Thursday, May 26, 2016

போனுக்கு வேட்டு வைத்த வற் வரி

போட்ட காசுக்கு என்னாச்சி!


போனுக்கு வேட்டு வைத்த
வற் வரி!


இந்தமாத கைப்பேசிக் கட்டணங்களை பார்த்த பலர் நிச்சயம் அதிர்ந்து போயிருப்பீர்கள். போட்ட காசுக்கு என்ன ஆச்சி என மீள் நிரப்பும் வாடிக்கையாளர்கள் குழம்பிப் போயிருப்பீர்கள்.
காரணம் வற் வரி!

அரசாங்கத்தால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வற் வரியானது தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் உலகளவில் தொலைபேசி கட்டணம் குறைவாக அறவிடும் நாடு என்ற பெருமை பறிபோயிருக்கிறது.

தற்போது கையடக்க தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்கள் அழைப்புக் கட்டணங்களுக்கு அறவிடும் வரி 46 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்கள் மீதான வற் வரி அதிகரிப்பின் படி அழைப்புகளுக்கு நிமிடமொன்றுக்கு இதுவரை 25 வீதமாக இருந்த வரி 46 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரே வலையமைப்புகளுக்கிடையிலான அழைப்புக் கட்டணம் 1.46 ரூபாவாகவும், ஏனைய வலையமைப்புகளுக்கான கட்டணம் 2.92 ரூபாவாகவும் அறவிடப்படுவதோடு, பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சகல வலையமைப்புகளுக்குமான அழைப்புக் கட்டணம் 2.19 ரூபாக அறிவிடப்படுகின்றது.

அத்தோடு, செக்கன் அடிப்படையிலான ஒரே வலையமைப்புகளுக்கு நிமிடமொன்றுக்கு 1.91 ரூபாவாக இருந்த கட்டணம் 2.25 ரூபாவாகவும் ஏனைய வலையமைப்புகளுக்கு 2.50 சதமாக இருந்த கட்டணம் 3.75 ரூபாவாகவும் அறவிடப்படுகிறது.

ஆனால், எந்தவொரு வலையமைப்பு நிறுவனமும் இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் தெளிவுபடுத்த முனையவில்லை. இதுகுறித்து அறிவிக்கவும் இல்லை. வழமையான பணிகள் தொடர்கின்றன.
சேவையை பெறும் சராசரி வாடிக்கையாளர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் மீள்நிரப்பிய பணம் எங்கே போகிறது என்ற கேள்விக்குப் பதில் இன்றி புலம்புகின்றனர்.

அப்படியானால் இந்த வற் வரி எப்படியானதொரு தாக்கத்தை விளைவிக்கிறது? அதை எப்படி மக்கள் சமாளிக்கப் போகின்றார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

சாதாரணமாக கடந்த மாதம் ஒருவர் 1000 ரூபா கட்டண தொகையை செலுத்துவாராயின் 750 ரூபா அழைப்புக்கான கட்டணமாகவும் 250 ரூபா வரியாகவும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைப்படி அதே 750ரூபா அழைப்புக் கட்டணத்திற்கு 460 ரூபா வற் வரியுடன் சேர்த்து 1210 ரூபா செலுத்த வேண்டும். 3000 ரூபா கட்டணம் செலுத்திய ஒருவர் இம்மாதம் 4380 ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

இனி வரும் ஒவ்வொரு மாதமும் இந்த நிலை தொடரும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ள பொது மக்களுக்கு இந்த வற் வரி சுமைக்கு மேல் சுமையை கொடுக்கும் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வழமையாக1000 ரூபா கட்டணம் செலுத்தும் ஒருவருக்கே 210 ரூபா மேலதிகமாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாயின் லட்சக்கணக்கில் கட்டணங்களை செலுத்தும் கம்பனிகள் இந்த வரி அதிகரிப்பால் எவ்வளவு நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்?

ஆக இந்த நட்டத்தை ஈடு செய்ய கம்பனிகள் உற்பத்திகள் மற்றும் ஊழியர்களின் தலையிலேயே கை வைக்கும். எப்படிப் பார்த்தாலும் சுற்றிச் சுற்றி ஏதோவொரு வகையில் இந்த வற் வரிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாவது பொது மக்களேயன்றி வேறுயாருமல்ல.

நிதி அமைச்சின் 15 வீத வற் வரி அதிகரிப்பு குறித்த பேச்சு ஏப்ரலில் எழ சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன். ஆக எக்காரணம் கொண்டும் வற் வரி அதிகரிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி சூளுரைத்தார்.

ஆனால், இவ்விடயத்தில் ஜனாதிபதியின் வாக்குறுதிகூட பொய்ப்பித்துப் போனது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வற் வரி அதிகரிக்கப்பட்டாலும் அது பாவனையாளர்களை பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றதோடு, வரிச்சுமையை சமாளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இதற்கமைய அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படுமானால் நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தொழில்நுட்பத்தைக் கரைத்துக் குடித்தவர்கள், அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அளவு பொருளாதார வலுவுள்ளவர்கள் என்ற ரீதியில் மாத்திரம் இப்படியொரு முடிவு எட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

அரசால் முன்மொழியப்படும்  எந்தவொரு திட்டமும் நாட்டின் கடைக்குடி மகன் வரை தாக்கம் செலுத்தும். ஆக அவர்களின் நலனை கருத்திற்கொண்டே ஒவ்வொரு திட்டமும் முன்மொழியப்பட வேண்டும். அப்படியாயின் ஹரினின் இத் திட்டம் எத்தனை வீதம் சாத்தியம்?

இப்படியிருக்க இந்த வற் வரி அதிகரிப்பினை எதிர்த்து நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க சில சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆக இன்றைய காலகட்டத்தில் தொலைபேசிகளின் பாவனை என்பது எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மருத்துவ முன்பதிவு முதற்கொண்டு சாதாரண முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்துவது வரை அனைத்தும் தொலைபேசி வலையமைப்புகளூடாகவே இடம்பெறுகின்றன. இப்படியிருக்கையில் வலையமைப்பு நிறுவனங்களுக்கான வரி அதிகரிப்பானது நிறுவனங்களுக்கு மாத்திரம்  அல்ல, ஒட்டுமொத்த  மக்களின் தலைக்கும் விதிக்கப்பட்டிருக்கும் பெரும் சுமை...!


No comments:

Post a Comment