Thursday, August 17, 2017

single working women’s day

சாதிக்க துடிக்கும் பெண்களை தட்டிக் கொடுப்போம்...


ஒரு ஆண் தான் சாதிக்க நினைக்கும் துறையில் தனக்கான முத்திரை பதிப்பதற்காக திருமணத்தை தாமதமாக செய்ய எண்ணும்போது அவர் முதுகில் தட்டிக் கொடுக்கும் சமூகம், அதுவே ஒரு பெண் நினைக்கும்போது அவளை ஊக்கப்படுத்துவதில்லை. சமூகத்தில் ஒரு பெண் உயர வேண்டுமானால் குடும்பம், சமூகம், தொழில் தளம் என பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஆண்களை விட பலமடங்கு போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு வெளியுலகத்தில் தரக்குறைவான விமர்சனங்களுக்கும் குறையில்லை.

இத்தகைய பெண்களை ஊக்கப்படுத்தவும் போற்றி கௌரவிக்கவும் 2006 ஆம் ஆண்டு உருவானதுதான் single working women’s day. 
சிகாகோவைச் சேர்ந்த பார்பரா பெயின் , சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக யாருடைய துணையும் இன்றி சுயமாக வேலைப் பார்த்துவருபவர். இவரின் சிந்தனையில் உருவானதுதான் இத்தினம். இதற்கெனவே Single Working Women      Affiliate Network (SWWAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒகஸ்ட் 4ஆம் திகதியை working women’s day எனவும், தொடரும் அந்த வாரம் முழுவதையும் single working women’s week எனவும் ஏற்படுத்தினார்.

பெண்களுக்காக எத்தனையோ விழிப்புணர்வு தினங்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு விழிப்புணர்வு தினத்துக்குப் பின்னாலும் ஒரு பூதாகரமான பிரச்சினை இருக்கவே செய்கின்றது. கொண்டாட்டங்கள், வாழ்த்து அட்டைகள், வாழ்த்துக் கவிதைகளோடு கடந்து போகும் தினங்களைத் தவிர வேறு எந்தவொரு தினம் பற்றியோ அதன் முக்கியத்துவம் குறித்தோ நாம் சிந்திப்பதில்லை. அப்படித்தான் single working women’s week வாரத்தையும் கடந்துவிட்டோம்.

இதற்கென ஒரு தினம் கொண்டாட வேண்டுமா என்ற எண்ணம் சிங்கிள் பெண்களுக்கே தோன்றலாம். உலகம் இத்தனை நவீனத்தை கண்டுவிட்டபோதும் ஒரு பெண் தனித்து வாழ்வது என்பது அத்தனை எளிதல்ல. அதுவே அவர்கள் வேலைக்குச்செல்பவர்கள் என்றால் இரட்டைச்சுமை. இதில் தான் விரும்பிய துறையில் சாதனை படைக்க வேண்டுமென்ற  இலட்சியத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் மட்டுமல்ல திருமணமாகி வேலை நிமித்தம் வெளியில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள், கணவனை இழந்தவர்கள் இப்படி அனைத்து தரப்பும் அடங்கும்.

ஒரு ஆணால் இவ்வுலகில் தனித்து வாழ முடியும் போது ஒரு பெண்ணால் சுயமாக தன் உழைப்பில் தனித்து வாழ முடியவில்லை. பெரும்பாலும் தனித்து வாழ்பவர்கள் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். குறிப்பாக விவாகரத்தான ஒரு ஆண் ஒரு இடத்தில் தொழில் செய்வதற்கும் விவாகரத்தான அல்லது கணவனை இழந்த ஒரு பெண் அந்த இடத்தில் தொழில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொழிலில், ஊதியத்தில் வித்தியாசம் இல்லை. சுற்றியுள்ளவர்களின் பார்வையில் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
இவற்றையெல்லாம் விட நம் சமூகத்தில் சாதாரண விழாக்கள் முதற்கொண்டு வீட்டு விசேஷங்கள் வரை தனித்து வாழும் பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் ஏதோ தீண்டத்தகாதவர்கள் போலவே பார்க்கப்படுகின்றனர். மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அஞ்சி சுயத்தை இழந்து நடைப்பிணமாக சுற்றுபவர்களும் நம் முன் இல்லாமல் இல்லை. இதை இல்லாதொழித்து தனித்து வாழும் ஆண்களுக்கு நிகராக ஏதோவொரு காரணத்திற்காக தனித்து வாழும் பெண்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கம்.

இத்தினத்தை ஏனைய தினங்கள் போன்று பிரம்மாண்டமான விழாக்களாக கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன்னம்பிக்கையும் சுயமாக வாழ நினைக்கும் பெண்களை மனதார போற்றி அவர்களின் தன்னம்பிக்கையை தளர்க்காமல் வார்த்தைகளால் வதைக்காமல் இருந்தாலே போதும்.

Thursday, May 25, 2017

கந்தப்பளை கொடூரம் ...


கந்தப்பளை சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்போகும் தீர்ப்பு ஒன்றே அப்பகுதியில் மட்டுமல்ல நாடு முழுதும் பாலியல் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் ஆராத ரணத்திற்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

தேர்த்திருவிழாவிற்கு சென்ற 16 வயது சிறுமி மறுநாள் வாழைத் தோப்புக்குள் கிழிந்த நாராகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெண் பிள்ளைகளைப் பெற்ற அத்தனை பெற்றோரையும் நிலைகுலையச் செய்துள்ளது.

கந்தப்பளை பார்க் தோட்ட ஆலயத்தன் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 10ஆம் திகதி  இடம்பெற்றது. இரவு ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர்  இந்தியப் பிரதமர் மோடியின் வருகையால் கந்நப்பளை நகருக்கு 11ஆம் திகதி மதியமே வந்து சேர்ந்தது. இந்நிலையில்  மது, போதை வஸ்துக்களை பாவித்து சிலர் திருவிழாவில் குழப்பம் விளைவிக்க மக்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த குழப்பத்தில் மாமியுடன் நின்றிருந்த குறித்த சிறுமி காணமால் போக, இரவு முழுதும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. மறுநாள் மாலை கந்தப்பளை காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள குடியிறுப்பொன்றின் தோட்டத்தில் வாழைப் புதறுக்குள் இருந்து மீட்கப்பட்டாள்.

இச்சம்பவத்துடன் தொடர்புடயவர்கள் என்ற சந்தேகத்தின் பேரின் மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இன்னும் இருவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்ற வகையில் மீனாட்சி அம்மாள் மலையக மகளிர் அமைப்பு மும்முரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்வமைப்பினருக்கு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி ்கடந்த 11ஆம் திகதி பி.ப 5 மணியளவில் கந்தப்பளை நகரின் தேர் திருவிழா இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் சிலருக்கு மத்தியில் நடைபெற்ற கலகலப்பில் மக்கள் சிதறி ஓடினர். நானும் பயத்தில் என் மாமியின் கையை விட்டு ஓடினேன். யாரோ  என் கைகளை பின்னால் வலைத்து துணியால் வாயை மூடி முச்சக்கர வண்டியில் ஏற்றினார்கள். கொன்கோர்டியா காட்டுப்பகுதிக்குள் அழைத்து செல்லும் போதுதான் என் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் கிளி என்றழைக்கப்படும் கமலதாசன்தான் என்னைத் தூக்கி வந்தது என்பதை அறிந்தேன். கமலதாசன் அவருடைய நண்பர்கள் இருவர், ஆட்டோ சாரதி சேர்ந்து காட்டுப்பகுதியில் என் கைகளை மட்டும் அவிழ்த்துவிட்டு ஓடவிட்டார்கள். பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. வாய் கட்டியவாறே ஓடினேன். அவர்கள் இடைக்கிடை வழிமறித்து அடித்தார்கள். உடைகளை கிழித்தார்கள். துஷ்பிரயோகம் செய்தார்கள். என்னால் எதிர்த்து போராட முடியவில்லை. இருட்டும் வரை காட்டிலேயே வைத்திருந்து இருட்டியதும் ஒரு பள்ளத்தில் இழுத்துச் சென்றார்கள். அங்கு யாரும் இல்லாத வீடொன்றில் என்னை அடைத்து வ்தைதார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து என்னை அடித்து ஒரு உடையை கொடுத்து உடுத்த சொன்னாள்.
பிறகு கிளி என்பவர் என் கழுத்தில் கத்தியை வைத்து யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன் மிரட்டிவிட்டு விடியும் வரை என் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். விடிந்ததும் அந்த குடிசை வீட்டுக்கு அருகிலுள்ள வாழைமரப் புதருக்குள் மண்டியிடச் செய்துவிட்டுச் சென்றார்கள். பொலிஸாருடன் அம்மா, அப்பா வரும் வரை மாலை 4 மணி வரை அங்கேயே கிடந்தேன். இதற்குப் பதில் அவர்கள் என்னை அங்கேயே கொன்றிருக்கலாம்ீீ எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறுமியோடு சேர்த்து நான்கு பெண் பிள்ளைகள். மூத்தவள் திருமணம் முடித்துச் சென்றுவிட குறித்த பிள்ளை பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு கொழும்பில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். திருவிழாவுக்காக சொந்த ஊருக்குச் சென்ற இச் சிறுமிக்கே இந்த பரிதாப நிலை.

சம்பவ    தினதன்று பி.ப. 3.30 மணியளவில் தேர் பவணி முடியும் முன் என் தம்பி மணைவியிடம் மகளை விட்டுவிட்டு கடைசி பிள்ளைகள் இருவரையும் கூட்டி கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒரு 5 மணி இருக்கும் மைத்துணி வந்து மகளை காணவில்லை என்றாள். சுற்று வட்டாரமெல்லாம் தேடினோம். எங்கும் மகளைக் காணாததால் கந்தப்பளை பொலிஸுக்கு ஓடினோம். இரவு முழுதும் தேடிப்பாருங்கள் கிடைக்காவிட்டால் காலையில் வாருங்கள். முறைப்பாடு பதிவு செய்யலாம் என்றார்கள். நாங்களும் இரவு 2 மணி வரை தேடியும் கிடைக்காததால் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். மாலை 3 மணியளவில் என் கணவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ்உங்களது மகள் கொங்கோடியாவில் திருட்டு சங்கர் என்பவனின் தோட்டத்து வாழைமர தூரில் கிடக்கின்றால் முடிந்தால் காப்பாற்றிகொள்ளுங்கள்ீீ என்றார்கள். பதரி அடித்துக்கொண்டு பொலிஸுக்குச் சென்றோம். பொலிஸாரோடு அங்கு சென்று பார்க்கையில் ஒருவன் குடி மயக்கத்தில் வாசலில் விழுந்து கிடந்தான். பக்கத்தில் புறா அனத்துவது போல் சத்தம் கேட்டது. ஐயோ... என் மகள்தான் என கத்திக்கொண்டு என் கணவர் மகளை தூக்கி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்ீீ என தனக்குத் தெரிந்தவற்றை கண்ணீரில் கரைக்கிறார் சிறுமியின் தாய்.

இவ்விடயத்தில் பொலிஸார் முன்மாதிரியாக முதல்நாளே முறைப்பாடை ஏற்று தேடியிருந்தால் இப்படியொரு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம். அல்லது குற்றவாளிகள் அப்போதே கைது செய்யப்பட்டிருக்கலாம். பொலிஸாரின் அசமந்தம் 16 வயது சிறுமியின் வாழ்க்கையையே சீரழித்திருக்கிறது. உயிர் பிரிந்தால் மட்டுமே கொதித்து எழும் எம் சமூகம் இப்படியான சம்பவங்களின் போது மௌனித்திருப்பதுதான் குற்றவாளிகளுக்கு சாதகமாகின்றது. அதேநேரம் சட்டமும் சாட்சியங்களை மட்டுமே நம்பியிருப்பதால் இப்படிப்பட்ட கயவர்கள் வெகு விரைவிலேயே வெளியில் வந்து சுதந்திரமாக நடமாட நேரிடுகின்றது. ஆக இவ்விடயத்தில் சட்டமும் சமூகமும் பொறுப்புணர்வோடு செயற்பட்டு துரித கதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.