Thursday, July 14, 2016

சுவாதி

சுவாதி!
மரணத்திற்கு யார் காரணம்?


சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை. இது நடந்து ஒரு வாரம் முற்றாக முடிந்து போனாலும் இந்த சம்பவம் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தக் கூடியவர்கள் பெண் பிள்ளைகளைப் பெற்றவர் என எல்லோரது மனதிலும் மிகப்பெரிய காயத்தையும் வேதனையையும்  ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல சராசரி பெண்ணுக்குரிய கனவுகளோடு காலையில் வேலைக்கு தன் தந்தையுடன் பைக்கில் புறப்பட்டுச் சென்று ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு மர்ம நபரால் கொல்லப்படுவோம், தன்னுடைய கனவுகள் எல்லாம் அந்த இடத்திலேயே கலைந்துபோகும் என சுவாதி கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை.

ரயில் நிலையத்திற்கு வந்த மர்ம நபர் கிட்டத்தட்ட 4-5 நிமிடங்கள் வாக்குவாதத்துக்குப் பின் தான் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவ்விடத்தை விட்டு வேகமாக மறைந்து போயிருக்கிறான்.

இச்சம்பவத்தின்பின் பத்து பொலிஸ் தனிப்படை அமைத்து குற்றவாளியையும் கைது செய்திருக்கிறது. தீவிர விசாரணை, கொலைக்கான பின்னணி,  சாட்சிகளின் வாக்குமூலம், சுவாதி சம்பந்தப்பட்டவர்களின் கதறல் எல்லாம் ஒருபுறம் இருக்க ஆளுக்காள் பல்வேறு வியூகங்கள் அடிப்படையில் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக எல்லோரையும் கதிகலங்கவைத்த இச்சம்பவத்தின் குற்றவாளியின் வாக்குமூலம் இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முழுமையாக முடிக்காத குறித்த இளைஞன் புடவைக் கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்துள்ளது. சுவாதியிடம் பொறியியல் பட்டதாரி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞன் நாளடைவில் சுவாதியை ஒருதலைபட்சமாக காதலிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் தொடர்பில் உண்மைகள் சுவாதிக்கு தெரியவர குறித்த இளைஞனுடன் பேசுவதை தவிர்த்ததோடு, காதலையும் நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் சுவாதியை பலிவாங்க நினைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.  திட்டமிட்டபடி சுவாதியை தீர்த்துக் கட்டியுள்ளான்.
இதுதான் கொலையாளியின் வாக்குமூலம்!

இவ்வாறிருக்க இவையெல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு சுவாதியின் உயிர் பறிபோவதற்கு அவ்விடத்தில் இருந்தவர்களின் அசமந்தமே காரணம் என வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர் பலர்.
சுவாதியின் விஷயத்தில் மட்டுமல்ல நமக்கு நடக்கும் வரை எந்தவொரு இடத்திலுமே நாம் வெறும் பார்வையாளர்கள்தான். செயற்பாட்டாளராகும் துணிவு அத்தனை சீக்கிரத்தில் யாருக்கும் வருவதில்லை.
உண்மையிலேயே நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?

அவன் வெட்டும்போது இடைமறித்து காப்பாத்தியிருப்போம். அவன் கையிலிருந்த கத்தியை வாங்கி அவனையே வெட்டியிருப்போம் இப்படியெல்லாம் ஹீரோயிசம் பேசுபவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இருந்திருந்தால் தடுத்திருப்போமா?

நிச்சயமா இல்லை. ஏனென்றால் நாமும் சாதாரண மனிதர்கள். சராசரி வாழ்க்கை வாழ்பவர்கள். அந்த இடத்திலிருந்த அனைவருமே பயந்தது குறித்த மர்ம நபரைப் பார்த்து அல்ல. அவன் கையிலிருந்த கத்தியைப் பார்த்துதான்.
காலங்காலமாக ஆயுதங்களுக்கு பயந்து அஞ்சி நடுங்கும் நாம் நூறு பேர் ஒன்று சேர்ந்தால் அந்த ஆயுதத்தைவிட பல மடங்கு பலம் பெறுவோம் என்பதை மறந்து விடுகிறோம். அடிமைத்தனம் மேலோங்கி அடிப்படை மனிதநேயத்தையே குழிதோன்றி புதைத்துவிடுகிறது.

உங்கள் அக்கா, தங்கைக்கு இப்படி நடந்தால் சும்மா இருப்பீர்களா? என்ற கேள்வி நியாயமானது. ஒவ்வொரு முறையும் ஒரு செய்தி நம்மை வந்தடையும் போது அந்த நொடி கொந்தளிப்போம், இரத்தம் கொதிக்கும், ஆவேசமாக பேசுவோம். ஊடகங்களில் முதலிடம், மேடைப்பேச்சுகளின் கருப்பொருள் எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒரு வாரம்... ஒரு மாதம்...  அதற்குப் பின் இதேபோல் இன்னுமொரு சம்பவம் நடக்கும் அதற்கும் இதே புலம்பல். அதற்குப் பின்... எல்லாமே வழமைக்கு திரும்பிவிடும். இதுதான் இயல்பு.

இந்த இயல்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த வழியாக சுவாதியின் உடலைக் கடந்துபோன ஒவ்வொரு கால்களும் இறுக்கத்தை கடைபிடித்திருக்கிறது. கொலை செய்ய வந்தவனை தடுக்காவிட்டாலும் இரண்டு மணி உயிர் போராட்டத்தை தடுத்திருக்கலாம். வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால் அனாவசியமாக ஒரு உயிர் போகாமல் தடுத்திருக்கலாம். இதை யார் செய்தது? அத்தனை கணப்பொழுதும் வெறும் வேடிக்கை பார்வைகளால் கடந்திருக்கிறது.

இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் போதுதான் சட்டம் சரியில்லை, தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை, ஊழல் நடக்கிறது, பணப்பலம், ஆள் பலம் பாதுகாக்கிறது என யாரோ ஒரு மூன்றராவது மனிதனை கை காட்டும் நாம் என்ன செய்திருக்கிறோம். அடிப்பட்டு வீதியில் கிடக்கும் ஒருவரின் தாகத்தையாவது போக்கியிருக்கிறோமா? அல்லது வீதிகளில் சக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்டிருக்கி
றோமா? நமக்கெதுக்கடா வம்பு என்று மௌனித்துப் போகும் போக்குதான் குற்றவாளிகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறது.

பெண்கள் வாழும் பூமி ஒன்றும் புத்தனும் இயேசுவும் காந்தியும் வாழக்கூடிய புண்ணிய பூமியல்ல. காட்டான்களும், காமுகர்களும், வக்கிரம் பிடித்த மிருகங்களும், கயவர்களும் நிறைந்த இடம்.

ஆக, இது போன்ற பாரதூரமான சம்பவங்களின் போது மட்டுமல்ல பெண்கள் எப்போதெல்லாம் தனக்கு பாதுகாப்பில்லை என்று உணருகிறார்களோ அல்லது பிரச்சினைக்குள் சிக்குகிறார்களோ அப்போதெல்லாம் சக மனிதன் என்ற ரீதியில் யாரேனும் என்ன நடந்தது என்ற
கேள்வியையாவது கேட்க முனையுங்கள்.


No comments:

Post a Comment