் என கவர்ச்சி நடிகைகள் தோரணையில் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்கில் பரபரப்பாக பட்டையைக் கிளப்பி இப்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
இது மட்டுமல்ல வரதட்சணை கொடுமை, 6 பேரை தற்கொலை செயத் தூண்டியது போன்றவற்றுக்காக வழக்குப்பதிவு, கட்டிப்பிடிப்பு, முத்தம், கவர்ச்சி டிரஸ், டான்ஸ் ஆடுவது, விமானத்தில் சூலாயுதத்துடன் பயணம் என ராதே மா பற்றிய சர்ச்சை செய்திகளுக்கு பஞ்சமில்லை.
இத்தனை சர்ச்சைக்குரிய ராதே மா யார்?
வட இந்தியாவைக் கலக்கி வரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார்தான் இந்த ராதே மா (46 வயது). இவரைப் பற்றி செய்திகள் வரவில்லையென்றால் அன்று பொழுது விடியவில்லை என்றுதான் அர்த்தம். சினிமாவில் வரும் கவர்ச்சி நடிகைகளைப் போல் எப்போதும் மிடுக்காக காட்சி அளிப்பது இவரது இயல்பு. லிப்ஸ்டிக், சிவப்பு நிற அலங்கார உடையில் கையில் ரோஜாப்பூவுடன் எப்போதும் சீடர்களுக்கு காட்சி தருவார். மலர்ப் படுகையில் துயில் கொள்வார். 10ஆம் வகுப்புக்கு மேல் படிப்பு அதிர்ஷ்டம் இல்லை. 18 வயதில் திருமணம். கணவர் மோகன் சிங். கணவரை பிரிந்தவர் ராம்தீன் தாஸ் என்ற சாமியாரை சந்தித்தார். அதன் பின் இவரும் சாமியாராகிவிட்டார் இதுதான் ராதே மா சாமியாரான வரலாறு.
இப்படி சாமியாரானவரது ஆசீர்வாதம், பிரார்த்தனை எப்படியானது தெரியுமா? சொக்கவைக்கும் தோற்றம் எப்படி இவரை வித்தியாசப்படுத்துகிறதோ அப்படித்தான் பக்தியும், பிராத்தனையும், ஆசீர்வாதமும் வித்தியாசமானது.
இது அதுக்கும் மேல, இதைத்தவிர சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பக்தி முத்தி கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, மடியில் வைத்து கொஞ்சுவது, அலோக்காக தூக்கி பரவசமடைதல் இதுதான் இவர் பக்தர்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதம், கடவுளுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை. இங்குதான் சமத்துவம் பேணப்படுகிறது.
இந்த தட்சணை பரிமாற்றக் காட்சிகள்தான் இன்று இணையத்தில் உலாவுகின்றன. இதுதான் இவரை யார் என்று தேடும் வெளியுலகிற்கும் அடையாளப்படுத்தியிருக்கிறது. சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறிருக்க பக்தர்கள் ஆறு பேரிடமிருந்தும் ராதே மா கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களைப் பறித்துக் கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெண்ணொருவர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். நிகி குப்தா என்ற இவருடைய சீடர் ஒருவரும் ராதே மா தன்னை துன்புறுத்தியதாக பொலிஸில் புகார் செய்துள்ளார். மதத்தின் பேரைச் சோல்லி ராதே மா மக்களை ஏமாற்றி வருவதாக போரிவலியைச் சேர்ந்த ஒரு ஆர்வலர் பொலிஸ் புகார் செய்துள்ளார்.
இதுதவிர அண்மையில் அவர் ஆபாச உடையோடு அட்டகாசமாக குத்தாட்டம் போட்ட காட்சியும் இணையத்தில் பரவியது.
இப்படி அடுக்கடுக்காக குவியும் குற்றச்சாட்டுகள் பொலிஸ் புகார்களால் தலைமறைவான ராதே மா சில தினங்களுக்கு முன் தன் மௌனத்தை கலைந்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஊடகவியலாளர் சந்திப்பிற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர் தனது ஆண், பெண் சீடர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார். பலர் ராதே மாவை கட்டிப்பிடித்தனர். சிலர் தங்கள் மடியில் தூக்கி வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தனர். ஊடகவியலாளர்கள் முன்பாகவே இத்தனையும் நடந்தன
இதன் பின் ஊடகங்கள் முன் கண்ணீரோடு காட்சியளித்த ராதே மா தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.
கடவுள் எனக்கு நீதி கிடைக்கச் செய்வார் என்ற ராதேமா பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். தனக்கும் குடும்பம், இரண்டு மகன்கள் இருப்பதாகவும், ஒரு மகன் ்இஷ்க் டாட் காம்ீ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பெண்ணொருவர் தனக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து குறிப்பிட்டவர் அந்தப் பெண் மிகவும் ஏழை என்றும் தனக்கு ஏராளமாக சோத்து இருப்பதாலேயே தன் மீது அவர் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மினி ஸ்கர்ட் தொடர்பில் ்நான் பக்தர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது அவர்கள் மாடர்ன் உடையை என்னிடம் அளித்து அதை அணியுமாறு கேட்டுக்கொண்டனர்.அதனால் அதை அணிந்தேன். நான் அணிந்த மாடர்ன் உடை ஒன்றும் ஆபாசமாக இல்லை. அதை அணிந்ததில் என்ன தவறு உள்ளது? சாதுக்களும், சாத்விகளும் (பெண் துறவிகள்) இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று உங்களுக்கு யார் சோன்னது? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
அதேநேரம் மனிதர்கள் பற்றி நான் புகார் கூறமாட்டேன். ஏனெனில் நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன். அவர் எனக்கு நியாயம் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல முடிவு எடுப்பதாக கடவுள் ஏற்கனவே என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்றும் யார் ஒருவர் இராவணன் போல் ஆணவமாக செயல்பட்டாலும் அவர்களாகவே அழிந்து போய்விடுவார்கள். உண்மையே வெல்லும். கடவுள் எப்போதும் உண்மையையே ஆதரிப்பார். உண்மை என்பது அழகு. யார் ஒருவர் சமுதாய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் அவரது வெற்றியை கடவுள் உறுதி செய்வார் என உறுதியுடன் இருக்கிறார் ராதேமா.
இதற்கிடையே எல்லாம் ஒரு செட்டப்புதான் என்ற செய்தியும் உலா வருகிறது. ராதே மாவே செட்டப் செய்து பல புகார்களை அவரே ஆள் வைத்துக் கிளப்பி வருவதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது. தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ராதே மாவே இப்படி செட்டப் புகார்களை கிளப்பியுள்ளார் என்ற செய்தியும் அவ்வப்போது காத்திவாக்கில் பரவிவருகிறது.
ஆனால் பல ஆண் சாமியார்கள் செய்யும் அராஜக அட்டகாசத்தைப் பார்க்கும்போது இவர் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் பெண் ஆச்சே... சமுதாயம் அபத்தமாகத்தான் சொல்லும் என்கின்றனர் ஒருசில ஆசாமிகளால் நொந்துபோனவர்கள்.
No comments:
Post a Comment