அம்மா பக்தர்களின்
அலப்பறைகள்...
வரட்சி நாட்டையே ஆட்டிப்படைக்க பசி, பட்டினியால் பிழைக்க வழியின்றி ஆங்காங்கே மக்களும், கால்நடைகளும் இறந்து கிடக்க சிம்பாப்பே ஜனாதிபதியோ கடந்தவாரம் தனது 92 ஆவது பிறந்ததினத்தைகோலாகலமாக கொண்டாடி உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இவ்வாறிருக்க கடந்த 24ஆம் திகதி தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்தநாள் விழாவை அம்மா பக்கதர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்துவிட்டனர். இது அம்மா பக்தர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் பார்ப்பவர்கள் பக்தி முத்தி பைத்தியம் ஆகிவிட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ஒரு நாட்டின் தலைவன் அல்லது தலைவியின் பிறந்தநாளுக்காக வழிபாடு, அபிஷேகம், அன்னதானம், இரத்ததானம், இலவச பொருட்கள் வழங்கல், இலவச திருமணம் இது எல்லாமே இடம்பெறுவது சாதாரணம்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி எப்போதுமே அம்மா பக்தர்கள் இதற்கெல்லாம் ஒருபடி மேலே என நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். இம்முறை அம்மா பிறந்தநாளிலும் அதை நிரூபிக்க இவர்கள் கொடுத்த அலப்பறைக்கு அளவேயில்லை.
தொண்டர்கள் கையில் அம்மா
கேக் வெட்டிய கையோடு 1000 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்களில் கண்ணீர் கொட்டக் கொட்ட இம்மா... என்ற அலறலோடு அம்மாவின் உருவத்தை கைகளிலும் நெஞ்சிலும் பச்சையாகக் குத்திக் கொண்டனர். இந்த பச்சைகுத்தும் விழாவில் நீ நான் என போட்டா போட்டி போட்டு வலியையும் பொருட்படுத்தாமல் கைகளை நீட்டியது கண்கொள்ளா காட்சி. பச்சைக்குத்தும் பணிக்காக 40 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கப்பிரதட்சணம், தீச்சட்டி, பறவைக்காவடி
ஆலயங்களில் அபிஷேகம், அன்னதானம், இலவச திருமணம், சீர்வரிசை என பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்ட மகளிர் அணி ஏற்பாட்டில் 67 பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்ய, நாதஸ்வர இசைக்கச்சேரியுடன் 5000 பெண்களின் பால்குடம், முளைப்பாரி, யானை ஊர்வலம், தீச்சட்டி, மயிலாட்டம், மாடு ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என தமிழகமே களைகட்டியது.
'அம்மா சாக முடியாது' ஜலப்பிரதர்ஷனம் செய்த எம்.எல்.ஏ.
ஜெயலலிதா நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்று, அவரது தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் மதுரை எம்.எல்.ஏ. ஒருவர் இதையே சற்று வித்தியாசமாக செய்தார். கட்சி கொடியை வாயில் பிடித்துக் கொண்டு தண்ணீரில் 48 நிமிடங்கள் மிதந்தார். அம்மா எங்கும் நிறைந்துள்ளார். அவர் சாக முடியாது என்பதுதான் அவரது பிராத்தனை.
வெளியான படப்போஸ்டர்
இது போன்று படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 'இரட்டை இலை' ஆனால் படம் வெளியாகும் திகதிதான் குறிப்பிடப்படவில்லை.
''இம்மா பல்லாண்டு வாழ்க'' உடல் முழுதும் வர்ணம்
இதுவரை சுவர்களில் பார்த்த வர்ணங்களை அம்மா பிறந்தநாளில் ஒருவரின் உடல் முழுதும் காணமுடிந்தது. அம்மா நீண்டகாலம் வாழ
வேண்டுமென உடல் முழுதுவம் வர்ணக் கலவையாக காட்சியளித்தார்.
அம்மா பேஷன்
அம்மா பக்தைகள் முந்தானையில் ஜெயலலிதா படமும், அதன் கரையில் கட்சி கொடியின் நிறங்களும் நெய்யப்பட்ட சேலைகளை அணிந்து கட்சி தலைமையகத்தின் வீதிகளில் வலம் வந்தனர்.
பக்தி முத்திப்போச்சு
ஜெயலலிதா ஆகாயத்தில் பறந்தாலே தரையில் உருண்டு புரளும் பக்கதர்கள் அம்மா பிறந்தநாளில் ஆகாயத்திலேயே பறந்திருக்கிறார்கள். 35 பக்தர்கள்
வேல் ஆகாயத்தில் பறக்க 67 பேர் காவடி எடுத்தனர். 11 பேர் அந்தரத்தில் பறந்தபடி பறவை காவடி எடுத்தும் 3 பேர் மயில் காவடி எடுத்தும், 3 பேர் உடல் முழுதும் ஆயிரம் இடங்களில் வேல் குத்தி பக்தி, பரவசத்துடன் பங்கேற்றனர்.
எது எப்பயோ அம்மா பக்தர்களுக்கு இந்த வருடம் மற்றுமொரு சித்திரை திருவிழாதான்.
No comments:
Post a Comment