Thursday, May 12, 2016

இந்திய சாமியார்களின் கைவரிசை!

இந்திய சாமியார்களின் கைவரிசை!

ஆயிரக்கணக்கில் பணத்தை பறிகொடுத்து
ஏமாற்றம்!


இந்தியாவைப் பொறுத்தவரை பல சாமியார்களினதும், சாமியாரினிகளினதும் பெயர்கள் அடிக்கடி சர்ச்சையில் அடிபடுகின்றன. இவர்களைச் சுற்றி மோசடி, பாலியல், கொலை, கொள்ளை, ஆபாசம் இப்படி ஏதோவொன்று வலம்வந்தபடியே இருந்தாலும் எத்தனை முறை ஏமாந்தாலும் மக்களுக்கு அவர்கள் மீதான பக்தி, நம்பிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.

இப்படியிருக்க கடந்த சில மாதங்களாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய சாமியார்களும், சாஸ்திரக்காரர்களும் பரிகாரம், பூஜை, புனஸ்காரம் என முகாமிட்டு பெரும்   மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என விவகாரம்               வெளியாகியிருக்கிறது.

அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, டயகம, பொகவந்தலாவை, நுவரெலியா, நானுஓயா, நாவலப்பிட்டி இப்படி பெருந்
தோட்டப்பகுதிகளில் பெருவாரியாக முகாமிட்டவர்களின் வார்த்தை ஜாலத்தால் பூரித்துப்போன  தோட்டத் தொழிலாளர்கள் பெரும் தொகை பணத்தை பறிகொடுத்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சாமியிலும் புதிய சாமியை நம்பும் பழக்கம்தான் நமக்கு நிறையவே இருக்கிறதே.  சரி இவர்தான் நம் குறையை தீர்த்து வைத்து விடமாட்டாரா என இந்தச் சாமிகளையும் ஜோதிடர்களையும் மக்கள் நம்பி  நாடியிருக்கிறார்கள்.
தம்மிடம் வருபவர்களிடம் இவர்கள் குறைந்தபட்ச அதாவது 200-  500 ரூபாவே கேட்கின்றனர். இதுதான் இவர்களின் அடிப்படைத் தந்திரம்.  ஆரம்பத் தொகை இவ்வளவுதான் ஆனால், அதன் பிறகுதான்  அவர்களின் வசூலிப்பு ஆரம்பமாகியிருக்கிறது.

தம்மை நாடிவருபவர்களிடம்  உங்களுக்கு கண்டம் உண்டு, தோஷம் உண்டு, உயிராபத்து உண்டு, உங்களின் மனைவி இறக்கப் போகிறார், உங்களின் பிள்ளைகளுக்கு உயிராபத்து உண்டு இப்படி அதிர்ச்சியான வார்த்தைகளைச் சொல்கிறார்கள்.

யாருக்குத் தான் பயம் வராது? எப்படியாவது இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்ற அவாவில் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்யத் தயாராகி விடுகிறார்கள்.

பின் என்ன யந்திரம் போட 10 ஆயிரம், தோஷம் கழிப்பதற்கு 7500 என அவர்கள் வசதிக்கேற்ப பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் இந்த ஜோதிடர்கள். இவர்களில் பலருக்கு எந்த பூஜையும் பரிகாரமும் செய்யாமலேயே வந்தவர்கள் கம்பி நீட்டியிருக்கிறார்கள், காரியம் கைகூடும் என்று பணத்தை கொடுத்தவர்கள் தாம் ஏமாற்றப்பட்டது தெரிந்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடுகளுக்குப் பின்னே பாதிக்கப்பட்டவர்கள் வாய் திறக்க உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஓரிரு வாரங்களுக்கு முன் நாவலப்பிட்டி டெஸ்போர்ட் பகுதியில் இந்திய சாஸ்திரக்காரர்களால் கிட்டத்தட்ட 10-15 குடும்பங்கள்
இவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்துள்ளன.

மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் சிவப்புப் பொட்டு, கழுத்தில் உருத்திராட்சை மாலை, தோளில் ஒரு ருக்குப் பை என  எளிமையே கோலமாகக் கொண்ட இருவர் இந்திய சாஸ்திரம் பார்ப்பதாகக் கூறிக்கொண்டு அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

வீடு வீடாகச் சென்றவர்கள் குடும்பங்களில் நிகழும் பிரச்சினைகளை கூடவே இருந்து பார்த்தவர்கள் போல புட்டுப் புட்டு வைக்க சம்பந்தப்பட்டவர்களும் அவர்களது மகுடிக்கு மயங்கிப் போனார்கள்.

பிரச்சினைகளிலிருந்து விடுபட தாயத்து, கிரகம் கழித்தல், நூல் போடுதல் இப்படி ஏகப்பட்ட வித்தைகளை கையில் வைத்திருந்தவர்கள் இன்ஸ்டன் வைத்தியம் பார்த்துவிட்டு 5 ஆயிரம் 10 ஆயிரம் என வசூல் செய்துவிட்டனர்.
சம்பந்தப்பட்டவர்களும் அத்தோடு தம் பிரச்சினையெல்லாம் ஒழிந்தது என்ற நம்பிக்கையில் கடன் பட்டாவது தட்சணையை செலுத்தியிருக்கின்றனர். ஆனால் அதற்குப் பின்னும் தம் பிரச்சினை தீர்ந்ததாக இல்லை. அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புலம்பத் தொடங்கினர்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு போனவர்கள் திரும்பி வரும் சரித்திரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அதை மறந்து வழமைக்குத் திரும்ப ஓரிரு வாரங்களில் இன்னுமொரு குழு வருகிறது. முதல் ஏமாந்தவர்கள் கொஞ்சம் உசாரானாலும் சாஸ்திரக்காரர்கள், சாமியார்களின் பேச்சு மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தை நோக்கியே இழுக்கிறது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இதில் இன்னும் சுவாரஷ்யம் என்னவெனில் பெருந்தோட்டப் பகுதிகளில் சம்பளம் அல்லது அட்வான்ஸ் கொடுக்கும் சமயம் பார்த்து இவர்களின் தரிசனம் கிடைப்பதுதான்.

அந்தக் காலகட்டத்தை குறிவைத்தே குறித்த இந்திய சாஸ்திரம் மற்றும் சாமியார் கும்பல் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வந்துபோகின்றது.
பெங்களூரிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்த 50 இற்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு பெருந்தோட்ட நகர்ப்புறங்களில் வீடுகளையும், கடைகளையும் வாடகைக்கு எடுத்து சாஸ்திரம் பார்ப்பது, கிரகங்கள், தோஷங்கள் கழிப்பது என்பவற்றை செய்து வந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் பரவலாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன் பசறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இந்திய ஜாதகம் பார்ப்பதாகக் கூறி கடைகளை வாடகைக்கு எடுத்து சிலர் இருந்துள்ளனர்.

அவர்களும் இவ்வாறே மை பார்ப்பது, தாயத்து, தகடு கொடுப்பது என பல வித்தைகளில் ஈடுபட்டு பணம் பார்த்துள்ளனர். ஒவ்வொரு பிரச்சினைக்               கேற்ப தாயத்துக்கு ஏற்ற விலை என்ற அடிப்படையில்தான் அவர்களது வியாபாரம் தொடர்ந்துள்ளது.

இது இப்படியே இருக்கட்டும், நாள் முழுவதும் கடவுளிடம் மண்டியிட்டு கஷ்டங்களைக் கொட்டித் தீர்ப்பவர்களின் பிரச்சினைகளை எங்கிருந்தோ வந்த ஒருவரால் ஒரு நொடியில் எப்படி தீர்த்து வைக்க முடிகிறது?
இதேநிலைதான் சாமியார்கள் விஷயத்திலும் தொடர்கிறது. சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட சாமியார் வீட்டு வாசலில் நிற்பவர்கள், தடுக்கி விழுந்தாலும் சாமியார் காலில் விழவேண்டும் என்பவர்கள் அதிகம்.

ஒவ்வொருவரின் சொந்ந புத்தியும் சொல்லாத ஒன்றை சாமியார் சொல்லிவிடப் போவதில்லை. சாதாரண வீட்டுத் தரகரையே நம்ப மறுக்கும் மனம் கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவில் இடைத்தரகர் வேலை பார்க்கும் சாமியாரை, சாஸ்திரக்காரர்களை மட்டும் எப்படி நம்புகிறது?

உண்மையிலேயே சாமியாரின் தோற்றம் தருகின்ற ஒருவித மாயைதான் மனிதனை மதிமயங்க வைத்துவிடுகிறது. இந்த மயக்கத்தில் கடவுளின் தூதனாக இந்த ஆசாமிகளை பாவிப்பதுவே எமக்குள்ளான மூட நம்பிக்கையின் உச்சம்.

No comments:

Post a Comment