Thursday, May 26, 2016

மாறிவிட்டாரா ஜெயலலிதா?

அம்மாவின் ஆரம்பமே அதிரடி!

மாறிவிட்டாரா ஜெயலலிதா?




தமிழக முதல்வர் பொறுப்பை மிகுந்த பிரயத்தனத்துக்கு மத்தியில் ஏற்ற ஜெயலலிதா ஆட்சியில் இருந்த அ.தி.மு.கவை மீண்டும் வெற்றிபெறச் செய்து 30 வருடங்கள் முறியடிக்கப்படாத எம்.ஜி.ஆர். இன் சாதனையை சமன் செய்துள்ளார்.

இது இவருக்கு 6ஆவது பதவியேற்பு. கடந்த 23ஆம் திகதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது. இவரோடு 28 அமைச்சர்களும் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர்.
கடந்த முறை பதவியேற்ற அதே நாளில் இம்முறை பதவியேற்றவர், இதுவரை இடம்பெற்ற பதவியேற்புகளுக்கு நேர்மாறாக நடத்தி தமிழக மக்களை மெய்சிலிர்க்க செய்துவிட்டார்.


  • தொகுதிக்கு ஒருவர் என 
  • 134 பேர் திருப்பதிக்கு மொட்டை!
  • ஒரு நாள் முழுதும் ஒரு 
  • ரூபா சவாரி!
  • சுண்டுவிரல் காணிக்கை!


சாதாரணமாக அம்மா பிறந்த நாள் என்றாலே அன்னதானம், பாலாபிஷேகம், குத்தாட்டம், வாணவேடிக்கை, காது கிழியும் பட்டாசு சத்தம், வானுயர் கட்டவுட்டுகள், பேனர்கள் என களைகட்டும் தமிழகமும் அம்மா பக்தர்களின் அலப்பறைகளும்தான் கண்முன் வரும்.

ஆனால், இம்முறை பதவியேற்பில் இவை அனைத்துக்கும் முழுக்குப் போட்டார் அம்மா. அம்மாவின் கட்டாய கண்டிஷனால் கட்டவுட்டுகள், அட்டாங்க நமஸ்காரம், காலில் விழுதல் அனைத்தும் அன்றைய தினம் தொலைபோனது.

கடந்த காலங்களில் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வரும்போதல்லாம் அவரை வரவேற்று சாலைகளின் இருபுறங்களிலும் பேனர்கள் வைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுதான் வரலாறு. இம்முறை அ.தி.மு.க. ஆட்சியை பிடித்ததும் மீண்டும் பேனர் கலாசாரம் ஆரம்பித்துவிடுமோ என பயந்த மக்களுக்கு பேனர் இல்லை என்ற செய்தி பெரும் மகிழ்ச்சி.
பதவியேற்பு விழா மக்களுக்காக நேரடி ஒலிபரப்ப செய்யப்பட்ட
தோடு, காது கிழியும் பட்டாசுகளுக்கு கட்டாயத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆரம்பமே அதிரடியாக பதவியேற்ற ஜெயலலிதா அரியணையில் அமர்ந்த கையோடு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறை
வேற்றும் பணியை ஆரம்பித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, மதுக்கடை நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், 100 யூனிட் இலவச மின் கட்டணம், மீனவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் முதல் கையெழுத்தை பதிவுசெய்தார். எதிர்பார்க்காத இந்த முடிவை வரவேற்று நேரடியாகவும், அறிக்கைகள், சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அம்மா ஆதரவாளர்கள் தவிர்த்து சாதாரண பொது மக்கள் இந்த ஆட்சி மீதும் ஆட்சியாளர்கள் மீதும் கொண்ட அதிருப்தியின் பிரதிபலிப்பே இந்த திடீர் திருப்பத்திற்கு வித்து.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூட அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையவில்லை. அதேநேரம் அ.தி.மு.கவுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3,946,549 வாக்குகள்தான். ஆக இது ஒன்றும் அ.தி.மு.க.வுக்கு அபார வெற்றி அல்ல. தேர்தல் முடிவுகளில் இரு அணியுமே சம அளவிலேயே காணப்பட்டன. இறுதித் தருவாயிலேயே அ.தி.மு.க. முன்னிலை வகித்தது. இதைத்தவிர  561,244 நோட்டா வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இம்முறை அ.தி.மு.க.வின் 28 அமைச்சர்களில் 14 புதுமுகங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மக்களின் மனங்களை வெல்லும் திட்டமாகவே அம்மாவின் அதிரடி முடிவுகளை பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்து வரும் 5 வருட ஆட்சியை கொண்டு நடத்த மக்கள் சக்தி அ.தி.மு.க.வுக்கு அவசியம் என்பதை இப்போதுதான் உணர்ந்துகொண்டிருக்கிறது அம்மா அணி.

இது ஒருபுறமிருக்க அம்மாவே அடக்கம் காத்தாலும் அல்லக்கைகள் சும்மா இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதால் அ.தி.மு.க. தொண்டர்கள் தொகுதிக்கு ஒருவர் என 134 பேர் திருப்பதிக்கு மொட்டைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியதோடு, ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். அம்மாவுக்காக ஒருநாள் முழுதும் ஒரு ரூபாவுக்கு ஆட்டோ ஓட்டியிருக்கிறார் ஒருவர். இதையெல்லாம் மிஞ்சிப் போன அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தன் சுண்டு விரலை வெட்டி முனியப்பர்  கோயிலுக்கு காணிக்கையாகவே செலுத்தி அதகளப்படுத்தியிருக்கிறார்.

இப்படி அம்மா ஆதரவாளர்கள் இன்னும் அடங்கியதாகத் தெரியவில்லை. அம்மாவின் வாக்கு ஆண்டவன் வாக்கு எனும் தொண்டர்கள் அம்மாவின் இவ்வழியை தொடர்ந்து கடைப்பிடிப்பார்களாயின் அ.தி.மு.க. மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மாற்றம்... மாற்றம்... என மாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்த மக்களுக்கு முதல் சமிக்ஞைதான்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு. மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது அம்மாவின் இந்த அதிரடி மாற்றம்.
மக்களால் நாம் மக்களுக்காகவே நாம் எனும் (அம்மா) அ.தி.மு.க. தாரகமந்திரம் மெய்ப்படவேண்டும். அதைவிடுத்து  வெறும் ஒருநாள்    சினிமா பாணி பதவியேற்பு அரிதாரம் ஆகாமல் இருந்தால் சரி...!

No comments:

Post a Comment