மே 1: தொழிலாளர் தின நாடகத்திற்கு
தயாராகும் மலையக தொழிற்சங்கவாதிகள்!
அட்டகாசமான மேடை, ஆளுயர மாலை, பொன்னாடை, வாகனப் பேரணி என மலையகம் மேதினக் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மே 1ஆம் திகதியும் அனுஷ்டிக்கப்படும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்திற்குப் பின்னால் எத்தனையோ போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள், அர்ப்பணிப்புகள் இருந்தாலும் இன்றளவில் பெருந்
தோட்டத் தொழிலாளர்களுக்கு மேதினம் ஒரு நாள் விடுமுறை, தொழிற்சங்க கூட்டம், சோற்றுப்பார்சல், குடி, குத்தாட்டம் இவ்வளவோடு அன்றைய நாள் முடிந்துவிடும்.
பல தலைமுறைகளாக முதுகொடிய உழைத்து ஓடாய்த் தேய்ந்த தொழிலாளர்களை இப்படியொரு நிலைக்கு கொண்டுவந்து விட்டது யார்?
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆரம்பத்தில் மே தினம் ஒரு நோக்கத்தோடு கொண்டாடப்பட்டாலும் படிப்படியாக அது இல்லாதுபோய் அரசியல் கூட்டமாகவும், தொழிற்சங்கம் வளர்ப்புக்கான கொண்டாட்டமாகவும், மலையகத் தலைமைகள் ஒவ்வொரு வருடமும் சொன்னதையே அச்சுப் பிசகாமல் சொல்லி தமது புராணம் பாடும் நாளாகவும் மட்டுமே இருக்கின்றன.
இம்முறையும் இப்படியொரு மேதினத்தைக் காணவா மலையகம் தயாராகிறது? உண்மையிலேயே தொழிலாளர்களின் நலனுக்காக எதை செய்துவிட்டார்கள்? எதை வைத்து இந்த மேதினத்தை தலைமைகள் கொண்டாடப் போகின்றன? மேடைக்கு மேடை தொழிலாளர்களின் தோழன் நான் என்று அரிதாரம் பூசிக்கொள்ளும் எந்தத் தலைவனுக்குத்தான் இந்த தினத்தைக் கொண்டாட தகுதி இருக்கிறது?
அரியணையில் இருப்பவர்கள் கொஞ்சம் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள். இத்தனை கேள்விகளுக்கு மௌனம் மட்டுமே பதில்!
தொழிலாளர்களுக்கான சம்பளக் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முற்றாக ஒரு வருடத்தை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. 1000 ரூபா 770ஆக சுருங்கி விட்டது. இன்றுவரை தொழிலாளர்களுக்கு எந்தவொரு முடிவையும் பெற்றுக் கொடுக்கவில்லை. தொழிலாளர்களின் உரிமைகள் சலுகைகள் அத்தனையும் ஒப்பந்தப் பத்திரங்களோடு பைல்களுக்குள் தூங்குகின்றன. இந்த நிலையிலா மலையகத் தலைவர்களின் கழுத்துகள் மாலைகளை ஏற்கத் தயாராகின்றன?
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்றுமே தொழிற்சங்கத் தலைமைகள் ஆட்டிவைக்கும் கைப்பொம்மைகள். எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற ரீதியிலேயே காய்நகர்த்தப்படுகின்றது. ஒவ்வொருவரும் நீ நான் என போட்டிப் போட்டு தொழிலாளர்கள் முன் நல்லவனாக காட்டிக் கொள்ளவே முனைகின்றனர்.
அப்படிப் பார்த்தால் தென்னிந்திய சினிமா ஸ்டார்கள் மலையகத் தலைமைகளின் நடிப்பின் முன் தோற்றுப்போவார்கள். நடிகர்கள் தான் எத்தனை முகங்கள் இருந்தாலும் நல்லவன் என்ற முகத்தை மட்டுமே வெளிக்காட்டி மக்களை கவருகின்றனர். இந்த கலையையே எமது தலைமைகள் கையாண்டு அத்தனை குரூரத்தையும் நான் நல்லவன் என்ற ஒற்றை முகமூடியைக் கொண்டு மறைத்துவிட முனைகின்றனர்.
இத்தனை காலம் மாலை மரியாதையுடன் வாழ்ந்த அமைச்சர் திகாம்பரம் அண்மையில் பசறையில் இடம்பெற்ற நிகழ்வில் மாலை வேண்டாம் என மக்கள் மனதை வென்றார். இதுகூட ஒரு சினிமாத்தனம்தான். அவருக்கே தெரியும் தன் இத்தனை வருட அரசியலில் எத்தனை மேடைகளை, மேதினங்களை, நிகழ்வுகளை கண்டுள்ளார் என்பது. அப்போதெல்லாம் கழுத்து வலிக்க மாலை மரியாதைகளை ஏற்றுக்கொண்டவர் இப்போது மட்டும் வேண்டாமென்று புதிய அரசியல் பயணத்தை தொடர்கிறார் என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் தந்திரம் மக்களுக்கு புரியாது என்ற தைரியத்தைத் தவிர வேறு எதைச் சொல்வது?
இவ்வாறிருக்க, இம்முறை மே தினத்தை எழுச்சி தினமாகக் கொண்டாடப் போவதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், உழைப்புக்கு ஊதியம் இன்றி, நியாயமாக கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள், சலுகைகள், உரிமைகள் எல்லாவற்றையும் இழந்து, மாதம் தவறாமல் தொழிற்சங்கங்களுக்கு சந்தாவையும் செலுத்திவிட்டு ஒருவேளை உணவுக்கே போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு இவர்களின் எழுச்சி மேதினம் எந்தவகையில் கைகொடுக்கும்?
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தொழிலாளர்களுக்கும் தமக்கும் எந்தவொரு சம்பந்தம் இல்லை என்ற தோரணையிலேயே இ.தொ.கா. இருக்கின்றது. வாய்க்கு வாய்க்கு எங்களால்தான் தோட்டங்கள் உயிருடன் இருக்கின்றன என்பவர்கள் தொழிலாளர்களின் உயிரை மதிக்காமல் கொண்டாட்டத்திற்கு தயாராகுவதை என்னவென்று சொல்லுவது?
மே தினம் தொழிலாளர்களுக்காக அவர்களின் உரிமைகளை பேசும் தினமாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படியானால் இம்முறை மலையகத்தில் மேதினத்தைக் கொண்டாடும் தகுதி, தைரியம் யாருக்குதான் வாய்க்கும்...
No comments:
Post a Comment