Wednesday, August 31, 2016

தொண்டமான் பெயரைக் கேட்டாலே அலர்ஜியா இருக்கு!

தொண்டமான்
பெயரைக் கேட்டாலே அலர்ஜியா இருக்கு!

மக்கள் சேவையை முடக்கும் திகா!

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக வெறுமையாக செயலற்று காணப்பட்ட தொண்டமான் கலாசார நிலையத்தின் முன் கடந்த சனிக்கிழமை புதிதாக ஒரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.  அப்பதாகையில் தொண்டமான் கலாசார நிலையம் என்ற பெயர் இறம்பொடை கலாசார நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது. தொண்டமான் என்ற பெயர் முற்றாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


மஹிந்த ஆட்சி பறிக்கப்பட்டு நல்லாட்சி உருவானதோடு மலையக அரசியல் களமும் மாற்றம் பெற்றது. இதற்குப் பின் மலையகத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற திகாம்பரம் தரப்பு நடைமுறையில் இருந்த பல வேலைத் திட்டங்களை தொடராமல் அதன் செயற்பாடுகளை அப்படியே முடக்கி வைத்துள்ளது.

இப்படி செயலிழந்து காணப்படும் நிறுவனங்களில் ஒன்று இந்த தொண்டமான் கலாசார நிலையம். கடந்த ஒரு வருட காலமாக அமைச்சர் திகாம்பரம் இந் நிலையத்தின் பக்கம்கூட திரும்பிப் பார்க்கவில்லை என்பது மேலதிக தகவல்.

பலகோடி பெறுமதியுள்ள இந்நிறுவனம் இப்படி முடங்கிக் கிடப்பதற்கு காரணம் என்ன என தேடிப்பார்த்தால் தொண்டமான் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது, அந்த சரித்திரத்தை மாற்றி செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் எனும்  காரணத்தை முன்வைக்கிறதாம் திகாம்பரம் தரப்பு.
இதற்கமைய தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், தொண்டமான் கலாசார நிலையம், தொண்டமான் விளையாட்டு மைதானம் போன்றவற்றின் பெயர்களையே மாற்ற உத்தேசித்து அதற்கான வேலைத்திட்டத்திலும் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கான மலையக மாணவர்கள் பயனடைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்று நடப்பதோ வேறு.

ஒரு ஆண்டு காலமாக மூடப்பட்டு கிடந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் சேவைகள் கடந்த மார்ச் முதல் பெயரளவில் இயங்கவைக்கப்பட்டுள்ள நிலையில்,  கலாசார நிலையத்தின் சேவைகள் முற்றுமுழுதாக புறம்தள்ளப்பட்டுள்ளது. ஏதோ ஒன்றிரண்டு திருமணங்களுக்காக மண்டபம் வழங்கப்படுகிறது. மற்றப்படி அதன் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

மலையக சமூகத்தை கலைத்துறையில் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொண்டமான் கலாசார நிலையம் வகுப்பறைகள், காரியாலயம், சிற்றுண்டிச்சாலை, மாணவர் மற்றும் ஆசிரியர் தங்கும் விடுதிகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம்  வெறுமையடைந்துள்ளது. சுமார் 14 இலட்சம் பெறுமதியான வாத்தியக் கருவிகள் தீண்டுவார் இன்றி கிடக்கின்றன. செயற்பாடுகள் எதுவும் இன்றி இருக்கும் இந் நிலையத்தில் தற்போது பணியாளர்கள் மட்டும் 10 பேர் கடமையில் இருக்கின்றனர். இவர்களுக்கான சம்பளம் 3 இலட்சம் வரையில் மாதாமாதம் நிலையத்தினூடாக செலுத்தப்படுகிறது. அதாவது எவ்வித பணியும் இன்றி கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களுக்கு அரச பணம் சம்பளமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உண்மையிலேயே தொழிற்படும் நிறுவனத்தை விட தொழிற்பாடற்று இருக்கும் ஒரு பொது நிறுவனத்தை பராமரிப்பது என்பது சாதாரண விடயமல்ல. ஆளாளுக்கு ஆயிரம் வியூகங்கள், கேள்விகள் எழும். இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் நியாயமான காரணங்கள் திகாம்பரம் தரப்பிடம் இல்லை. இதில் கடமையாற்றும் ஊழியர்களைப் பொறுத்தமட்டிலும் கூட இந்நிலையம் தொழிற்பட வேண்டும் என்பதே குறிக்கோள் என்கிறார்கள் இங்குள்ள பணியாளர்கள்.

ஏற்கனவே எல்லாவகையிலும் பின் தங்கியுள்ள ஒரு சமூகத்தின் எழுச்சிக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவது அந்த சமூகத்தை சவக்குழிக்குள் தள்ளுவதற்கு சமம் என்பதை திகாம்பரம் தரப்பு உணர்ந்துகொள்ள வேண்டும்.
காலத்துக்கேற்ப ஆட்சி மாறலாம். அரசியல் அமைப்புகள் மாறலாம். ஏன் அரசியல்வாதிகள் கூட மாறிவிடலாம். ஆனால், எந்த மாற்றத்தினாலும் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சேவைகள், வரப்பிரசாதங்கள் நிறுத்தப்படலாகாது.

இந்நிலை மலையக அரசியல் களத்திலும் சரி அரசியல்வாதிகளிடத்திலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது. காலங்காலமாக ஒரு சுமுகமான அரசியல் சூழ்நிலை இங்கு உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், சூரியவேவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் இப்படி முன்னாள் ஜனாதிபதி பெயர்களில் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனங்கள், கட்டிடங்களின் பெயர்களை மாற்றாத நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் திகாம்பரம் இப்படி தனியொருவர் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியில் மொத்த மலையக சமூகத்தையும் பலிகடாவாக்குவதை இயலாமை என்பதா? துரோகம் என்பதா?

No comments:

Post a Comment