பஸ்களில் பெண்களுக்கு தனியான இருக்கை அவசியமா?
பெண்கள் என்ன சொல்கிறார்கள்
பஸ்களில் பெண்களுக்கு தனியான ஆசனங்களை ஒதுக்க வேண்டும் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிடம் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி ஸல்மா ஹம்சா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்திருந்து பஸ்ஸில் பயணம் செய்யும் போது பெண்கள் பல அசௌகரியங்களை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பாலியல் சேஷ்டைகளுக்கும் ஆளாகிறார்கள். இதனைத் தடுக்கவும் பெண்கள் அச்சமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கும் இந்த நடைமுறை அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
சரி இது இவ்வாறு இருப்பினும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் அதை அனுபவிக்கப் போவது இந்த சமூகத்திலுள்ள எமது பெண்களே!
ஆக இந்த நடவடிக்கை நடைமுறைக்கு சாத்தியமா? இல்லையா? இதை எப்படி பார்க்கிறார்கள்? என்பதைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.
கார்த்திகா (பெண்ணிலைவாதி)
பெண் என்ற ரீதியில் இந்த செயற்பாடு நல்லதாகத் தோன்றினாலும் ஒரு பெண்ணிலைவாதியாகவும் பெண் செயற்பாட்டாளராகவும் இதை ஏற்கவில்லை என்கிறார் பெண்ணிலைவாதி காத்திகா.
இது ஒரு குறுகிய காலத்திற்கு கொடுக்கப்படும் சௌகரியமே தவிர தீர்வு கிடையாது. தூர நோக்கு சிந்தனையோட பார்க்கும் போது இப்படி ஒரு செயற்பாடு தேவையற்றது. உண்மையிலேயே ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்து செல்லும்போது பெண்களுக்குரிய பாதுகாப்பும் கௌரவமும் கொடுக்கப்பட வேண்டும். அப்படியொரு காலம் வரும் போதுதான் பெண்களுக்கு உண்மையான அங்கிகாரம் கிடைக்கும். இதற்கு முதலில் ஆணாதிக்க சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். ஆக பஸ்ஸில் பெண்களுக்கு தனியாக இருக்கைகளை ஒதுக்குவதை விட சிறு வயதிலிருந்து ஆண், பெண் இருபாலாருக்கும் பால்நிலை சமத்துவத்தை போதிக்க முன்வர வேண்டும். அவர்களின் சிந்தனை, நடத்தை, மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவே இன்றையத் தேவை.
ஜெயகுமாரி (சுயதொழில் முயற்சியாளர்)
என்னைப் பொறுத்தவரை இது சரியமான நடவடிக்கை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் பெண்களும் ஆண்களும் ஒரே இருக்கையில் இருந்து பயணிக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றது. இது வாய் வார்த்தையில் சொல்லவில்லை. அனுபவ ரீதியாகவே சொல்கிறேன். அண்மையில் யாழ்ப்பாணம் போகும் போது இப்படியொரு சம்பவம் எனக்கும் நடந்தது. பக்கத்தில் இருப்பவர் எப்படியானவர் என்பது நமக்கு தெரியாது. பஸ்ஸில் அவரை சோதித்து கொண்டிருக்க முடியாது. ஆக தனியாக ஆசனம் ஒதுக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக செயற்படுத்த வேண்டும்.
தர்மினி பத்மநாதன் (Theatre Journalist)
உண்மையில் போக்குவரத்து சேவையில் பெண்களுக்கான தனி இருக்கை தேவை என்பது என்னுடைய விருப்பமும் கூட. அதிலும் உள்ளூர் போக்குவரத்தை விட நெடுந்தூரப் பயணங்களைக் கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கை என்பது மிக மிக அவசியம்.
எமது நாட்டில், சமூகத்தில் பெண்களுக்கான முழுப் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை. பல பேருந்துகளில் கர்ப்பிணித் தாய்மாருக்கும், ஊனமுற்றவர்களுக்குமான இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் கூட இருக்கை தேவைப்படுபவர் தொங்கிக் கொண்டிருக்க சாதாரண மனிதர்கள் அந்த விசேட இருக்கைளில் கண்ணை மூடிக் கொண்டு பயணிக்கிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனியான இருக்கைகள் இன்றி கலந்து இருப்பதால் அதிகமான பெண்கள் வயது வித்தியாசமின்றி விரும்பியோ விரும்பாமலோ பல நெருக்கடிகளை மலிவாக சந்திக்க வேண்டியுள்ளது. பஸ் பயணங்களில் வித்தியாசமான தொடர்பாடல்கள், அநாகரீகமான சேட்டைகள், தொலைபேசி இலக்க பரிமாற்றங்கள் என சமூக பண்பாட்டு சீரழிவுக்கு வித்திடும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.
பெண்களுக்கு பஸ்ஸில் தனியான இருக்கை வேண்டுமென 2000 ஆம் ்உணர்வுக்கலசம்ீ என்ற எனது கவிதைத் தொகுப்பில் எழுதினேன். 2015 ஜனவரியில் வெளிவந்த ்விபசாரி 80 ரூபரீ சிறுகதைத் தொகுப்பில் ்முக்கோணத் தலைநகரங்கள்ீ என்ற கதை யுத்தத்திற்கு பின் தமிழ்ப் பெண்கள் போக்குவரத்துகளில் சந்திக்கும் நெருக்கடிகளைப் பற்றிய அனுபவப் பகிர்வாகவே இருக்கின்றது.
எனவே பெண்களுக்கான பயணசேவை பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் அமைய வேண்டும். அதற்கான சூழலை தனி போக்குவரத்து சேவை, தனி இருக்கைகள் மூலம் ஏற்படுத்த முடியும். அதைவிடுத்து பெண்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளலாமல் வெறுமனே பொது இருக்கையாக இருப்பது சிறப்தது என வறட்டு பெண்ணிய வீச்சுக்களை முன்வைப்பதில் அர்த்தமில்லை.
பவீனா (அரங்கவியலாளர்)
இது ஒரு நல்ல திட்டம். இதனால் பயணத்தின் போது பெண்கள் படும் அவஸ்தைகள் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் இப்படி தனி ஆசனங்களை ஒதுக்குவதனால் மட்டும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாமல் தடுத்துவிடலாம் என்று கனவு கண்டால் அது சாத்தியமற்றது என்றே கூறவேண்டும். தனி ஆசனம் என்றாலும் ஆணும், பெண்ணும் ஒரே பஸ்ஸில்தானே பயணிக்கப் போகிறார்கள். பெண்களை பாதுகாக்கிறோம் என்ற அடிப்படையில் ஆணிடத்திலிருந்து பெண்களை ஒதுக்கி வைத்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்றால் அது கேள்விக்குறியானது.
அதேநேரம் குழந்தையுடன் பஸ்ஸில் பயணிக்கும் ஒரு பெண் அல்லது கர்ப்பிணிப் பெண், முதியவர் இவர்களுக்கெல்லாம் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு பொருந்தாது. சிலர் அநாகரீகமாக நடக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?
No comments:
Post a Comment