வதைபடுத்தும் பகிடி தேவையாதானா?
ரேகிங்...! கல்லூரிகள் சம்பந்தப்பட்ட தமிழ் சினிமாக்களின் ஓபனிங் காட்சியே இதுதான்.
சீனியர் - ஜுனியர் பாகுபாட்டை இல்லாதொழித்து நட்பு பாராட்டுவதாகவே ஆரம்பத்தில் இந்த பகிடிவதை பார்க்கப்பட்டாலும் காலப்போக்கில் வன்முறை, குற்றங்களுக்கு எண்ணெய் வளர்ப்பதாகவே பகிடிவதை பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டு பல உயிர்களுக்கு உலைவைத்திருக்கின்றது.
இலங்கையின் வரப்பிரகாஷ், விதுரா, இந்தியாவின் நவரசு கொலை இவையெல்லாம் பகிடிவதையால் உச்சக்கட்ட கொடுமைகள். ஆனால், இதற்குப் பின்னர் இந்தியாவில் பகிடி வதை தடை செய்யப்பட்டது. இலங்கையில் பகிடி வதை தடைசெய்யப்பட்டிருந்தாலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகத்திலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறிருக்க கடந்த வியாழக்கிழமை பகிடிவதை குற்றச்சாட்டில் களனி பல்கலைக்கழக மாணவிகள் நால்வர் உட்பட ஐவர் கிரிபத்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸில் களனி பல்கலைக்கழக மாணவியொருவர் கொடுத்த முறைப்பாட்டின் பேரிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தற்போது களனி பல்கலைக்கழகத்திற்கான புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். இதில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவிகள் ஒரு வருடம் நிறைவடையும் வரை நீண்ட காற்சட்டை அணியக்கூடாது என்ற ஒரு சட்டம் சிரேஷ்ட மாணவிகளால் போடப்பட்டுள்ளது.
இச் சட்டத்தை மீறுவோர் அனைவர் மத்தியிலும் கடும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் கடுமையான உள பாதிப்புக்குள்ளான மாணவியே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு இதுவொன்றும் புதிதல்ல. வழிவழியாக இதுவே அங்கு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய மாணவர்கள் எதிர்நோக்கும் பகிடி வதையைக் கண்டிக்கும் வகையில் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விரிவுரைகளில் இருந்து விலகிக்கொண்டனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டாலும் சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போர்வையில் அவர்களைப் பகிடி வதைக்கு உட்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதை தடுக்க முடியாமல் இருப்பதாக விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருந்தனர். இருந்தாலும் இதற்கு அவர்களால் அத்தனை இலகுவில் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியவில்லை.
அதேபோல் கடந்த வருட இறுதியில் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட பகிடிவதையே இம்மாணவனின் மரணத்திற்கு காரணமென
பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.
ஒரு விஞ்ஞானியாகவோ, வைத்தியராகவோ வரவேண்டிய ஒரு மாணவன் வெறும் பகிடி வதையால் இந்த உலகிலிருந்து விடைபெற்றான்.
எத்தனை கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிகளின் வாசலில் கால்பதிக்கும் மாணவ, மாணவிகள் ரேகிங் என்ற வதையால் உடல், உள, பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்படுகின்றனர்.
அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக, வழிகாட்டியாக வாழ வேண்டிய
சிரேஷ்ட மாணவர்கள் தாங்கள் அனுபவித்த அந்தக் கொடுமைகளையே தனக்குப் பின்னால் வருபவர்களுக்குள் திணிக்கும் மனம் எங்கிருந்து வருகிறது? இது சமூகத்தின் எழுச்சிக்கு எத்தனை ஆரோக்கியமானது?
No comments:
Post a Comment