Saturday, September 3, 2016

வத்தளையில் தமிழ் பாடசாலை

வத்தளையில் தமிழ்  பாடசாலை அமைவது
யாருக்கு பிடிக்கவில்லை?

அன்று அடிக்கல் நாட்டப்பட்டது கலாசார மண்டபத்திற்கோ கட்சிக்காரியாலயத்திற்கோ இந்து ஆலயத்திற்கோ அல்ல. இந்த நாட்டின் உயர்வுக்கு வழிவகுக்கப்போகும் கல்வியகத்திற்கு. அதையும் இனவாத, மதவாத, அரசியல்வாத சக்திகள் எதிர்த்து முழக்கமிட்டிருக்கின்றன.
வத்தளையில் தமிழ்ப் பாடசாலை அமையவேண்டும் என்பது இன்று அல்லது நேற்றைய முயற்சியல்ல. 25 வருடகால தவம். இந்த கடுந்தவத்திற்கு வரம் கிடைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளின் கேவலமான நடவடிக்கைகள்தான் வத்தளையில்   அரங்கேறியிருக்கிறன.

தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், கருத்துக்களை தெரிவிக்கிறார்கள், விரும்பிய தொழில் செய்கிறார்கள். இதற்குமேல் என்ன தேவை இருந்துவிடப்போகிறது? அவர்களுக்கு என்ன குறை இருக்கிறது? இதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணம்.

ஆனால், தமிழர்களுக்கு எதிரான இனவாதம் இன்னும் பலரிடத்தில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும்  அமையும் போது அதன் கோர முகம் வெளிப்பட்டுவிடுகிறது.
வத்தளையைப் பொறுத்தவரையில் நடுத்தர வர்க்க குடும்பங்களே பெரும்பாலும் வாழ்கின்றனர். சாதாரணமாக கடைகளில், காரியாலயங்களில் வேலை செய்வோர் மட்டுமன்றி  தினக்கூலிகள் கூட இருக்கின்றனர். இவர்கள் தம் பிள்ளைகளின் கல்விக்காக சுகங்களையெல்லாம்
விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள். ஆனால், இங்குள்ள பிள்ளைகள்  கற்பதற்கான ஒரு தமிழ்ப் பாடசாலை இங்கே
கிடையாது.

இங்கு வாழ்பவர்கள் தனியார் பாடசாலைகளை நாடும் அளவுக்கு பண வலிமை படைத்தவர்களும் அல்ல.  கொழும்பு பகுதியில் உள்ள அரச பாடசாலைகள் கூட இப்பகுதி மாணவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும்  நன்கொடை என்ற பெயரில் இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. இந்த இக்கட்டுகளை களையும் நோக்கில் பலரின் கூட்டு முயற்சியில் உருவானதே வத்தளை தமிழ்ப் பாடசாலைத் திட்டம்.

அமரர் சந்திரசேகரனின் முதல் முயற்சிக்குப் பின் பல தடவைகள் பலரால் ஏற்பாடு செய்யப்பட்டு முடியாமல் போன  அடிக்கல் நாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவாறு நடந்து முடிந்திருக்கிறது.

கடந்த 28ஆம் திகதி அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் மற்றும் பலரின் கூட்டு முயற்சியில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒரு வழியாக நடந்து முடிந்திருந்தாலும் இது சாதாரணமாக இடம்பெற்றுவிடவில்லை.
நிகழ்வு ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அங்கு திரண்ட  பௌத்த மதகுருமார்கள் சிங்கள மக்கள் வாழும் இச்சூழலில் தமிழ்ப் பாடசாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பை வெளியிட்டனர். அதுமட்டுமல்ல அப்பகுதியில் கூடிய பெரும்பான்மை இனத்தவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினர்.

அங்கிருந்த பதாகைகளை கிழித்தெறிந்து, பெயர்ப்பலகைகளை எரித்து அட்டகாசம் செய்ததோடு, அடிக்கல் நாட்ட வந்த அமைச்சர் ஜோன் அமரதுங்கவையும் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து கல்வீச்சி ஹு......ஹு.... சத்தமிட்டு அந்த இடத்தையே  களேபரமாக்கினர்.

இது சிங்களவர்கள் வாழும் பிரதேசம். இங்கு தமிழ்ப் பாடசாலை அமைக்கக்கூடாது என்பதே அவர்களின் எதிர்ப்பு கோஷத்திற்கு காரணம். இங்கே பாடசாலை அமைத்தால் அருகிலுள்ள மைதானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் தமது பிரதேச பிள்ளைகள் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் போய்விடும் என்று அதற்கு காரணமும் சொல்கிறார்கள்.
வெறும் அடிக்கல் நாட்டு விழாவுக்கே இத்தனை அட்டகாசம் என்றால்  தொடர்ந்து கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் வத்தளை தமிழர்கள்.

வத்தளை தமிழ்ப் பாடசாலைக்காக அயராது பாடுபட்டு பல காரியாலயங்களை முன்னெடுத்து பல வருடம் காத்திருந்து அடிக்கல் நாட்டுவது வரை பணியாற்றிய  முன்னாள் நகரசபை உறுப்பினர் விஜேகுமார் இந்தச் சம்பவம் பற்றி குறிப்பிடுகையில்;
இது வேண்டுமென்றே சிலர் ஏற்படுத்திய குழப்பம். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் இப்பகுதியைச் சேர்ந்தவர்களே அல்ல. பேலியகொட, தொட்டலங்க போன்ற பகுதிகளிலிருந்து பணம், மதுபான போத்தல்களுக்காக இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள். இப்பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சிலர் இங்கு பாடசாலை அமைந்தால் தம்மால் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதனாலேயே இவ்வாறு அற்ப சலுகைகளை காட்டி கூட்டத்தைக் கூட்டி குழப்பம் விளைவிக்கின்றனர். இதற்கு இங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் சிலரும் ஒத்தூதுகின்றனர். என்ன நடந்தாலும், யார் குழப்பம் விளைவித்தாலும் ஏன் உயிரே போனாலும் வத்தளையில் தமிழ்ப்பாடசாலை அமைத்தே தீருவோம் என்கிறார்.

குறித்த தமிழ்ப் பாடசாலை கட்டப்படுவதன் நோக்கம் இடத்தையோ இருப்பையோ கைப்பற்றுவது அல்ல. சாதாரண மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்குவது என்பதை இனத்துவேசம் காட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து இவ்விடயத்தில் இனவாதத்தை புகுத்தி ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்துவதும் முட்டுக்கட்டை போடுவதும் ஆக்கபூர்வமானதல்ல.

ஜனாதிபதி - பிரதமர் மௌனம்!
வத்தளை சம்பவத்தை ஒரு சிலரின் இனவாத நடவடிக்கை என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது. தமிழர்களின் பிரச்சினையை அரசாங்கம் அது நல்லாட்சியாக இருந்தாலும் எப்படி அணுகுகிறது என்பதற்கு உதாரணமாகவும் கொள்ள முடியும். தலைநகரை அண்மித்த பகுதியில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருந்தாலும் அதுகுறித்த நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ ஏன் பொறுப்புவாய்ந்த பெரும்பான்மை இன அமைச்சர்களோ கண்டனம் மட்டுமல்ல ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை.

இது ஒரு புறமிருக்க சில தமிழ்த்தலைமைகள் இந்தச் சம்பவம் குறித்து வெளியிடும் அறிக்கைகளும் நிகழ்ந்த அநீதிக்கு எதிரான குரலாக இல்லை. மாறாக அவர்கள் எந்த அளவுக்கு காழ்ப்புணர்
வோடும் சமூக அக்கறை இல்லாமலும் இருக்கிறார்கள் என்பதன் சாட்சியாக இருக்கிறது.

மனம் மகிழும் மனோவும்
திகா கூட்டணியும்!
 இந்த சம்பவம் குறித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோகணேசன், அமைச்சர் திகாம்பரம் ஆகியோரின் அறிக்கைகள் ஒப்புக்கு கண்டன அறிக்கைகளாக இருந்தாலும் அறிக்கையின் சாராம்சம் அவர்களின் காழ்ப்புணர்வாகவே வெளிப்படுகிறது. ஒன்றிரண்டு வரிகளில் கண்டனம் தெரிவித்துவிட்டு அதன்பின் பாடசாலை அமைக்க பாடுபட்டவர்களை காரசாரமாக விமர்சித்து நீள்கின்றன. ஆக இவர்கள் நடந்த சம்பவத்தையிட்டு உள்ளூர மகிழ்கிறார்களா என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாததாகிறது.

ஆக, இனவாதம், அரசியல் போட்டி, சமூக அக்கறையின்மை எல்லாமாகச் சேர்ந்து வத்தளை மாணவர்களின் கல்விக்கும் எதிர்காலத்திற்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment