Thursday, June 2, 2016

முகத்தில் கரிபூசிக் கொண்ட முற்போக்கு கூட்டணி!

முகத்தில் கரிபூசிக் கொண்ட
முற்போக்கு கூட்டணி!




மக்களுக்காக தலைமைகள் நடத்தும் உணர்வுபூர்வமான போராட்டம் என்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் உட்கார்ந்த த.மு.கூட்டணி தன் முகத்தில் தாமே கரிபூசிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விமர்சனங்கள், வியாக்கியானங்கள், வாய்ச்சவடால்கள், வலைத்தளங்களில் குடுமிபிடிச் சண்டைகள் எல்லாம் இவ்விடயத்தில் நடந்து முடிந்தாயிற்று.

முன்னணியின் கையாலாகாத தனம்! 

முதலில் தனியார் துறையினருக்கு அறிவிக்கப்பட்ட 2500 ஐ தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுப்போம் என்றார்கள். அது ஜனவரியில்... மார்ச்சில் கிடைக்கும் என்று இழுத்தடித்தார்கள். பின்னர் அதனை இடைக்கால கொடுப்பனவு என்றார்கள். அதுவும் சுருங்கி நிவாரணக் கொடுப்பனவாகவாக வந்து நிற்கிறது. அதற்காகவும் சந்தியில் வந்து போராடும் நிலைமை வேறு!
ஏதோ மக்கள் முன்னிலையில் வீராவேசமாக சொல்லி   விட்டோம். அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று வீதியில் குந்திவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
இந்தப் போராட்டம் எதற்காக? யாருக்கு எதிரானது? இதனால் சாதித்தது என்ன? முதலாளிமார் சம்மேளனத்திற்கு உறைத்ததா? அல்லது தொழிலாளர்களையாவது சென்றடைந்ததா? இப்படி ஏகப்பட்ட   கேள்விகள்.

சத்தியாக்கிரகத்தை  கொழும்பில்  நடத்தியது ஏன்? 

 போராட்டத்தின் பயன் என்ன எதைச் சாதித்தார்கள் என்பதற்கு தமிழ்முற்போக்கு கூட்டணியினரிடம் பதில் இல்லை. ஆரம்பத்தில் 2500 ரூபா பெறுவதற்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டம் என்றார்கள். போராட்டம் முடிந்தபின் இது வெறும் கவனயீர்ப்பு போராட்டம் என்கிறார்கள்.  தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி, பிரதமருக்கு தெரியப்படுத்தவும், இப்பிரச்சினையை  சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கும்,     சிங்கள ஊடகங்கள் மற்றும் சிங்கள மக்கள்    மத்தியிலும் இவ்விடயத்தை கொண்டு செல்லவும் தான்  இப்போராட்டம் என்கிறார்கள்.
எல்லாம் சரிதான். அவர்களின் நோக்கமும் சரிதான். ஆனால், அதுக்கு இப்படியொரு போராட்டம் தேவையா? அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து கொண்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தொழிலாளரின் சம்பள பிரச்சினை தெரியவில்லை அதை போராட்டத்தால் தெரியப்படுத்துகிறோம் என்பது எத்தனை சிறுபிள்ளைத்தனமானது. சம்பள விடயத்தில் விழிப்புணர்வு தேவை என்றால் அதற்கு உங்கள் அறிக்கைகள் போதும். இப்படி இத்தனை தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வீதியை மறித்து சத்தியாக்கிரகம் செய்ய அத்தனை பேரும் வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்லவே...

இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா?

இதே புகையிரத நிலையம் எத்தனையோ போராட்டங்களை கண்டிருக்கிறது அந்தப் போராட்டங்கள் மாதாமாதம் நடந்த வரலாறும் இருக்கிறது. ஒரே நாளில் அதுவும் 5மணி நேரத்தில் உங்கள் குரலுக்கு  சர்வதேசம் செவிசாய்க்கும் என்பது எத்தனை பெரிய நப்பாசை. நியாயமாக இப்போராட்டம் முதலாளிமார் சம்மேளனம் அல்லது ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகச் சரி நடத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த 5 மணிநேரம் வீதியை மறித்து அமர்ந்திருந்தாலாவது உங்கள் குரல் போய்ச் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கும். அதுவும் இல்லையென்றால் வழமையாக மண்ணெண்ணெய் கேனை கையிலெடுக்கும் வடிவேல் சுரேஷ் போராட்டத்தில் மற்றவர்களை கொளுத்துவேன் என   வீராவேசம் பேசுவதற்கு பதில் மண்ணெண்ணெய்   கேனுடனாவது வந்திருக்கலாம். (அப்படியும் கவனம் ஈர்த்திருக்கலாம்) இப்படி எதுவுமே இல்லாமல் நாங்களும் சத்தியாக்கிரகம் நடத்துகிறோம் என்று 14 நாள் காலக்கெடு கொடுப்பதற்கு ஒரு நாளை வீணடித்தது வருத்தம்தான்.

உணர்வு போராட்டம் செல்பி  போராட்டமானது எப்படி? 

எத்தனையோ மக்கள் போராட்டங்களை கண்ட கோட்டை புகையிரத நிலையம் இப்படியும் ஒரு போராட்டத்தை கண்டுவிட்டது. உணர்வுபூர்வ போராட்டம் கடைசியில் செல்பி போராட்டம் என பேர்வாங்கிக் கொண்டது. இதை த.மு.கூட்டணி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தலைகள் சும்மா இருந்தாலும் அவர்கள் வழிவந்த தொண்டர்கள் சும்மா இருக்கவில்லை. போராட்டம் தொடங்கியது முதல் நொடிக்கு நொடி படங்களை எடுத்து அப்லோட் செய்வதிலேயே குறியாக இருந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செல்பி போராட்டத்தை ஆரம்பித்து அடுத்தடுத்து  வட்ஸ் அப், வைபர், ஐ.எம்.ஓ. போராட்டம்    நடத்துவோம் என சப்பைக்கட்டு கட்டுவது விளங்குகிறது.  இதற்காக உங்கள் செல்பி போராட்டம் தவறு என்று சொல்லவில்லை. அதை எடுத்த இடம்தான் தவறு. இது மக்களின் வலியோடு வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வ போராட்டத்தில் இப்படி நடந்து கொண்டதுதான் தவறு. நாங்கள் செல்பி எடுக்கவில்லை எனும் தலைமைகள் உங்கள் சீடர்களைக் கொஞ்சம் அடக்கிவைத்திருந்தால் இன்று அடுத்தவர் வாய்க்கு அவலாகாமல் இருந்திருக்கலாம்.

போர்டுகளுக்காக காத்திருந்த போராட்டக்காரர்கள்
10 மணிக்கு சத்தியாக்கிரகம் என அறிவித்து 10.40 இற்கு வந்தவர்களின் கையில் அரை மணித்தியாலத்திற்குப் பின்னே கோரிக்கை அடங்கிய பதாகாகைகள் தலைவர்களின் கைகளுக்கு கிடைத்தன. அதுவும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மாத்திரமே. அதற்குப் பின் அந்தப் பதாகைகள் தொண்டர்களின் போட்டோ போஸ்களுக்கே பயன்பட்டன.

தொண்டமானை ஜோக்கராக்கிய த.மு.கூட்டணி
மதிய உணவைக்கூட மறந்து அமர்ந்திருந்த தலைமைகள் இ.தொ.கா.வை வசைபாட மறக்கவில்லை. நன்றியுரையில்கூட ஆறுமுகன் தொண்டமானே முன்னிலை வகித்தார். கூட்டு ஒப்பந்தத்தின் கதாநாயகன் (ஜோக்கர்) என்ற பட்டத்தை அவருக்கு சூடியது த.மு.கூட்டணி.

வந்தார் சென்றார் வாசுதேவ
தொழிற்சங்கங்கள் இணைந்த போராட்டம் என்பதால் இதில் ஐக்கிய லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் வாசுதேவ நாணயக்காரவும் தன் பங்கிற்கு ஆதரவு வழங்கினார். சரியாக மதியம் 1 மணிக்கு வந்து தலைமைகளுடன் உரையாடியவர் 1.30 இற்கு வந்தவழியே சென்றுவிட்டார்.

செத்த ஒப்பந்தத்திற்கு உயிர்கொடுத்த மனோ கணேசன்

ஒப்பந்தம் செத்துவிட்டது என்ற   மனோகணேசன்  இப்போராட்டத்தில்  மீண்டும் உயிர் கொடுத்தார். ஒப்பந்தமே வேண்டாம் என்ற தமிழ்முற்போக்கு கூட்டணி இப்போது ஒப்பந்தம் விரைவாக செய்து கொள்ளப்பட வேண்டும். அதுவரை நிவாரணக் கொடுப்பனவு வேண்டும் என்கிறது.
தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் வெறும் சம்பள பிரச்சினை சார்ந்தது மட்டுமல்ல. உரிமை, சலுகை, வரப்பிரசாதங்கள் என தொழிலாளியின் வாழ்வை நிர்ணயிப்பது. அத்தனை இலகுவில் வெறும் வார்த்தையால் அதற்கு சாவுமணியடிக்க  முனைவார்களாயின் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த இருப்பையும் குழிதோண்டி புதைப்பதாகும்.

தோட்டங்களை அரசிடம்  ஒப்படைக்கச் சொன்ன தலைமைகள்

சம்பளத்தை வழங்க முடியாதவர்கள்  தோட்டங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் போங்கள் என வீராவேசம் பேசியவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் போல. மறந்திருப்பின் இதற்கு முன் அரசு பொறுப்பேற்ற தோட்டங்கள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தேடிப்பார்த்தால் நல்லது.

முதலாளிமார் சம்ளேனத்திடம் தோற்றுப் போனதா த.மு.கூட்டணி?

முதலாளிமார் சம்மேளனத்தைப் பொறுத்தவரை இப்போராட்டம் பத்தோடு பதினொன்று. இந்த 14 நாள் காலக்கெடுவில் இன்னும் இருப்பது ஏழு நாட்கள். கழிந்துபோன ஏழு நாட்களில் இப்போராட்டம் எதையும் செய்துவிடவில்லை. இனியும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதிலும் பிரயோசனம் இல்லை.

எது எப்படியோ எதிர்வரும் 10ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு த.மு.கூட்டணி தயாராக வேண்டியுள்ளது. தொழிலாளர்களை வீதிக்கு இறக்க தயாராவார்கள். மீண்டும் ஒரு போராட்ட நாடகம் அரங்கேறலாம்.
பாவம் மக்கள், புதிய மொந்தையிலும் பழைய கள்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment