Wednesday, April 6, 2016

எங்களை மனிதர்களாக நடத்துங்கள்!

எங்களை மனிதர்களாக நடத்துங்கள்! 

நகர வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்களின் பரிதாபம்! 


இந்தியாவின் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் யரோ ஒரு பெண் போட்ட நாப்கினால், கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. விடயம் கேள்விப்பட்ட மேலதிகாரி இது யார் செய்த வேலை என  பெண்களை நிற்கவைத்து கேள்வி கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு பெண் பணியாளை வைத்து அங்கு வேலை செய்த பெண்கள் அத்தனை பேரையும் ஆடை அகற்றி மாதவிடாய் யாருக்கு வந்திருக்கிறது என சோதனை செய்தார்.

இந்த தகவல் வெளியே கசிந்த பின் கொதித்துப் போன சமூகம் அந்த நிறுவனத்திற்கெதிராக பெரும் போராட்டங்களை அண்மையில் நடத்தியது.
வேலையாட்களை கேவலமாக நடத்தும் இந்த நிலை எங்கோ எப்போதோ நடக்கிற சம்பவமாக மட்டும் நாம் கருத முடியாது. இதோ எங்கள் நகர்ப்புறங்களில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண்களின் பரிதாப நிலை இதுதான்.

கொழும்பு, மற்றும்  நகர்புறங்களில் வியாபித்திருக்கும் பல புடவை, நகை, புத்தகம், பென்சி கடைகள், கார்மன்ட், மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள், வீட்டு வேலை என்ற பெயரில் தன் குடும்பத்துக்காக அடிமைப்பட்டு, தன் ஆசா பாசங்களை துறந்து, உழைத்துத் தேய்கிற  இப் பெண்களில் அநேகமானோர் வெறும் இயந்திரங்களாத்தான் நடத்தப்படுகிறார்கள்.

சாதாரணதரம், உயர்தரப் படிப்போடு நகர் நோக்கி ஓடிவரும் பெண்கள்  உழைப்பை கையில் எடுத்து தன் சக்தி இருக்கும் வரை உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தபின் தான் கடந்து வந்த பாதையை பின்நோக்கிப் பார்த்தால் அவர்கள் அடைந்தது ஒன்றுமே இல்லை. வாழ்க்கை வெள்ளைக் காகிதமாகிப் போகின்றது. வெறும் கஷ்டங்களும், காயங்களுமே மிஞ்சுகின்றன.

தொழிலுக்காக தரகர்களை நம்பி வரும் இப்பெண்கள் பெரும்பாலும் அடிமாட்டுக் கணக்காய் நடத்தும் முதலாளிகளிடம் சிக்கித் தவிக்கின்றனர். அது மட்டுமின்றி சில பிள்ளைகள் என்ன தொழிலுக்காக கொண்டு வரப்படுகிறோம் என்றுகூட தெரியாத நிலை காணப்படுகின்றது.

தொழில் ரீதியாக மட்டுமன்றி, உடல், உள ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இவர்களுக்கு உரிய தொழில் பாதுகாப்பு கிடையாது. நேரகாலமின்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொடர்ந்தும் 8மணி நேரம் 10 மணிநேரம் நின்று வேலை பார்க்கும் சூழ்நிலை. 8 மணி நேர வேலை என நிர்ணயிக்கப்பட்டாலும் இப் பெண்களுக்கு அது என்னவோ கனவுதான்.

இவ்வாறு தொழில் செய்யும் பெண்கள் தனக்கென ஒரு எதிர்காலத்தை கொண்டிருப்பதில்லை. செய்யும் தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது.  உதாரணத்திற்கு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் முழுமையாக ஒரு ஆடையை வெட்டித் தைக்கத் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

பல தொழில் தருநர்கள் இப் பெண்களை உணர்வுள்ள ஒரு ஜீவனாகக்கூட நினைப்பது இல்லை. ஒரு கட்டத்தில் சலித்துப்போய் அதிலிருந்து மீள நினைத்தாலும் அவர்களால் முடிவதில்லை. ஏற்கனவே கிடைக்கும் சம்பளம் வேறு தொழிலில் கிடைக்குமா என்ற சந்தேகமும், குடும்ப சுமையும் கண்முன் வந்து நிற்கின்றது. இந்தக் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழும் பெண்களே அதிகம்.

அவசரத்திற்கு பாத்ரூம் போவது என்றால் 7ஆம் மாடிக்கே செல்ல வேண்டும். 5ஆவது மாடி ஏறும் போதே மூச்சுத்திணறும். அவசரத்திற்கு பயன்படுத்தும் பாத்ரூமை ஏதோ தங்க குகைபோல் அவ்வளவு மேலே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். ஒரு முறை ஏறி இறங்குவதற்கே உயிர் போகிறது என்கின்றனர் புறக்கோட்டை பகுதி புடவைக் கடை ஒன்றில் வேலை செய்யும் பெண்கள்.

இதுபோன்று கடைகளில் வேலை செய்யும் பெண்களின் நிலையை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. சாப்பிடுவதற்கு கூட நேரமில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு இரு முறை பாத்ரூம் பக்கம் போனால் அதற்கும் அர்ச்சனை நடக்கும். இதற்கும் மேல் பல  கடைகளில் மலசலகூட வசதிகளே இல்லை. பொது மலசலகூடத்திற்கே செல்ல வேண்டும். அப்படி செல்வதானால் குறைந்தது அரை மணித்தியாலமாவது எடுக்கும். அப்படியே முதலாளியை சமாளித்து சென்றாலும் அங்கும் சில விஷமிகள் சேட்டைசெய்ய காத்திருக்கின்றன. இதற்கு பயந்து சில பெண்கள் தண்ணீர் குடிப்பதே இல்லையாம்.

பெண்கள் எல்லாத் துறைகளிலும் வியாபித்து விட்டார்கள், ஆண்களுக்கு நிகராக வாழ்கின்றார்கள், சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றாலும் மறைமுகமான சில அடக்கு முறைகளுக்கும் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறு பல கொடுமைகளை ஏற்றுக்கொண்டு எத்தனைக் காலம் ஒரு பெண்ணால் வாழ முடியும். உழைக்க முடியும் என்ற தெம்பு இருக்கும் வரை இவர்களால் தொழிலை முன்னெடுக்க முடியும். அதுவே திருமணம், குழந்தை என வந்து விட்டால், உழைக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தாலும் உடல் ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே.

நகர தொழில் துறையை சில பெண்கள் இன்று நரகமாகவே பார்க்கின்றனர். தொழிலுக்கான இயந்திரமாகவே இன்று பெண்கள் பாவிக்கப்படுகின்றனர். வெளியில் தெரிவது மட்டுமே பிரச்சினையாக இல்லை. வெளிச்சத்திற்கு வராத எத்தனையோ பிரச்சினைகளுக்கு இந்தப் பெண்கள் முகம் கொடுக்கின்றனர்.

குடும்பத்திற்காகவும், தொழிலுக்காகவும் சரிக்கு சமனான நேரத்தையும், உழைப்பையும் செலவிடும் இப் பெண்கள் தங்களுக்காக ஒரு நிமிடத்தை செலவிடுகிறார்களா? என்றால் அதற்கான பதில் கேள்விக்குறியே...!

No comments:

Post a Comment