Thursday, August 17, 2017

single working women’s day

சாதிக்க துடிக்கும் பெண்களை தட்டிக் கொடுப்போம்...


ஒரு ஆண் தான் சாதிக்க நினைக்கும் துறையில் தனக்கான முத்திரை பதிப்பதற்காக திருமணத்தை தாமதமாக செய்ய எண்ணும்போது அவர் முதுகில் தட்டிக் கொடுக்கும் சமூகம், அதுவே ஒரு பெண் நினைக்கும்போது அவளை ஊக்கப்படுத்துவதில்லை. சமூகத்தில் ஒரு பெண் உயர வேண்டுமானால் குடும்பம், சமூகம், தொழில் தளம் என பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஆண்களை விட பலமடங்கு போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு வெளியுலகத்தில் தரக்குறைவான விமர்சனங்களுக்கும் குறையில்லை.

இத்தகைய பெண்களை ஊக்கப்படுத்தவும் போற்றி கௌரவிக்கவும் 2006 ஆம் ஆண்டு உருவானதுதான் single working women’s day. 
சிகாகோவைச் சேர்ந்த பார்பரா பெயின் , சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக யாருடைய துணையும் இன்றி சுயமாக வேலைப் பார்த்துவருபவர். இவரின் சிந்தனையில் உருவானதுதான் இத்தினம். இதற்கெனவே Single Working Women      Affiliate Network (SWWAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒகஸ்ட் 4ஆம் திகதியை working women’s day எனவும், தொடரும் அந்த வாரம் முழுவதையும் single working women’s week எனவும் ஏற்படுத்தினார்.

பெண்களுக்காக எத்தனையோ விழிப்புணர்வு தினங்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு விழிப்புணர்வு தினத்துக்குப் பின்னாலும் ஒரு பூதாகரமான பிரச்சினை இருக்கவே செய்கின்றது. கொண்டாட்டங்கள், வாழ்த்து அட்டைகள், வாழ்த்துக் கவிதைகளோடு கடந்து போகும் தினங்களைத் தவிர வேறு எந்தவொரு தினம் பற்றியோ அதன் முக்கியத்துவம் குறித்தோ நாம் சிந்திப்பதில்லை. அப்படித்தான் single working women’s week வாரத்தையும் கடந்துவிட்டோம்.

இதற்கென ஒரு தினம் கொண்டாட வேண்டுமா என்ற எண்ணம் சிங்கிள் பெண்களுக்கே தோன்றலாம். உலகம் இத்தனை நவீனத்தை கண்டுவிட்டபோதும் ஒரு பெண் தனித்து வாழ்வது என்பது அத்தனை எளிதல்ல. அதுவே அவர்கள் வேலைக்குச்செல்பவர்கள் என்றால் இரட்டைச்சுமை. இதில் தான் விரும்பிய துறையில் சாதனை படைக்க வேண்டுமென்ற  இலட்சியத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் மட்டுமல்ல திருமணமாகி வேலை நிமித்தம் வெளியில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள், கணவனை இழந்தவர்கள் இப்படி அனைத்து தரப்பும் அடங்கும்.

ஒரு ஆணால் இவ்வுலகில் தனித்து வாழ முடியும் போது ஒரு பெண்ணால் சுயமாக தன் உழைப்பில் தனித்து வாழ முடியவில்லை. பெரும்பாலும் தனித்து வாழ்பவர்கள் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். குறிப்பாக விவாகரத்தான ஒரு ஆண் ஒரு இடத்தில் தொழில் செய்வதற்கும் விவாகரத்தான அல்லது கணவனை இழந்த ஒரு பெண் அந்த இடத்தில் தொழில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொழிலில், ஊதியத்தில் வித்தியாசம் இல்லை. சுற்றியுள்ளவர்களின் பார்வையில் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
இவற்றையெல்லாம் விட நம் சமூகத்தில் சாதாரண விழாக்கள் முதற்கொண்டு வீட்டு விசேஷங்கள் வரை தனித்து வாழும் பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் ஏதோ தீண்டத்தகாதவர்கள் போலவே பார்க்கப்படுகின்றனர். மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அஞ்சி சுயத்தை இழந்து நடைப்பிணமாக சுற்றுபவர்களும் நம் முன் இல்லாமல் இல்லை. இதை இல்லாதொழித்து தனித்து வாழும் ஆண்களுக்கு நிகராக ஏதோவொரு காரணத்திற்காக தனித்து வாழும் பெண்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கம்.

இத்தினத்தை ஏனைய தினங்கள் போன்று பிரம்மாண்டமான விழாக்களாக கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன்னம்பிக்கையும் சுயமாக வாழ நினைக்கும் பெண்களை மனதார போற்றி அவர்களின் தன்னம்பிக்கையை தளர்க்காமல் வார்த்தைகளால் வதைக்காமல் இருந்தாலே போதும்.

No comments:

Post a Comment