முடியாது என்பதைத்தான் முதலில் செய்து காட்டுவேன்!
தன்னம்பிக்கையின் அடையாளம் வினோதினி!
உன்னால் முடியுமா? என்ற கேள்விக்குறிகளுக்கு எப்போதுமே முற்றுப்புள்ளி இடுகிறேன்.
குறைகளை வைத்த இறைவன்தான் திறமைகளையும் கொட்டிக் கொடுக்கின்றான். மனதில் நம்பிக்கை இருந்தால்மட்டும் போதும் எல்லா மைனஸ்களையும் பிளஸ்கள் ஆக்கலாம் என்பதற்கு உதாரணமாய் வாழ்கிறார் வினோதினி.
முள்ளிவளை இனிய வாழ்வு இல்லத்தில் இருக்கும் வினோதினி யுத்தத்தால் படிப்பை இழந்தாலும் தன் முயற்சியால் 25 வயதில் உயர்தரம் சித்திபெற்று பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கிறார்.
சங்கீத ஆசிரியையாக வரவேண்டும் என்பதுதான் இவரது இலட்சியம்.
''நண்பனே... நண்பனே... ஆருயிர் நண்பனே... சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு...'' பாடலோடு பேச ஆரம்பித்தார்.
நான்தான் மூத்த பிள்ளை. பிறவியிலேயே கண்பார்வை கிடையாது. கூடப்பிறந்தவங்க 7 பேர். .எல்லாரும் அம்மா-அப்பாவோட இருக்காங்க.
பிறவியிலேயே கண் பார்வையில்லை. அம்மாவால என்ன பராமரிக்கிறது கஷ்டம். 8 வயசில இங்க வந்தேன். லீவுக்கு மட்டும் வீட்டுக்கு போய் வருவன். இப்போதைக்கு இனியவாழ்வு இல்லம்தான் என்னுடைய வீடு. இங்க உள்ள எல்லோருமே ரொம்ப அன்பானவங்க. இவங்க கூட வாழ்றது பாக்கியமாதான் நினைக்கிறேன்.
கடைசி யுத்த காலத்திலஷெல் பட்டு நடக்க முடியாம போயிட்டுது. எங்களோட வந்தவங்க ஆறு பேர் இறந்திட்டாங்க. நானும் தங்கச்சியும் காயத்தோட தப்பினம். கண்பார்வையும் இல்ல, காலும் நடக்க முடியாது இதை உன்னால செய்ய முடியாது, அதை உன்னால செய்ய முடியாது என்று நிறைய இடங்களில ஒதுக்கினாங்க. டான்ஸ் ஆட முடியாதுன்னு சொன்னாங்க. ஆனா நான் ஆடிக்காட்டினேன்.
உன்னால் முடியுமா? என்ற கேள்விக்குறிகளுக்கு எப்போதுமே முற்றுப்புள்ளி இடுகிறேன். எதை செய்ய முடியாது என்கிறார்களோ அதையே முதலில் செய்து காட்டுவேன்.
சின்ன வயசிலிருந்து பாடுறதுனா ரொம்ப இஷ்டம். 8 வயசில சேர்ச் மேடைதான் எனது பாட்டுக்கான முதல் களம். முதல் மேடை நிறைய அவமானத்தை அனுபவமாக கொடுத்தது. என்னோட பாட வந்தவங்க இவ என்ன பாடுறதுனு ஏளனமா பேசினாங்க. அன்றைக்கு அவங்க பேசின பேச்சுதான் என்னை வெற்றிபெற வைச்சது. இன்றைக்கு எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு விருதையும் அவங்களுக்குதான் அர்ப்பணிக்கிறேன்.
சின்ன வயசில லோயரா வரவேண்டும் என்ற நினைப்பு இருந்தது. ஆனால் என்னுடைய ஆசிரியரோட விருப்பம் பாடனும்னு. ஸ்கூல்லயும் மியூசிக் பாடம் எடுத்தேன். வட மாகாண சங்கீத சபையில் மியூசிக் படிச்சேன். இதுவரைக்கும் இன்னிசை குயில் விருது, தேனிசை சிட்டு விருது, சிறந்த பாடகி போன்ற விருதுகள் கிடைச்சிருக்கு.
பல்கலைக்கழ அனுமதி கிடைக்கும் வரை இங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பிக்கிறன். என்னால இந்த உலகத்தை பார்க்க முடியாட்டியும் மற்றவங்க மூலமா இந்த உலகத்தை பார்க்கிறன். எதுவும் முடியாது என்று இருந்ததில்லை.
வீட்டு சூழலை விட இந்த சூழல் சௌகரியமா இருக்கு. நிறைய விசயங்கள் படிக்கலாம். நிறைய தேடலாம். இதெல்லாம் வீட்டில இருந்தால் கிடைக்காது. அல்லது எனது குறையை நினைத்து முடங்கிப்போனால் நடக்காது.
என்னுடைய எல்லா வேலைகளையும் நானே செய்துகொள்வேன். பாடுறது தவிர, கீபோர்ட், ஆர்மோனியம் வாசிப்பேன். எல்லாமே கேள்வி ஞானம்தான். யாரோ கத்துக்கொடுக்கிறதைவிட நானே தேடிப்படிக்கிறதுலதான் ஆர்வம் அதிகம்.
மனதில் உறுதி உண்டு. இந்த உறுதியில் காலுக்கும் கண்ணுக்கும் இடமில்லை. காலில் இல்லை வேகம். செயல்களிலேயே உண்டு என்று உறுதியாகச் சொல்கிறார் வினோதினி.
வினோதினியின் மன உறுதி துவண்டு போவோருக்கு உற்சாக பானம்!
No comments:
Post a Comment