Monday, August 22, 2016

பழிவாங்கப்படுகிறார்களா புறக்கோட்டை வர்த்தகர்கள்?


பழிவாங்கப்படுகிறார்களா
புறக்கோட்டை வர்த்தகர்கள்?


கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை புறக்கோட்டையின் 4 வர்த்தக நிலையங்கள் ஒரே நேரத்தில் சீல் வைக்கப்பட்டன.  வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்கத் தவறியமை, முறையான பற்றுச் சீட்டு மற்றும் வரிவிதிப்பு தொடர்பான ஆவணங்களை  வழங்க தவறியமை போன்ற காரணங்களினாலேயே இந் நிலையங்கள் சீல் வைக்கப்பட்டதாக  அறியமுடிகிறது.

நியாயமான  முறையில் வருமான வரி செலுத்தப்படாமை நாட்டின் அபிவிருத்திக்கு குந்தகத்தை விளைவிக்கும். வரி செலுத்தத் தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சாதாரணம். ஆனால், இது அசாதாரணமானது, திட்டமிட்ட சதி, சிலரின் பழிவாங்கல் காரணமாகவே இந்த வரி அதிகாரிகளின் பாய்ச்சல் இடம்பெற்றுள்ளது என புறக்கோட்டை வர்த்தகர்கள் குமுறுகின்றனர்.

நல்லாட்சி அரசின் 15 வீத பெறுமதி சேர் வரி (vat) விதிப்புக்கெதிராக நாடளாவிய ரீதியில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் கொழும்பு வர்த்தகர்களாலும் கடையடைப்பு போராட்டம் அண்மையில்  முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையங்கள் சீல் வைக்கப்பட்டமை இவ்வர்த்தகர்களின் குரலை நசுக்குவதற்கான கைங்கரியம் என்றே புறக்கோட்டை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
இவ்விடயத்தில் தமிழ்த் தலைமைகள் சம்பந்தப்பட்டுள்ளமை இவ்வர்த்தகர்கள் மத்தியில் பெரிதும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விடயத்தில் நடந்தது என்ன?

அரசால் விதிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி (vat)க்கு எதிரான ஆர்ப்பாட்டம் புறக்கோட்டை வியாபாரிகளால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக கடந்த 8 ஆம் திகதி கடையடைப்பு போராட்டம் நடத்த ஏற்பாடானது. இதற்கு முதல் நாள் இடம்பெற்ற கலந்துரையாடலில் உள்நுழைந்த  அமைச்சர் மனோகணேசன், திகாம்பரம் ஆகியோர் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையும் மீறி ஒருசில கடை உரிமையாளர்களால் குறிப்பிட்ட தினத்தில் கடையடைப்பு போராட்டத்திற்கு தயாராகினர். இதை தடுப்பதற்காக அப்பகுதிக்கு வந்த மனோவும், திகாவும் வர்த்தர்களிடம் காரசாரமாக நடந்துகொண்டுள்ளனர்.  திகாம்பரம் உதிர்த்த வார்த்தைகள் அங்கிருந்தவர்களை வாயடைக்கச் செய்திருக்கிறது. தகாத வார்த்தைகள், அடிதடி என சண்டித்தனத்திற்கு அளவின்றிப் போக அங்கிருந்த இளைஞர்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

யாரும் பயப்படத்  தேவையில்லை. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடந்த அரசாங்கத்தைப் போன்று வெள்ளை வேனெல்லாம் வராது" என மிரட்டாமல் மிரட்டியுள்ளார் மனோ கணேசன்.

எனினும் வர்த்தகர்கள் பின்வாங்கவில்லை. குறித்த வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான நிலையில் திடீரென வருகை தந்த சுங்க அதிகாரிகளால் குறிப்பிட்ட 4 கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்புரைக்கமைய
அவரது நிதித்துறையின் கீழ் இயங்கும் வருமானவரித்துறை அதிகாரிகளே இச்சோதனையை  மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மூன்று-நான்கு நாட்களாக மனோ, திகா, ரவி கருணாநாயக்க என எல்லோரின் அலுவலக வாசல்படிகளிலும் ஏறி இறங்கி நீண்ட  காத்திருப்பு, மன்னிப்பு கோரல் என பலத்த நெருக்கடிக்கு மத்தியில் ஒருவாறு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இவை அனைத்தும் திட்டமிட்ட சதி, இது முழுக்க முழுக்க நல்லாட்சி அரசின் சூழ்ச்சி என அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் பிரதியமைச்சரும் மனோகணேசனின் சகோதரருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செவ்வியில் வற் வரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு இன்று வெள்ளைவேன் வராது என்று கூறுகிறார்கள். ஆனால், வெள்ளை உடையணிந்த வருமானத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் உட்புகுகின்றனர் என முன்னாள் பிரதியமைச்சர் பிரபாகணேசன் கூறியுள்ளார்.

இந் நல்லாட்சி அரசு அடக்குமுறை ஆட்சிக்கு அடியோடு முடிவு கட்டிவிட்டோம். இவ்வாட்சியில் அனைவருக்கும்  பேச்சுரிமை, எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாவற்றிலும் சுதந்திரமாக செயற்பட முடியும் என்றது.  ஆனால் இதே நல்லாட்சி அதிகார வர்க்கம் யாராக இருந்தாலும் அதன் சுயநலத்துக்காக எதையும் செய்யத்துணியும் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது என வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த புறக்கோட்டை வியாபாரிகளின் வாய்க்கும் கடிவாளம் போட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால்,  மறுபுறம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டதை மறந்துவிட்டார்கள்.

தலைவர்கள் என்போர் நமக்காக குரல் கொடுக்க வேண்டும். கொழும்புவாழ் தமிழர்கள் பல சவால்களுக்கு மத்தியில் சிந்தித்து வாக்களித்து தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கிறார்கள், ஆனால், அத்தமிழ் பிரதிநிதிகளே இவ்வாறு அரசின் கைக்கூலிகளாக நடந்து கொண்டிருப்பது                   வேதனைக்குரியது.  வருமானத்துறை அதிகாரிகளின் சோதனை சட்டரீதியானது என்றாலும் அதன் பின்னணியில் சில சதிகாரர்கள் இருக்கிறார்கள் இவையெல்லாம் புறக்கோட்டை வர்த்தகர்களின் ஆதங்கங்கள்.

இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாதிக்கப்பட்ட தரப்பு மீளவில்லை. இது குறித்து வாய்திறக்கவும் தயாரில்லை.

சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டதா?
வருமான வரி அதிகாரிகள் தமது சோதனையின் பின் குறித்த கடைகளுக்கு சீல் வைக்க முடியும். என்றாலும் அதற்கடுத்த நடவடிக்கைகள்
நீதிமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வழக்கறிஞர்கள் கருத்து. ஆனால், இங்கு  சமரசம் என்ற அடிப்படையில் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஆக திடீர் சோதனை வர்த்தகர்களின் வாய்க்கு பூட்டுப்போட மேற்கொள்ப்பட்ட கைங்கரியம் என்ற வர்த்தர்களின் சந்தேகம் இன்னும் வலுவாகிறது.

No comments:

Post a Comment